பஷ்ய மே பார்த ரூபாணி ஷதஷோ (அ)த ஸஹஸ்ரஷ:
நானாவிதானி திவ்யானி நானா வர்ணாக்ருதீனி ச
(அத்.11, பதி.05)
பொருள்: பார்த்த! என்னுடைய நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான பற்பல விதங்களாகவும் பற்பல வண்ணங்களாகவும் பற்பல உருவங்களாகவும் உள்ள காண இயலாத தெய்வீகமான உருவங்களைப் பார்.
அர்ஜுனன் பகவான் கிருஷ்ணரின் அழிவற்ற, திவ்ய, தெய்வீக, விஸ்வரூபத்தை தரிசிக்க (காண) விரும்புகிறான்.
அர்ஜூனனின் உள்ளத்தை அறிந்து, “அர்ஜூனா! உனது உலகியல் சார்ந்த கண்களால் எனது திவ்ய ஸ்வரூபத்தைக் காண இயலாதவனாவாய். எனவே, உனக்கு தெய்வீக சக்தியை வழங்குகிறேன்” என உரைத்து தனது திவ்ய விஸ்வரூபத்தைக் காணச் செய்கிறார்.
அர்ஜுனன் கிருஷ்ணனன் உருவில் முழு ப்ரபஞ்சமும் இருப்பதைக் காண்கிறான். தெய்வீக கோள்களான சூரியன், சந்திரன் முதலான அனைத்தும் இருப்பதைக் காண்கிறான். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயமாகிய பஞ்ச பூதங்களைக் காண்கிறான். யோகியர்கள், முனிவர்கள் மற்றும் அனைத்து ஜீவ ராசிகளையும் காண்கிறான்.
ப்ரபஞ்சம் முழுவதிலுமே இறைவன் வியாபித்துள்ளார். ஒவ்வொரு அணுவும் இறைவனின் அம்சமாகும். இத்தகைய ஆயிரக்கணக்கான உருவங்களைக் கொண்ட எல்லையற்ற திவ்ய காட்சியே விஸ்வ விராட் அல்லது எல்லையற்ற பரம்பொருள் என விவரிக்கப்படுகின்றது. பன்முகங்களைக் கொண்ட ப்ரபஞ்சத்தை அதனுள் உறையும் எல்லா உயிர்களையும் சேர்த்து ஒன்றாகவே காண வேண்டும்.
இப் ப்ரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரிலும் இறைவன் உறைந்துள்ளார். ஒவ்வொரு பொருளிலும் இறைவன் உறைந்துள்ளார்.
ஹோவர்ட் மர்பெட் ‘ஸாயி பாபா அற்புத புருஷர்’ எனும் தனது நூலில் இதற்கு ஒரு உதாரணம் அளிக்கிறார். ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் புவியியல் துறைத் தலைவராக இருந்த டாக்டர்.ஒய்.ராவ் அவர்களின் அனுபவம் ஒன்றைக் குறிப்பிடுகிறார்.
ஒரு நாள் புட்டபர்த்தியில் பாபா முரடான ஒரு கல் துண்டை எடுத்து டாக்டர்.ஒய்.ராவ் அவர்களிடம் காண்பித்து அதில் என்னென்ன அடங்கியுள்ளதென கேட்கிறார். புவியியல் வல்லுவரான ராவ் அந்தக கல்லில் உள்ள கனிமங்களைக் குறிப்பிட்டார்.
பாபா : “நான் அவற்றைக் கேட்கவில்லை. அதற்கும் அப்பால்!”
டாக்டர் ராவ்: “மூலக்கூறுகள், அணுக்கள், எலக்ட்ராங்கள், ப்ரோடான்கள், நியூரான்கள்”
பாபா: “இல்லை, இல்லை! அதற்கும் அப்பால்”
டாக்டர் ராவ்: “நான் அறியேன் ஸ்வாமி!”
பாபா அவரிடமிருந்த கல் துண்டை வாங்கித் தம் விரல்களின் மத்தியில் பிடித்துக் கொண்டு ஊதினார். “இக் காட்சி கண்களுக்குப் புலப்படாததாக ஒருபோதுமில்லை என்றாலும் பாபா மீண்டும் அதைத் தம்மிடம் தருகையில் செவ்வக வடிவான அந்த கல் துண்டு குழலூதும் கண்ணன் வடிவமாக மாறியிருந்தது” எனக் கூறுகிறார். வியப்படைந்த புவியியல் வல்லுனர் அதன் வண்ணம் மற்றும் அதன் கூட்டுப் பொருள்களிலும் மாற்றம் ஏற்பட்டதையும் கண்டார்.
பாபா “பார்த்தீர்களா! உங்கள் மூலக்கூறுகள், அணுக்களுக்கும் அப்பால், கடவுள் பாறையில் உள்ளதை! கடவுள் இனிமையும் ஆனந்தமும் ஆகியவர். அதன் காலை உடைத்து சுவையுங்கள்!
டாக்டர் ராவ் அந்தச் சிறிய கற்சிலையின் காலை சிரமம் ஏதுமின்றி உடைத்து சுவைத்துப் பார்க்கையில் அது ஒரு கற்கண்டாக இருக்கக் கண்டார்.
இந் நிகழ்ச்சியின் மூலமாக “வார்த்தைகளுக்கும் அப்பால், நவீன அறிவியலுக்கும் அப்பால், உண்மையில் இக்கால மானிடரின் விவேக மனதையும் தாண்டி எல்லையுற்ற ஒன்று உள்ளதைத் தாம் அறிந்ததாகக்” கூறுகிறார் டாக்டர் ராவ்.