ஏழாம் அத்தியாயம் – விக்ஞான யோகம்
(ஞான விக்ஞான -யோகம். (அறிதலும் அனுபவமும்)
தியானப் பயிற்சியினால் மதிநுட்பம் தூய்மை பெறுகிறது. அது நிர்க்குண தத்துவத்தையும் (குணங்களைக் கடந்த பிரம்மநிலை), சகுண தத்துவத்தையம் (குணங்கள் நிறைந்த பிரம்மநிலை) அறிகிறது. தவிரவும், பஞ்ச பூதங்களாலான பிரபஞ்சமும், கடவுளின் வெளிப்பாடே அன்றி வேறெதுவுமில்லை என்பதையும் புரிந்து கொள்கிறது. அது எங்கும் நிறைந்துள்ள இறைவனை மூடியுள்ள உடை போன்றது என்றும் புரிந்து கொள்கிறது. அத்தகைய இறைவன் ஆர்த்தன், அர்த்தார்த்தி, ஜிக்ஞாஸு, ஞானி ஆகிய யார் பக்தி செலுத்தினாலும் அவரால் அடையத்தகுந்தவர் என்றும் அறிகிறது.
எட்டாம் அத்தியாயம் – அக்ஷர பரப்ரம்ம யோகம்
(அழிவற்ற பிரம்மன் – நிரந்தர வாழ்க்கைநிலை)
சாகும் தருணத்தில் எத்தகைய பாவனை மனதில் ஆழமாக மிஞ்சியிருந்தாலும், அந்த எண்ணம் ஜீவனின் அடுத்த பிறவியை நிர்ணயிக்கிறது. “யத்பாவம் தத்பவதி” என்று கூறப்படுகிறது. கடைசித் தருணத்தில் இறைவனிடம் மனம் லயித்தால், அத்தகைய ஜீவன் அக்ஷர பரப்ரம்மப் பிராப்தியை அடைகிறான். வாழ்க்கை முழுவதும் இறைவனைத் தொடர்ந்து சிந்திக்கும் இடைவிடாத பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு அதன்படி மனம் ஒழுகினால், கடைசி தருணத்தில் கடவுளைப்பற்றி அவன் மனம்சிந்திக்கும். அவன் கட்டாயம் முக்தி (விடுதலைப்பேறு) அடைவான்; பிறப்பு, இறப்பின் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவான். நல்லவர்களும், ஆன்மீக முயற்சியாளரும் தேவயான மார்க்கத்தில் இறந்தபின் செல்கிறார்கள். கர்மத்தில் பற்றுதல் கொண்டவர் பித்ருயான மார்க்கத்தில் செல்கிறார்கள்.
ஒன்பதாம் அத்தியாயம் – ராஜவித்யா, ராஜ குஹ்யயோகம்
(மிக உயர்ந்த அறிவும், மிக உயர்ந்த இரகசியமும்தெரிவிக்கும் யோகம்)
இந்த அத்தியாயத்தில், கிருஷ்ணன், நிர்க்குண தத்துவத்தையும், இவ்வுலகின் மாயத் தோற்றத்தையும் இவை பற்றிய அறிவைப் பெறுவது எப்படி என்பது பற்றியும், கற்பிக்கிறார். அனன்ய பக்தியே ( வேறொன்றும் நினையாத பக்தியே) இதற்குரிய வழி. கைக்கெட்டாத இறைவன், பரிசுத்தமான பக்தியால் எளிதில் கைவசம் ஆகும் தன்மை பற்றி இங்கு கற்பிக்கப்படுகிறது. சமாதியடைவதற்கு (ஜீவசமாதி) முன்னால் ஞானேச்வரர் இந்த அத்தியாயத்தை மனனம் செய்து கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. இந்த அத்தியாயத்தின் பெருமை இதனால் புலனாகிறது.
மனிதன் கைக்கு எளிதில் கிட்டும் சௌலப்பிய நிலை இந்த அத்தியாயத்தில் விளக்கப்படுகிறது.
பத்தாம் அத்தியாயம் – விபூதி யோகம்
(தெய்வீக வெளிப்பாடுகள்)
அனன்ய பக்தியை வளர்க்க வேண்டுமென்றால் படைப்பின் ஒவ்வொரு துணுக்கிலும், கடவுட்தன்மையை ஒரு துளியாவது காண்பதற்கு மனம் கற்றுக்கொள்ள வேண்டும். நல்லதும், மகிமையும், எழிலும் எங்கிருந்தாலும், அது கடவுளின் அம்சமும் பிரதிபலிப்புமேயாகும். பிரபஞ்சம் முழுவதுமே அவரது விபூதிகளும் (உயரிய தன்மைகள்), மகிமையும் நிறைந்தது. ஆகவே நாம் படைப்பின் ஒவ்வொரு அணுவிலும் இறைவன் வெளிப்பாட்டின் ஒளிக்கீற்றைக் காணக் கற்றுக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும் (தூணிலும் ஊன்…)
பதினொன்றாம் அத்தியாயம் – விஸ்வரூப சந்தர்ஸனயோகம்
படைப்புக்குள்ளே இறைவன் மறைந்திருக்கிறார். அதேசமயம், சகலபடைப்பும் அவருக்குள்ளே அடங்கியிருக்கிறது. பத்தாவது அத்தியாயத்தில் சிருஷ்டிக்குள்ளே கடவுளின் அம்சங்கள் எவ்வாறு காணப்படுகின்றன என்று கூறப்படுகின்றது. இந்த அத்தியாயத்தில், பிரபஞ்சம் முழுவதும் கடவுளுக்குள்ளே இருக்கும் விவரங்கள், விளக்கப்படுகின்றன. அவை சொல்லுக்கடங்காதவை. இறைவன் படைப்பு முழுவதையும் கடந்தவன். அதற்கு அப்பாற்பட்டவன்.
பன்னிரெண்டாம் அத்தியாயம் – பக்தியோகம்
சகுணபக்தியும், நிர்க்குணபக்தியும் இவ்வதிகாரத்தில் கற்பிக்கப்படுகின்றன. ஒவ்வொன்றும் தத்தமக்கு உரிய நிலையில் ஒப்பற்றது. இவ்வதிகாரத்தில் உண்மையான பக்தியின் குணநலன்கள் விவரிக்கப்படுகின்றன. அத்தகைய பக்தனுக்கு யாரிடமும் சிறிதும் வெறுப்பில்லை. அவனது கருணை எல்லாரிடமும் பொங்கிச் செல்கிறது. கடவுளை அவன் நேசிக்கிறான் என்பதைவிட கடவுள் அவனை நேசிக்கிறார் என்பதே உண்மை.
முதல் ஆறு அத்தியாயங்களும், ஜீவனைத் தூய்மைப்படுத்தும் ஒழுக்க நெறிகளைப் பற்றிக் கூறுகின்றன. அடுத்த ஆறு அத்தியாயங்களும், எங்கும் நிறைந்துள்ள பரம்பொருளின் வெளிப்பாடுகள் பற்றி விவரிக்கின்றன. அவரை அடையும் வழி, அனன்யபக்தி மூலமாகவே என்று வலியுறுத்தப்படுகின்றன. கடைசி ஆறு அதிகாரங்களும் ஜீவபிரம்ம ஐக்கியத்தைப்பற்றி வருணிக்கின்றன.