லூயி பாஸ்டர்
சிறுவன் ஒருவன் கொல்லன் பட்டறை முன்பு நின்றுக்கொண்டு அச்சத்தோடும், பரிதாபத்தோடும் உள்ளே நடந்து கொண்டிருந்த பயங்கர நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். வெறி நாய் ஒன்றினால் கடிக்கப்பட்ட ஒருவனை இரும்புக் கொல்லனிடம் அழைத்து வந்திருந்தார்கள் அந்த இரும்பு கொல்லன், கனமான ஒரு இரும்புக் கம்பியை நெருப்பிலிட்டு சிவப்பாகும்வரை பழுக்கக்காய்ச்சி கொண்டிருந்தான். அவனுக்கு உதவி புரிபவர்கள், நாய் கடித்த மனிதனைத் தரையில் ஊன்றி பிடித்துக்கொள்ள இரும்புக் கொல்லன் பழுக்கக்காய்ச்சிய இரும்புக்கம்பியினால் நாய் கடித்த காயத்தில் சூடு போட்டான், சூடுண்ட மனிதன் வலி தாங்காமல் வீரிட்டு கத்தினான்.பிறகு முனகக்கூட இயலாது களைத்து நினைவிழந்து போனான்.
1833-ம் ஆண்டில் நடந்தது அது. அந்த நிகழ்ச்சியைக் கண்ணுற்ற சிறுவன் லூயி பாஸ்ட்சர். அவர் தோல் பதனிடும் ஜீன் ஜோஸப் பாஸ்ட்சர் என்பவரின் மகன். வெறி நாய் கடித்தால் லூயி பாஸ்ட்சர் பார்த்த மருத்துவம் ஒன்றுதான் அந்த காலத்தில் வெறி நாய் கடியால் பிடிக்கும் வெறி நோயினின்றும் காப்பாற்றக் கூடியதாக இருந்தது. அரை நூற்றாண்டுக்குப் பின்னர் அந்த சிறுவனே ஒரு பெரிய விஞ்ஞானியாகி, அஞ்சத்தக்க அந்த வியாதிக்கு மாற்று மருந்து கண்டுபிடித்தான்.
நாய்கள்,ஓநாய்கள், குள்ள நரிகள் வவ்வால்கள் இவற்றினால் தொத்து நோயாகப் பரவும் வியாதியே வெறி நோய், பெரும்பாலும் நாய்களாலேயே இது பரவுகிறது. நோயுற்ற நாய்கள் வெறி பிடித்து கைக்கு எட்டும் அனைவரையும் கடித்துவிட்டு ஓடும். இந்த நோய் நாய்களிடமிருந்து மற்ற மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் தொத்திவிடுகிறது. உடனே தக்க மருத்துவம் செய்யாவிட்டால் விலங்கினம் மக்கள் குலம் எல்லோருமே கோர மரணம் அடைவர்.
பாட்ச்சர் அந்த நோயினுடைய காரணத்தையும், அதற்கான மாற்று மருந்தையும் கண்டு பிடிக்கும் முன்னர், பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கோலால் கடிபட்ட புண்ணில் சூடு போடுவது தான் வழக்கத்திலிருந்தது. இது போன்று சூடு போடுதலால் வியாதி நலமாக்கப் பெறுவதில்லை. ஆனால் கடியால் துன்புறுபவனைத்தான் மேலும் வேதனைக்குள்ளாக்கியது
லூயி பாஸ்ட்ச்ர் 1822-ஆம் ஆண்டு பிரான்ஸிலுள்ள கிராமமான ‘டோல்’ என்ற இடத்தில் பிறந்தார். அவரது சிறு வயதில் குறிப்பிடத்தக்கச் சிறப்பு நிகழ்ச்சி ஏதும் நடக்கவில்லை. அவரை அறிந்தவர் எவரும் அவர் ஒரு நாள் உலகப்புகழ் பெற்று விளங்குவார் என்றும் உலகம் முழுவதுமே அவரை நன்றி கலந்த அன்போடு போற்றும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
அவர் இளைஞனாக இருந்தபோது இரசாயனக்கலையான வேதியியலிலும் சடப்பொருள்களைப் பற்றிய பௌதிகக் கலையிலும் மிக்க ஆர்வம் காட்டினார். இந்தப் பாடங்களில் முழுமையாகத் தேர்ந்த அறிவு பெறவும் அவரால் இயன்றது. பின்னர் திராட்சை மிகுதியாக விளையும் ‘வில்லே’ என்ற நகரத்தில் அவர் ஒரு பேராசிரியராக பணியேற்றார் அந்த இடத்தில் தான் அவர் தம் மனம் கவர்ந்த பணியைத் துவங்கினார். அன்று துவங்கிய சிறந்த பணியே அவர் பல புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்து வெளிப்படுத்தி மனிதகுலமே மிகவாகப் பயனடைய துணை புரிந்தது.
திராட்சை பழத்தின் புளிப்பு பால், தயிர்,வெண்ணை இவற்றில் மாறுதல்கள் எல்லாம் மிக நுண்ணிய உயிருள்ள கிருமிகளாலும் புளிக்க வைக்கும் நுணுக்கமான நச்சுக் கிருமிகளாலும் உண்டாகின்றன எனக் கண்டறிந்து நிரூபித்தார் பாஸ்ட்சர். சாதாரண கண்களால் இத்தகைய நுண்ணிய உயிர்களைப் பார்க்கவே முடியாது. அதற்கான மைக்கிராஸ்கோப் எனப்படும் பொருள்களைப் பெரிதாக்கிக்காட்டும் கருவியால் தான் காணமுடியும். இத்தகைய கிருமிகள் பாலைக் காய்ச்சுவதுபோல சூடுபடுத்தினால் அழிந்துவிடுகின்றன என்பதையும் காண்பித்தார். அதனால் மனிதர்கள்,விலங்கினங்கள், தாவரங்களைப் பற்றும் பெரும்பாலான பிணிகள் முதலியன இத்தகைய நுண்ணிய நச்சுக்கிருமிகளால்தான் ஏற்படுகின்றன என்று அவர் கண்டறிந்து இறுதியில் உறுதியான முடிவுக்கும் வந்தார்.
அந்த நேரத்தில் பிரான்ஸ் நாட்டில் பட்டுத் தொழிற்சாலை ஒன்றில் ஒரு பெரும் அழிவான விபத்து ஏற்பட்டது. என்னதென்று புலப்படாத காரணத்தில் பட்டுப்பூச்சிகள் ஆயிரக் கணக்கில் அழிந்து விட்டன. பட்டு நெசவினால் வாழ்ந்து வந்த குடும்பங்கள் அஞ்சி அல்லலுற்றன. பாஸ்ட்சர் அந்த சிக்கலைத் தீவிரமாக ஆராய்ந்தார்.பரவிய நோயும் நச்சுத்தன்மை பொருந்திய கிருமிகளால்தான் என்று கண்டறிந்தார். அதனால் பட்டுப்பூச்சி வளர்ப்பவர்களுக்கு எப்படி அந்த தொற்று வியாதியைப் போக்குவது என்றும் ஆராய்ந்தறிந்து அறிவுறுத்தவும் அவரால் இயன்றது.
அவரது அடுத்த கண்டுபிடிப்பு, வெறி நோயை எதிர்த்துப் போராடி வெற்றி கொள்வதேயாகும். அதற்காக அவர் மேற்கொண்ட பெருமுயற்சி நிலையான பலனைத் தந்தது. அதற்காக அவர் பல சோதனைகளைச் செய்தார். காலரா நோய்க்கிருமிகளைப் புட்டிகளில் அடைத்து வளர்த்துப் பெருக்கினார்.அந்தக் கிருமிகளை கோழிகளுக்கு ஊசி மூலம் செலுத்தினார். அவை நோயுற்று நலிந்து இறந்தன. அஞ்சத்தக்க நச்சுக்கிருமிகள் தாம் இத்தகைய வியாதிகள் வருவதற்கு பொறுப்பாளியாகின்றன என்ற அவரது கருத்துக்கு இந்த சோதனையும் ஒரு சான்றாக அமைந்தது.
இதுபோன்ற பலவிளைவுகளினால் உற்சாகம் பெற்றவராய், அவர் வெறி நோய்க்கான மாற்று மருந்து கண்டுபிடிப்பதில் முழு கவனத்தையும் செலுத்தலானார். வெறி நோயை உண்டு பண்ணும் விஷக்கிருமிகள் எங்கிருக்கின்றன என்று அறிவதே அவரது முதல் செயலாக அமைந்திருந்தது. வெறிபிடித்த நாய்களின் எச்சிலில்தான் அவை இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். ஏனெனில் நாயின் கடிதானே ஒருவனுக்கு அந்த வியாதியை உண்டாக்குகிறது.
இதை உறுதிபடுத்திக் கொள்வதற்காக நோயுற்ற நாயின் எச்சிலை அவர் சேகரிக்க வேண்டியிருந்தது. அது ஒரு பயங்கரமான வேலை அல்லவா? மிக உறுதியும் வலிமையும் வாய்ந்த இரண்டு முரடர்கள் விடுதலை பெறப்போராடும் அந்த நோயுற்ற நாயை அடக்கி ஒரு பலகையில் படுக்க வைத்துப் பிடித்துக் கொண்டனர். பின்னர் பாஸ்ட்சர் ஒரு நீண்ட கண்ணாடிக்குழாயை அந்த நாயின் உதடுகளுக்கிடையே செருகி அதன் எச்சிலை சிறிது குழாயில் எடுத்துக்கொண்டார் அவர்கள் பெற்றிருந்த துணிவான வீரமும் தன்னலமற்ற உயிரைப் பணயம் வைத்து ஆற்றிய தீரமும்தான் இத்தகைய அஞ்சத்தக்க செயலைச் செய்ய தூண்டியது. அந்த வெறி நாயினால் ஒரு சிறிய கடி பட்டிருந்தாலும் அவர்களுக்கு உறுதியாக மரணத்தை விளைவித்திருக்குமே.
பாஸ்ட்சர் பிறகு அவர் சேமித்த எச்சிலை நல்ல நிலையிலுள்ள சில நாய்களுக்கு ஊசி மூலம் ஏற்றினார். ஆனால் அத்தகைய சோதனையில் அவருக்குத் தன் முயற்சியில் ஒரு பெருந் தடை ஏற்பட்டது. சில சமயம் அந்த நோய்பற்றி முற்றுவதற்கு பல மாதங்கள் கூட பிடித்தன.அதுவரை நோய்க்கிருமிகள் செலுத்தப்பட்ட நாய்கள் நலமாகவே இருந்துவந்தன. தாம்ஊசி மூலம் ஏற்றிய கிருமிகள் அந்த நாய்களிடம் வெறி நோய் உண்டு பண்ணுகின்றனவா என்று தெரிந்து கொள்ள அவர் பல மாதங்கள்கூட காத்திருக்க வேண்டியதாயிற்று
தம் முயற்சி தடுக்கப்படுவதைத் தவிர்க்க அவர் ஒரு புது முயற்சி செய்தார், விஷக் கிருமிகளை நேராக நாயின் மூளையினுள் செலுத்தினார். ஏனெனில் விஷக்கிருமிகள் மூளையைத்தான் சென்று தாக்குகின்றன. இங்ஙனம் செய்தபோது இரண்டு வாரத்தில் அந்த நாயை நோய் பற்றச்செய்து தம் முயற்சியில் வெற்றி பெற்றார். அடுத்தபடியாக வலிவிழக்கப்பட்ட வெறி நோய்க்கிருமிகளை ஊசி மூலம் செலுத்தி நலமாக உள்ள நாய்களை வெறி நோய் பற்றுவதினின்றும் காப்பாற்ற முடியுமா என்று முயற்சி செய்தார். காலரா வியாதியில் அந்த முறை செவ்வனே செயல்படுத்தப்பெறவே இந்த நோய்க்கும் அம்முறையே பயன்படும் என்று எண்ணினார்.
அவர், நாய் எச்சிலிலிருந்து வெறி நோய்க்கிருமிகளை ஊசிமூலம் ஒரு முயலின் மூளையினுள் செலுத்தினார். அந்த முயல் நோய் முற்றி இறந்தபிறகு, அதனுடைய மூளையிலிருந்து ஒரு சிறு துண்டு எடுத்து கிருமிகளின்றி சுத்தப்படுத்தப்பட்ட ஒரு புட்டியில் அடைத்து பதினான்கு நாட்கள் பாதுகாத்து வந்தார். அதற்குள் அதிலிருந்த நச்சுக் கிருமிகள் வலுவிழந்து விட்டன. அங்ஙனம், அவற்றை வலுவிழக்கச் செய்ய அந்த மூளையில் ஓர் பெரும் எதிர்ப்பு ஆற்றல் உண்டாகிறது.பின்னர் எதிர்ப்பு சக்தி நிறைந்த அந்த சிறு துண்டு மூளையைப் பொடியாக்கி நீரில் கலந்து நலமாக இருந்த சில நாய்களுக்கு ஊசி மூலம் ஏற்றினார். அடுத்த நாள் அந்த நாய்களுக்கே பதிமூன்று நாட்களே பாதுகாத்த மூளையின் பொடியை நீரில் கலந்து ஊசி மூலம் ஏற்றினார். அதுபோல் படிப்படியாக நாட்களை குறைத்துக் கொண்டே வந்து அவர் ஊசி மருந்தை அந்த நாய்களுக்கு ஏற்றி வந்தார். இறுதியில் ஒரே ஒரு நாள் வலுவிழக்கப்பட்ட பூச்சிகளோடு பாதுகாத்த மூளையைப் பொடி செய்து நீரில் கலந்து செலுத்தினார்.
பதினான்கு நாட்கள் நீடித்த இந்த பெருஞ்சோதனையின் முடிவில் அவர் அந்த நாய்களை வெறி நாய்கள் கடிக்கும்படிவிட்டார். அந்த நோய் பற்றாமல் அந்த நாய்கள் எதிர்ப்பு சக்தியைப் பெற்றிருந்ததை அறிந்ததும் அவர் பெற்ற வியப்பையும் பரவசமான மகிழ்ச்சியையும் கூறவும் இயலுமா?
பிறகு இந்தமுறை மனிதகுலத்தினரிடையே சோதனை செய்யப்பெற வேண்டுமல்லவா ?அதற்காக அவர் ஜோசப் மெய்ஸ்ட்டர் என்ற சிறுவனைத் தேர்ந்தெடுத்தார். அவன் அடிக்கடி வெறி நாய்க்கடியினால் துன்புறுபவன். சூட்டுக்கோல் போட இயலாத அளவில் அவனது உடம்பில் கடிகாயங்கள் நிறைந்து இருந்தன. நாய்களுக்கு தந்தது போலவே பாஸ்ட்சர் அந்த பையனுக்கு ஊசி மருந்துகளை முறையாக ஏற்றினார். ஒவ்வொரு முறையும் மருந்தின் அளவை கூடுதலாக்கிக்கொண்டே வந்தார். அந்த பையன் வெறிநோய் பற்றாமல் மகிழ்ச்சியோடு கிராமத்துக்குத் திரும்பினான்
அவரது அடுத்த நோயாளி ஜுபிலி என்ற பையனாவான்.ஆங்காரமான ஒருவெறிநாயின் பிடியிலிருந்து தன் நண்பர்களைக் காப்பாற்றும் போது அவனே அந்த நாயின் கடிக்குப் பெரிதும் ஆளாகிவிட்டான். பாஸ்ட்சர், அவனுக்கும் அந்த சிகித்சையை செய்து, சில நாட்களில் அவனையும் நலமாக்கி அனுப்பினார்
பாஸ்ட்சர் கண்டுபிடித்த வியக்கத்தக்க போற்றற்குரிய செய்தி உலகம் முழுவதும் விரைந்து பரவியது.பிரான்ஸ் நாட்டின் பல பாகங்களிலிருந்து மட்டுமல்லாமல் அமெரிக்கா போன்ற தொலைவான நாடுகளிலிருந்தும் மக்கள் குவிந்து வரத் துவங்கினர். அவரைப்போற்றி கௌரவித்து வாழ்த்தினர். அவர் பிரான்ஸ் நாட்டின் மதிப்பிற்குகந்த பெருமகனாகப் பாராட்டபெற்றார்.
கேள்விகள்:
- எந்த நிகழ்ச்சி பாஸ்ட்சர் உள்ளத்தில் இரக்கத்தை உண்டு பண்ணியது?
- நாய்க்கடிக்கு பண்டைய மருத்துவ முறை என்ன?
- அவர் கண்டுபிடித்த மருத்துவ முறை என்ன?
- மனித குலத்துக்கு லூயி பாஸ்ட்சரது சேவை என்ன ?