சத்தியம் (வாய்மை)
“அறிவானது தேடியலைந்து எந்த உண்மையிலும் இருப்பிலும் நிறைவு பெறுகின்றதோ அந்த உண்மையும் இருப்புமே சத்தியமாகும்” என்று பாபா கூறுவார். இது சத்தியத்தின் மிக உயர்ந்த ஆன்மீக உட்கிடக்கையும் பாரமார்த்திகப் பொருளும் ஆகும். நீதிநெறியளவினில் இது வாக்கின் உண்மைத்தன்மையும், எண்ணம், சொல், செயல் இவற்றிற்கிடையே உள்ள இசைவுமாகும். “மனஸ்யேகம், வசஸ்யேகம், கர்மண்யேகம்” என்று பாபா கூறுகிறார்.
சத்தியம் என்பது இருப்புடன் (Reality)முழுமையாக ஒன்றிசைந்ததாகும். அது மாறாது இருக்கின்ற இருப்பின்(Being) ஆன்மீக அம்சமாக இருப்பது ஒவ்வொன்றின் உண்மையான தன்மையாகும். நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றதெய்வீக அம்சம் அதுவேயாகும். உள்ளுறையும் பரிபூரணத்துவம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளுகையில் நமது அறிவுணர்வில் நமது உண்மையிருப்பு (True being) இன்னும் அதிகமாகப் புலப்படுகிறது. அறிவின் (Intellect)தோட்டத்தில் (நம்மைப்பற்றிய) உண்மை வெளிப்பட வெளிப்பட, புலனறிவு உள்ளுணர்வாகத்(intuition) துலங்குகிறது. மனமானது உலகாயதமான, புலன்வசப்பட்ட ஆகைகளையெல்லாம் விலக்கிக்கொண்டு, சத்தியத்தைப் பற்றியே ஒருமுகமாகச் சிந்திக்கும்போது, அறிவுணர்வின் உணர்வின் (Consciousness) உயரியநிலைக்கு உயர்ந்து. உள்ளுணர்வால் காணும் திறனைப்பெற்று, திரிகாலசத்தியமாகிய, என்றும் மாறாத அழியாத உண்மையிருப்பினை(Reality),ஆத்மனை (Self), கடவுளை, பேருயிரை (Spirit)ஒப்பற்றபேரறிவுணர்வினைத் (Supreme Consciousness) தரிசிக்கின்றது.
உண்மை பேசுதலாவது, மனதைத் தூய்மைப்படுத்துவதற்கான தவிர்க்க இயலாத அறநெறி ஒழுக்கமாகிறது. அது சமூக நலனுக்காக கட்டாயமாக, அவசியமாகப் பின்பற்ற வேண்டியதாகும். உண்மையல்லாத பேச்சு மனதைத் திரித்து, அதன் உள்ளமைதியை அழித்துச் சூழ்நிலையினைக் களங்கப்படுத்தி, சமூகத்துக்கு இடையூறு விளைவிக்கிறது. உண்மையுடன் இருத்தலே(Truthfulness) முதற்கண் புரிய வேண்டியதும் தலையாயதுமான கோட்பாடாகும். சத்யம் நாஸ்திபரோ தர்ம: (சத்தியத்தைவிட உயர்ந்த தருமம் வேறெதுவுமில்லை) என்று மறைநூல்கள் பகர்கின்றன. உண்மையுடன் இருத்தலே வாழ்க்கையின் அடிப்படையான குணமேம்பாடு (Value) ஆகும்.