தாவரங்களுக்கும் உணர்வு உண்டு
டாக்டர் J.C போஸ் ஒரு பெரிய உயிர் இன வல்லுனர். அவர் தாவரங்களுக்கும் உணர்ச்சி இருக்கிறது என்றும் அவையும் இன்ப துன்பங்களை உணர்கின்றன என்றும் கண்டு பிடித்து காட்டினார்.ஜகதீஷ் சந்திரபோஸ் என்ற அவர், பகவான் சந்திரபோஸ் என்பவருக்கும் அபலாபோஸ் என்ற அம்மையாருக்கும் மைந்தராவார். பகவான் சந்திரர் நீதிபதியாகப் பணி புரிந்தார். மெத்தப்படித்தவர். தாவர இயல் அவருக்கு மிக்கப் பிடித்தமான பாடம். அந்த துறையில் பல ஆராய்ச்சிகளும் செய்துவந்தார்.
J.C. போஸ் பெங்காலி மொழியைக் கற்பிக்கும் சிறுவர்க்கான பள்ளிக்கு முதன்முதலாக அனுப்பப்பெற்றார். எளிய ஏழை பிள்ளைகளோடு, நன்றாக பழகி விளையாட அவர் பழக்கப் படுத்தப் பெற்றார். சிறுவனாக இருந்த போதே J.C.போஸ் பலபல செய்திகளில் ஆர்வம் காட்டலானார். பல பொருள்களைப்பற்றி அறிந்து கொள்ளவும் அவர் மிக்க ஆவலாக இருந்தார். மின்மினிப்பூச்சி என்பது என்ன? காற்று ஏன்,எப்படி வீசுகிறது? தண்ணீர் ஏன் கீழ் நோக்கிப் பாய்கிறது? என்றெல்லாம் சிந்திப்பார்! தவளைகளையும். மீன்களையும் ஒரு குட்டையில் வளர்த்து அவை முட்டைஇட்டுக் குஞ்சு பொரித்து பெருகி குட்டையில் நிறைந்து வருவதை உன்னிப்பாக கவனித்தார். முளைத்து வரும் ஒரு செடியைப் பிடுங்கி வேர்களின் தன்மையை ஆராய்ந்தார். எலி, அணில், நச்சுத்தன்மையற்ற பாம்புகள் என்று பலவற்றையும் அவர் வளர்த்து வந்தார்
J.C.போஸுக்கு ஒரு பணியாள் இருந்தான். அவன் சிறந்த வீரர்களது கதைகளை போஸுக்குச் சொல்லுவான் அபலா போஸ் இராமாயணம் மஹாபாரதத்திலிருந்து பல கதைகளைச் சொல்லுவாள். அதனால் சிறுவயதிலிருந்தே J.C.போஸ் இந்தியப் பண்பாட்டை மிகவும் மதித்து விரும்பலானார்
மேல் படிப்புக்காக J.C.போஸ் இங்கிலாந்துக்கு அனுப்பபட்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு திரும்பி வந்து கல்தத்தாவிலுள்ள மாநிலக் கல்லூரியில் படிக்கலானார். J.C.போஸ் கடினமாக உழைத்துப் பொருள் சேர்த்து ஆராய்ச்சிகள் செய்வதற்காக தாமே ஒரு ஆய்வுக்கூடம் கட்டினார். ஆராய்ச்சிக்கு வேண்டிய கருவிகளைக்கூட தாமே செய்து கொண்டார்
மின்சாரம் அவரது விருப்பப் பாடமாக அமைந்தது. பலபல சோதனைகள் மூலம் ஒரு செடியில் மின்சாரத்தைப் பாய்ச்சினால் அது படபடப்பும் எரிச்சலும் அடைகிறது அன்று நிரூபித்தார். மின்சாரத்தினால் அந்த செடியில் ஏற்படும் மாறுதலை காண்பிக்க ஒரு கருவியையும் அவரே செய்தார்.
J.C.போஸ் மேல்நிலை அரச மன்றத்தில் தம் கோட்பாடுகளை விளக்க அழைக்கப் பெற்றார். ஒரு செடிக்கு நஞ்சை ஊசிமூலம் ஏற்றினால் அதுவும் மக்களைப்போல துடியாய் துடித்து இறந்து விடுகிறது என்பதை செயல் மூலம் காட்டினார். சில செடிகள் நேராக உயர்ந்தும் சில கோணல் மாணலாகவும் ஏன் வளர்கின்றன என்பதற்கான விளக்கமும் தந்தார். ஒரு செடியைத் தொட்டவுடன் அதில் ஏற்படும் விளைவுகளை கூர்ந்து கவனிக்க கருவிகள் பல அவரே செய்தார். அந்த நாட்களில் ஒரு இந்திய விஞ்ஞானி அவ்வளவு மென்மையான, நுணுக்கமான கருவிகளைச் செய்யக்கூடும் என்று ஒருவரும் கற்பனை கூட செய்திருக்க முடியாது. செடிகள் வெளிச்சத்திற்காக ஆர்வம் காட்டுவதையும் தட்பவெப்ப நிலையின் ஏற்றத்தாழ்வுக்கேற்ப அவை மூடியும் திறந்தும் செயல்படுகின்றன என்பதையும் கண்டறிந்தார்
வேர்களே இல்லாத போதும் செடிகள் தண்ணீர் உறிஞ்சுகின்றன என்று J.C.போஸ் செயல் முறையில் செய்து காட்டினார். செடியின் ஜீவ அணுக்கள் மனித இதயத்தைப் போலவே விரிந்தும் சுருங்கியும் இயங்குகின்றன என்று விளக்கிக்காட்டினார்.
மேலை நாட்டினர் அவரைக் கேள்விகள் பல கேட்டபோது இந்தியாவின் முனிவர்கள் இவற்றையெல்லாம் பல்லாண்டுகளுக்கு முன்னே அறிந்திருந்தனர். அவர்கள் உயிர்கள் அனைத்தும் ஒருங்கு இணைந்த வாழ்வில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லையா என்று விடையளித்தார். ஒரு சாதாரண கத்திகூட பலமுறை பயன்படுத்தினால் சோர்வடைந்து மங்கி போகிறது என்று சான்றாகக் காட்டினார்.
J.C.போஸ், தாகூர், விவேகானந்தர் போன்றவர்களால் மிகவும் விரும்பப் பெற்றவராயிருந்தார். அதனால் பல அறிவுரைகளையும் அவர்களிடமிருந்து போஸ் பெற இயன்றது. அவர் இறக்கும் முன்பு அவரது நீண்ட நாள் ஆசை ஒன்றை மிகவும் முயன்று நிறைவேற்றி விட்டார். ஒரு பெரிய ஆய்வு கல்விக் கூடம் கட்டி பல இளைஞர்கள் விஞ்ஞானத்தில் ஆராய்ச்சி செய்ய ஊக்கமுறுத்துவதே அவரது பேராவலாக இருந்தது. மேலை நாடுகளிலும் J.C. போஸ் பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். தன் ஆராய்ச்சிகளையும் பத்திரிகைகளில் எழுதி வந்தார். புதிதுபுதிதாகக் கற்பனை செய்து கணக்கற்ற பல கருவிகள செய்வதில் அவர் நிபுணராக இருந்ததை நாடே போற்றியுள்ளது.
கேள்விகள்:
- ஜகதீஷ் சந்திர போஸின் தந்தையாரைப்பற்றி நீ அறிந்த வரையில் எழுது.
- அவரது ஆர்வமான தனிபாடம் என்ன?
- செடிகளைப்பற்றி அவர் நம்பினவற்றையும் செயல் முறையில் நிரூபித்துக் காட்டியனவற்றையும் எழுது.