இறைவனைப் பற்றிய உண்மை
முனிவர் உத்தாலக ஆருணி என்பவர் தம்முடைய மகன் ஸ்வேதகேதுவிற்கு பிரம்மம் என்பது பற்றி பல அறிவுரைகளைப் போதிக்க விரும்பினார் அதற்கு ஓர் எளிய திட்டம் தீட்டி னார். அருகிருந்த ஒரு பெரிய ஆலமரத்தைச் சுட்டிகாட்டி அதிலிருந்து நன்கு பழுத்த ஒரு பழத்தை எடுத்து வரும்படி கூறினார் அங்ஙனமே அவன் பவழம் போன்று சிவந்திருந்த பழத்தை எடுத்து வந்ததும் அவர், “அவர், அன்பின் குழந்தாய்! அதை இரண்டாக பிளந்துவிடு” என்று பணித்தார்
“இதோ! தந்தையே! இதை இரண்டாகப் பிளந்திருக்கிறேன்“
“அதில் நீ என்ன காண்கிறாய்?”
“இதற்குள் பொதிந்திருக்கும் மிகச்சிறிய விதைகளைத்தான் காண்கிறேன் . வேறு இதில் என்ன இருக்க முடியும்?”
“சரி! அவற்றிலிருந்து ஒரு சிறிய விதையை வெளியே எடுத்து அதையும் இரண்டாக உடை பார்க்கலாம்”
“சரி! இதோ இருக்கிறது. இந்த விதையையும் நான் இரண்டாக்கி விட்டேன்.”
“அதனுள் நீ என்ன பார்க்கிறாய்?”
“ஏன்? அதனுள் ஒன்றுமே இல்லையே”
“ஆ! அன்பு மகனே, இவ்வளவு பெரிய மரம் உள்ளே ஒன்றுமேயில்லாத விதையிலிருந்து முளைத்து எழ முடியுமா? அதனுள் பொதிந்திருக்கும் கண்களுக்கு புலனாகாத நுண்ணிய பொருளை உன்னால் காண இயலவில்லை. அந்த நுணுக்கமான பொருள் தான் முளைத் தெழுந்து இத்துணை பெரிய மரமாகிறது. அதுதான் பேராற்றல் மிகுந்த எங்கும் எப் பொருளிலும் நிலவியிருக்கும் கண்ணுக்குத் தெரியாத ஆன்மா. எனவே ஆழ்ந்து சிந்தித்து நம்பிக்கை கொள்! மகனே! அத்தகைய ஆன்மாதான் உலகில் பரவியிருக்கும் பொருள்களின் அடிப்படை வேராக இருக்கிறது. சுவேதகேது! இதை நீ புரிந்துகொள்” என்று கூறினார் உத்தாலகர். “இது சற்று விந்தையாகத்தான் இருக்கிறது தந்தையே! தங்களது கூற்றை நான் எளிதாகத் தெரிந்து கொண்டாலும் இந்த உலகத்தில் அதை எப்படி உணர்ந்தறிவது?” என்று ஸ்வேதகேது கேட்டான்.
அதற்கு உத்தாலகர் “சரி, நீ ஒரு காரியம் செய். நீ தூங்கப்போகும் முன்பு ஒரு கிண்ணத்தில் தண்ணீர் விட்டு அதில் சில உப்பு கற்களை போட்டு வை. காலையில் விழித்தெழுந்ததும் அதை என்னிடம் எடுத்து வா” என்றார். பணிவு மிக்க அவன், தந்தையார் பணித்த வண்ணமே செய்து வைத்து மறு நாள் காலையில் அந்த கிண்ணத்தை அவரிடம் எடுத்து வந்தான். உடனே, “நீ இதனுள் இட்ட உப்பு கற்களை வெளியில் எடுத்துவிடு” என்றார் உத்தாலகர். தந்தையின் சொற்கள், ஸ்வேதகேதுவிற்கு சற்று எரிச்சலையூட்டின.
“அப்பா! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அதில் இருக்கும் உப்பை எப்படி தனித்து வெளியே எடுக்க முடியும்?” என்று கேட்டான்
“ஓ! அப்படியா! சரி! இந்த நீரை மேல்பாகத்தில் சற்று எடுத்து சுவைத்து பார்! எப்படி இருக்கிறது?”
“உப்பு கரிக்கிறது. அது அப்படித்தானே இருக்க வேண்டும்?”
“கிண்ணத்தின் நடுபாகத்தில் கொஞ்சம் நீர் எடுத்து சுவைத்துப் பார். அதே போல் கிண்ணத்தின் அடியிலிருக்கும் நீரையும் எடுத்து தனித்து சுவைத்துக் கூறு.”
“என்ன வேடிக்கை! எல்லா பாகங்களிலும் ”உப்பு கரித்துத்தான் இருக்கும். அப்படி இருப்பதுதானே அதன் இயல்பு”
“அருமை மகனே! உப்பு இந்த கிண்ண நீரில் எல்லா பாகத்திலும் பரவி விட்டிருப்பது போல், எல்லாவிடத்திலும் எல்லா பொருள்களிலும் நிலவி இருப்பதாக நான் விளக்கிய ஆத்மாவும் அங்ஙனமே பரந்து இருக்கிறது என்பதை நீ நன்கு தெரிந்துகொள். அதுதான் மிக நுண்ணிய கண்களுக்கு புலனாகாத ஆத்மா என்பதையும் புரிந்துகொள், ஸ்வேத கேது! ” என்றார் உத்தாலகர்
“அருமைத் தந்தையே! தாங்கள் எப்படி இதையெல்லாம் கூறமுடிகிறது. இது மிக எளிதாவும் தெரிகிறது. ஆனாலும் புரிந்துகொள்ள கடினமாகவும் இருக்கிறது” என்று கேட்டான் ஸ்வேதகேது.
அடுத்தபடியாக இப்போது எப்படி ஆன்மாவை நாம் உணர்ந்துகொள்ள முயல வேண்டும் என் பதைப் பற்றி கூறுகிறேன் கூர்ந்து கேள். ஒருவனின் கண்களைக் கட்டி அவனுடைய இருப்பிடத்திலிருந்து நெடுந்தொலைவிற்கு அவனறியாத ஒரு கானகத்திற்கு அழைத்துச் செல்வதாக வைத்துக் கொள்வோம். அங்கு சேர்ந்ததும் அவன் என்ன செய்வான்? மறுபடியும் தன் வீட்டிற்கு வந்து சேர அவன் வழி கண்டுபிடிக்கத்தானே முயலுவான். அங்கு நம்மிடமிருந்து விடுபட்டவுடன் முதலில் அவன் கண்களைக் கட்டியிருந்த துணியை அகற்ற முயலுவான். பின்னர் தான் எங்கிருந்து கொண்டு வரப்பட்டானோ அந்த இடத்தை கண்டுபிடிக்க அங்கும் இங்குமாக அலைந்து திரிந்து வினவுவான். அடுத்து, அடுத்து ஒவ்வொரு கிராமமாக அவன் இங்ஙனம் வழி கேட்டுக்கொண்டு போய்க்கொண்டேயிருப்பான். இறுதியாக அவனை நேர்ப்பாதையில் வழி காட்டி அழைத்துச் செல்லக்கூடிய ஒருவரை அவன் வழியில் சந்திப்பான். பிறகு அவன் வீட்டை அடைவது அவனுக்கு மிகவும் எளிதாகி விடுமல்லவா? இதுபோன்றே தான் வழி தவறி கானகம் போன்ற இருள் நிறைந்த உலகில் உழலும் நாமும் எங்கிருந்து வழி தப்பி வந்தோமோ அந்த ஆன்மீக மாளிகையைக் கண்டுபிடித்து உய்யும் வகையை உணரவேண்டும். ஆன்மா ஒன்றுதான் நிலையானது. அது காட்டும் பாதையில் தான் நாம் ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்க வேண்டும். இதை நீ நன்கு புரிந்து கொள்! ஸ்வேதகேது!” என்று விளக்கினார்.
இதுபோல் அறிவுரையை உத்தாலக ஆருணி சாந்தோக்ய உபநிஷத்தில் கூறியிருக்கிறார்.
கேள்விகள்:
- உத்தாலகர் ஸ்வேதகேதுவிற்கு என்ன கற்பிக்க முயன்றார்?
- அவர் அவனை எதைக்கொண்டு வரச்சொன்னார்?
- அவர் அவனை என்ன செய்யச் சொன்னார்?
- இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறார் என்பதை ஸ்வேதகேது எங்ஙனம் உணர்ந்து கொண்டான்?