பரித்ராணாய ஸாதூ னாம் வினாஷாய ச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தா பனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே
(அத்.04, பதி.08)
பொருள்: நல்லோர்களைக் காப்பாற்றவும் தீய சக்திகளை அழிக்கவும் தர்மத்தை மீண்டும் நிலைநாட்ட நான் ஒவ்வொரு யுகந்தோறும் அவதரிக்கிறேன்.
“நல்லவர்களைக் காக்கவும் தீய சக்திகளை அழித்து தர்மத்தின் கொள்கைகளை நிலை நாட்டவும் கடவுள் ஒவ்வொரு யுகந்தோறும் உருவெடுக்கிறார். உதாரணமாக, ஹிரண்யகசிபுவை அழித்து ப்ரஹலாதனைக் காக்க நரசிம்ஹ அவதாரம் எடுத்தார். த்ரேதாயுகத்தில் இராவணனை அழிக்க ஸ்ரீராமனாக அவதரித்தார். த்வாபர யுகத்தில் கம்ஸனையும் கௌரவர்களையும் அழித்து தர்மத்தைக் காக்க ஸ்ரீ கிருஷ்ணனாக அவதரித்தார்.”
இன்று இக் கலியுகத்தில் நற்போதனை புரிந்து உலகை – மானிடரை சீர்திருத்த நம்மிடையே ஸாயி அவதாரமாக உருவெடுத்துள்ளார்.நமது பேரன்பு மிக்க பகவான் கூறுகிறார். “ஒரு சிறு ஊரில் குழப்பம் அல்லது தொல்லைகள் நேர்ந்தால் அதை சீர்தூக்க காவலர் ஒருவரே போதுமானவர்.அதுவே மக்களை பயமுறுத்தி மேன்மேலும் துன்பத்தை அளிக்கும் போது அவ்விடத்தே உதவிக் காவல் ஆய்வாளர் அனுப்பப் படுகிறார். ஆங்கே மேலும் கலவரம் வலுக்கும்போது காவல் துறை காண்காணிப்பாளரே நேரில் வந்து அமைதியை நிலைநாட்ட வேண்டியுள்ளது. ஆனால், இப்போதுள்ள நிலைப் போன்று நன்னெறிகள் – ஒழுங்கு முறைகள் குன்றி மானிடர் அனைவருமே அச்சமுறும் நிலையில் இறைவனே ஆத்ம சாதகர் மற்றும் புனிதமானவர் ஆகிய தமது படையினருடன் காவல் துறைத் தலைவராக இறங்கி வருகிறார்.”
கடவுள் ஏன் தாமாக அவதரிக்கிறார்?
கடவுள் ஏன் தாமாக அவதரிக்கிறார்? சிறு தெய்வங்கள் அல்லது தேவதைகள் அனைத்தும் தம் கட்டுப்பாட்டில் இருக்கையில் அவர்கள் மூலமாக ஏன் தர்மத்தை நிலை நிறுத்தும் செயலை மேற்கொள்ளலாகாது?”என யாராவது கேட்கலாம்.
உருவமற்ற– அருவமான ஒன்று உருவத்தை ஏற்று தர்மத்தைக் காக்க உலகில் அவதரிப்பதாகக் கூறும் இந்து தர்மத்தைப் பரிகசித்து வந்த முகலாய சக்கரவர்த்தி அக்பர் ஒருமுறை தம் அரசவையில் இதே வினாவை எழுப்பினார்.
அக்பரின் அரசவையில் விகடத்திலும் அறிவிலும் சிறந்தவராகப் போற்றப்பட்ட பீர்பால் இதற்கான பதிலை ஒருவாரத்திற்குள் அளிக்குமாறு பணிக்கப்பட்டார். சிலநாட்கள் கழிந்து பீர்பால் அக்பரின் குடும்பத்தினருடன் ஏரியில் படகு மூலம் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் அக்பரின் சிறு குழந்தை போன்ற ஒரு பொம்மையை யாரும் அறியாமல் தம்முடன் கொண்டு சென்றார். அவர் ஏரியின் நடுவே சென்று கொண்டிருக்கையில் குழந்தை போன்று இருந்த அந்த பொம்மையை நீரில் விழச் செய்து, “ஓ அரசே! இளவரசர் நீரில் விழுந்துவிட்டார்!” எனக் கூவினார். இதைச் செவியுற்றவுடன் அக்பர் தாமே தமது குழந்தையைக் காக்க நீரில் குதித்தார்.
அக்பர் படகுக்கு மீண்டும் வந்தபோது குழந்தை பத்திரமாக உள்ளதையும் நீரில் விழுந்தது குழந்தை போலிருந்த பொம்மை என்பதையும் பீர்பால் விளக்கினார். அக்பர் பீர்பால் மீது கோபம் கொண்டாலும் தாம் அரசவையில் முன்பு எழுப்பிய வினாவுக்கு ஏற்ப, ‘இறைவன் வேறு யார் மூலமாகவும் தர்மத்தைக் காக்கவும் பணியை மேற்கொள்ளச் செய்யாமல் தாமே மானிட உருவமெடுத்து அவதரிப்பதை விளக்க’ பீர்பால் மேற்கொண்ட நாடகம் என்று அறிந்து அமைதியானார்.
அக்பர் தம்முடன் பயணித்து வரும் பணியாளருள் யாரை வேண்டுமானாலும் நீரில் குதித்து தம் குழந்தையை காப்பாற்ற ஆணையிட்டிருக்க இயலும். ஆனால் தம் குழந்தை மீதான அவரது அளவற்ற அன்பும் அவகாசமற்ற அவசரமும் காரணமாகவே, அக்பர் சக்கரவர்த்தி தாமே நீரில் குதித்து தம் குழந்தை மூழ்காமல் காப்பாற்ற வைத்தது.
தர்மம் பலவீனமடைந்துள்ளதே மிகவும் அவசரமான துன்பச்சூழ்நிலை! நல்லோர் மீது இறைவன் கொண்ட பேரன்பு என்பதோ அளவற்ற ஆழமிக்கது! அதுவே இறைவன் தம்மைத் தாமாகவே அவதரிக்கச் செய்வது!