உணவுப் பழக்கங்கள்
மக்களின் உணவுப்பழக்கங்கள், அவர்கள் வாழும் இடத்தின் நிலை அமைப்பையும், அதன் சீதோஷ்ண நிலையையும் பொருத்தது. குளிர் மிகுந்த மலைப்பகுதிகளில், புலால் உணவு, பழக்கமான ஒன்றாகும். கரைப் பகுதிகளில் மீன் அடிப்படை உணவாகும். சமவெளிகளில் வாழும் மக்கள் தானியங்களையும், கறிகாய்களையும் பயிரிட இயலும். ஆகையால் அவர்கள் உயிர்வாழ மாமிச உணவினையும் மீனையும் சார்ந்திருப்பதில்லை. உணவு பழக்கங்கள் மக்களின் மதஉணர்வுகளையும், மதிப்பீடுகளையும் சார்ந்துள்ளன. இலட்சக்கணக்கான இந்துக்கள் புலாலுணவைத் தவறாக நினைப்பதில்லை. அதே சமயம் இந்துக்களில் பலர் புலால் உணவை அறவே வெறுக்கிறார்கள். முஸ்லிம்களும் புலால் உணவை உண்பவர்களே; இருப்பினும் சிற்சில புலால் வகைகளை ஒதுக்குகிறார்கள்.
புலால் உணவினையும் மீனையும் ஒதுக்குவதேன் என்பதனையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். பிராணிகளையும் மீனையும், உணவிற்காகக் கொள்வது, மனிதனின் ஆக்கிரம உணர்வையே குறிக்கின்றது. பிராணிகளின் ஊனும், மீனும் சத்துவ உணவல்ல. ஆகையால் ஆன்ம வளர்ச்சிக்கு உகந்ததல்ல. ஒருவர் உண்ணும் உணவின் தன்னைமயைப் பொறுத்து, அவரது எண்ணம், சொல், செயல் இவை அமைகின்றன. மரக்கறி உணவு அமைதியான மனோபவத்தை உருவாக்குகிறது; சத்வகுணங்களை வளர்க்கிறது; ஆன்மீக வாழ்க்கைக்கும் சாதனைகளுக்கும் உகந்தது. இவ்வாறு பல இந்துக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆனால் மரக்கறி உணவு மட்டும் ஒருவனை பக்திமானாகவோ ஆன்மீகம் மிகுந்தவனாகவோ ஆக்குவதில்லை. ஆன்மீக உணர்வு ஒருவரது மனப்பாங்கினைச் சார்ந்தது, ஆனால் மக்களின் உணவுப் பழக்கவழக்கங்கள், குடும்பத்தின், சமூகத்தின் மரபுகள், மத நம்பிக்கைகள், பௌதிக அமைப்புகள், உணவுப் பொருள்களின் வளம் இவற்றை மிகப்பெரிதும் சார்ந்தவை. இந்த இரண்டு கருத்துகளின் சாதகபாதகங்களைக் கருத்தில் கொண்டு நாம் உணவுப் பிரச்னையை அணுக வேண்டும்.