ஜோன் ஆப் ஆர்க்
பிரான்ஸ் நாட்டில் லோரெய்ன் மாநிலத்தில் ஜாக்கப் டி ஆர்க் என்ற ஒரு கிராமவாசி வசித்து வந்தான். அவனுக்கு ஜோன் ஆப் ஆர்க் என்ற ஒரு மகள் இருந்தாள். இந்தக் கதை நிகழ்ந்த போது, அவள் இருபது வயதான மங்கை. அவள் குழந்தைப் பருவத்திலிருந்தே தனிமையாக வாழ்ந்து வந்தாள். ஆடுமாடுகளை மேய்த்துக்கொண்டு இருக்கும் போது நாள் முழுதும்கூட ஒரு மனிதரையும் பார்க்காமலும், ஒரு குரலும் கேட்காமலும் அவள் இருக்க நேரிடும். அந்த கிராமத்திலிருந்த சிறிய, சற்று இருள் கவிந்த கோவிலில் மணிக்கணக்கில் அவள் வழிபாடாற்றுவாள். அங்ஙனம் வழிபடும்போது கோவிலுள் தெளிவாக புலனாகாத சில உருவங்களைக் கண்டதாக அவள் எண்ணினாள். அவை அவளுடன் பேசியதாகவும் அவளுக்குத் தோன்றியது. அந்த கிராமத்தினரும், ஜோன் பல புதிய விசித்திர காட்சிகளைக் காண்பதாகவும் தேவதைகளும் ஆவிகளும் அவளுடன் பேசுவதாகவும் தங்களுக்குள் இரகசியமாகப் பேசிக்கொண்டனர்.
ஒரு நாள்,ஜோன், தான் ஒரு புது குரலொலியைக் கேட்டதாகவும், அது அவளை டாவ் பின் னுக்கு உதவச் செல்லும்படியும் கூறியதாகத் தந்தையிடம் சொன்னாள். அவள் அனேகமாக எப்போதும் அது போன்ற குரலொலியை கோவில் மணிகள் அடிக்கும்போது கேட்டு வந்தாள்.
இத்தகைய புதியனவான காட்சிகளையும் குரலொலியையும் அவள் உண்மை என்றே நம்பினாள். ஆனால் அவளது தந்தையாரோ, “ நான் உனக்கு ஒன்று சொல்கிறேன் ! ஜோன்! இது எல்லாம் வெறும் மாயத்தோற்றம். உன்னை அன்போடு கவனித்துக் கொள்ள ஒரு கணவனை மணந்துகொள்.” என்று அறிவுறுத்தினார். ஆனால் ஜோன் அவரை மறுத்து, “நான் திருமணம் செய்துக் கொள்ளப் போவதில்லை, டாவ் பின்னுக்கு உதவுவதற்காகச் செல்லப்போகிறேன்” என்று உறுதியாக இருந்தாள்.
ஒரு நாள் திட்டமிட்டபடி தன் மாமாவைத் துணையாகக்கொண்டு தன்னை டாவ்
பினிடம் அழைத்துச்செல்லக் கூடிய பௌத்ரிகோர்ட் என்ற ப்ரபுவைக் காணப் புறப்பட்டு விட்டாள். அவர் வீட்டை அடைய அவர்கள் நெடுந்தொலைவு பயணம் செய்ய வேண்டி நேர்ந்தது. அந்த பிரபுவின் வீட்டு வாயிலில் இருந்த காவல்காரன் ஒரு எளிய குடியானவப்பெண் அவரைப்பார்க்க விரும்புவதாக உள்ளே தன் தலைவரிடம் சென்று சொன்னான். முதலில் அவர்களை பார்க்க மறுத்துவிட்ட அவர், மறுநொடியே தன் மனத்தை மாற்றிக்கொண்டு அவளை அழைத்து வரச்சொன்னார். பற்பல கேள்விகளை அவரிடம் கேட்டார். பிறகு டாவ்பின் இருக்கும் சின்னான் என்ற ஊருக்கு அவளை அனுப்ப முனைந்தார் அதன்படி ஒரு குதிரையை வரவழைத்து அதில் ஜோனை ஏற்றினார். அவளது கையில் ஒரு கத்தியும் தரப்பெற்றது. இரண்டு வீரர்கள் அவளோடு சின்னானுக்குச் செல்ல ஏவப்பட்டனர். ஜோன், ஆண் உடைகளை அணிந்து கொண்டாள். கத்தியையும் எடுத்துக்கொண்டாள். குதிரை மேலேறி அமர்ந்துத் துணையாக வந்த இருவரோடு பயணமானாள்.
சின்னான் ஊரை அவள் அடைந்து டாவ்பின்னைப் பார்த்துப் பேசினாள். ஜோன், கடவுள் அவனுடைய எதிரிகளை வீழ்த்தும்படியும் ரெய்ம்ஸ் தலைநகரில் அவனுக்கு முடி சூட்டும் படியும் கட்டளையிட்டதாக அவனிடம் கூறினாள். டாவ் பின் குருமார்களோடும் அறிஞர்களோடும் கலந்து பேசினாள். அவர்கள் ஜோனைப் பல கேள்விகள் கேட்டனர். பிறகு அவள் சில ஆன்மீக சக்திகளைப் பெற்றுள்ளார் என்று தேர்ந்தனர்.
மறுபடியும் குதிரை மேலேறி ஜோன், அர்லியன்ஸ் என்ற ஊரைச் சேர்ந்தாள். படைத்துறைக்கான பளபளக்கும் வென்ணிற ஆடை அணிந்து தோல்வாரில் சொருகிய நீண்ட போர்க்கத்தியுடன், கையில் வெள்ளை வண்ணக்கொடி பிடித்துக்கொண்டு வெண்மை நிற போர்க்குதிரை மீது அமர்ந்து அவள் சென்றாள். அவளைப் பின் தொடர்ந்து ஒரு பெரும்படை வந்தது. நகரத்தில் அகப்பட்டுள்ளவர்களுக்காக உணவும் எடுத்துச்சென்றனர் அந்தப் படையினர். அப்போது ஒரு ஆங்கில இராணுவம் ஆர்லியன்ஸ் நகரை முற்றுகையிட்டிருந்தது.
மதில் சுவர் மேலிருந்த மக்கள் அவளைக் கண்டுவிட்டனர். மகிழ்ச்சியான ஆரவார ஒலி எழுப்பினர். “அந்த பெண்மணி வந்து விட்டாள். அவள் நம்மைக் காப்பாற்றி விடுவாள்” என்று கூவினர். இந்த கூச்சலும் கம்பீரமாகத் துணிவோடு வந்த அந்தப் பெண்ணின் தோற்றமும் ஆங்கிலேயர்களை அச்சம் கொள்ள வைத்தது. ஆங்கிலேயர் காத்து நின்ற எல்லையைக் கடந்து பிரெஞ்சு வீரர்கள் ஆர்லியன்ஸ் நகரில் நுழைந்தனர்.
அப்போதிலிருந்து ஜோன், “ஆர்லியன்ஸ் பெண்மணி” என்று அழைக்கப் பெறலானாள். ஆர்லியன்ஸ் நகரில் சில நாட்கள் தங்கிய பிறகு ஒரு நாள் பிரெஞ்ச் படையினரை முற்றுகையிட்ட ஆங்கிலேயர்களுக்கு எதிரில் தன போர் குதிரையைச் செலுத்தினாள். அவர்களோடு கடும்போர் செய்து அவர்களைத் தோற்கடித்து விரட்டினாள். அதன்பிறகு பல இடங்களில் நடந்த பல போர்களில் அவள் பிரெஞ்சு படையினரை நடத்திச் சென்று ஆங்கிலேயரை விரட்டியடித்தாள்.
இறுதியாக ஆர்லியன்ஸ் பெண்மணியும் டாவ்பின்னும் ரெய்ம்ஸ் நகருக்கு வந்தனர். நகரத்தில் இருந்த பெரிய கோவில் ஒன்றில் டாவ்பின் முடிசூட்டிக்கொண்டு அன்று முதல் ஏழாம் சார்லஸ் என்று அழைக்கப் பட்டான். பின்னர் ஆர்லியன்ஸ் பெண்மணி அரசன் முன் மண்டியிட்டு வணங்கி தாழ்மையுடன், “என் கடமையை முடித்து விட்டேன். என் வீட்டுக்குத் திரும்பிப்போகும் எண்ணத்தில் தங்களிடமும் நான் கேட்கிறேன்”. என்று கேட்டாள். ஆனால் அரசன் அவளை அங்ஙனம் அனுப்பிவிட விரும்பவில்லை. அவளிடம் சிறந்த ஊழியத்தை அவன் நாடியிருந்தான்.
அதனால் ஆடு மாடு மேய்ப்பவளாக ஓர் எளிய வாழ்க்கை வாழ ஜோன் கிராமத்துக்குத் திரும்பவில்லை. அரசனுக்கு உதவுவதிலேயே அவள் எஞ்சிய நாட்களை கழித்தான். ஆன்மீக சிந்தனை, தன்னலமற்ற தன்மை, அடக்கமான பண்பு இவற்றுடன் அமைதியாக வாழ்ந்தாள். இறுதியில் ஒரு நாள் அவள் ஆங்கிலேயர்கைகளில் சிக்கி விட்டாள். அவர்கள் அவளை உயிரோடு எரித்து விட்டனர். அவள் உடலைத்தான் எரித்தனரே தவிர அவளது சேவை புரியும் சக்தியை அவர்களால் அழிக்கமுடியவில்லை. அவளுடைய நாட்டுப்பற்றும் தலைமைப் பொறுப்பும் நீண்ட நாட்களுக்கு பிரஞ்சு நாட்டினருக்கு வழிகாட்டிவந்தன. சிறுகச்சிறுக பிரஞ்சு நாட்டினர் ஆங்கிலேயரை பிரான்ஸை விட்டு அடியோடு விரட்டி விட்டு முழுமையான விடுதலைப் பெற்றுத் திகழ்ந்தனர்
கேள்விகள்:
- தான் கேட்ட குரலைப் பற்றி ஜோன் என்ன நினைத்தாள்?
- டாவ் பின் அதற்கு என்ன செய்தான்?
- டாவ் பின் சபைக்கு அவளை யார் அனுப்பியது?
- ஆர்லியன்ஸ் பெண்மணி என்று ஏன் அழைக்கப்பெற்றாள்?
- டாவ்பின்னுக்கு அவள் எங்ஙனம் உதவினாள்?
- ஜோனுக்கு இறுதியில் என்ன நேர்ந்தது?