சங்கீதம்
இந்தியர்கள் சங்கீத உணர்வு மிகுந்தவர். கங்கைக் கரையில் முனிவர்களால் பாடப்பட்ட துதிப் பாடல்களின் தொகுப்பேரிக்வேதமாகும். சாம வேதம் இசை வடிவிலுள்ளது. பழங்காலத்தில், இந்தியாவில் கவிஞர்களும், பக்தர்களும், மஹான்களும், இறைவன்துதி பாடி நாடெங்கும் செல்வது வழக்கம். பழங்காலத்திலேயே, இசைக் கலை மிகவும் முன்னேற்றம் அடைந்திருந்து. பரதமுனியின் நாட்டிய சாஸ்திரம், கலைகளைப் பற்றிய மிகவும் விவரமான, மிகச்சிறந்த நூல்களில் ஒன்று. இந்திய இசை, நாடகம் இவை மிகவும் நுட்பமான விஞ்ஞான ரீதியில் விளக்கப்பட்டுள்ளன.
பண்டைய இந்தியாவில் அதிசயிக்கத்தக்க வண்ணம் இசைப்பாணிகளும், இசைக்கருவிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்திய மக்கள் அனைவரும் இசையினால் ஈர்க்கப்பட்டடுள்ளனர். கல்வியறிவற்ற பாமர மக்களிடையே, மனதை மயக்கும் நாட்டுப்பாடல்கள் வழங்குகின்றன. ஒவ்வொருவரும் இசையினை முணுமுணுப்பதை நாம் எங்கும் காணலாம். துடுப்பு வலிக்கும் படகோட்டிகள், வயலில் வேலை செய்யும் பெண்கள், தண்டவாளத்தை எடுத்துச் செல்லும் துறைமுகத் தொழிலாளர்கள், மந்தை மேய்க்கும் இடையர்கள், கல்லுடைக்கும் தொழிலாளர்கள், வண்டியிழுக்கும் கூலியாட்கள், சடங்குகள் புரியும் புரோகிதர்கள் அனைவரும் பணி புரியும் போதே பாடுவதைக் காணலாம்.
இந்திய இசையில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. வடக்கத்திய இந்துஸ்தானி இசை, தெற்கத்திய கர்நாடக இசை, இரண்டு வகைகளுக்கும் சிற்சில ஒற்றுமைகள் இருப்பினும், அவற்றிற்கு இசைக்கருவிகள் வேறு. இவற்றுள் கர்நாடக இசையினைத் தூயது என்று கூறுவர். ஆனால் இந்துஸ்தானி இசை வளங்கள் பல நிறைந்தது. ஸிதார், சரோட், ஷெஹ்னாய், தபலா இவை பிரபலமான இந்துஸ்தானி இசைக் கருவிகள். வீணை, வயலின், மிருதங்கம் இவை கர்நாடக இசையில் மிக முக்கியமான இசைக் கருவிகள். ஒவ்வொரு வகைக்கும் வரலாறு படைக்கும் நீண்ட மரபு உண்டு. அதற்குரிய சிறந்த இசைவல்லுநர்கள் உள்ளனர். இரண்டு வகைகளுக்கும் அழுத்தமான சமய அக நோக்கு உண்டு.
இந்தியாவளம் மிகுந்த இசை மரபினை உடையது. பாமரமக்கள் பாடும் நாடோடிப் பாடல்களில், ராமாயணம், மஹாபாரதம் ஆகிய இதிகாசங்களில் உள்ளசம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளன. அவை மக்களின் நுண்ணுணர்வைத் தூய்மைப்படுத்தி அவர்களின் அகவாழ்க்கையையே மாற்றவல்லவை. இத்தகைய இசை மரபினை நாம் அலட்சியம் செய்வதால், நமது உணர்ச்சிகள் தூய்மையடையாது வறண்டுவிடுகின்றன. கலாச்சாரத்தின் வளமையை அறியாது வெறுமையாக இருக்கிறோம். எல்லாவற்றையும் விட, இசையில்தான் இந்தியர்களுக்கு ஈடுபாடு அதிகம்.