பால கங்காதர திலகர்
வம்சம்
பால கங்காதர திலகர், 1856 ஆம் வருடம், ஜூலை மாதம், 23ஆம் தேதி, மகாராஷ்டிரமாநிலத்தில் உள்ள ரத்னகிரி என்ற ஊரில் பார்வதிபாய் கங்காதரருக்கும், கங்காதர ராமச்சந்திர திலகருக்கும் மகனாய்ப் பிறந்தார். பால கங்காதரரின் தந்தை, ஸம்ஸ்கிருத பண்டிதரும், புகழ்வாய்ந்த ஆசிரியரும் ஆவார். அவருடைய பாண்டித்யத்தினால், அவர் “கங்காதர்பந்த்” என்று எல்லோராலும் அழைக்கப்பெற்றார். திலகர் தனது பதினாறாவது வயதில், தன் தந்தையை இழந்தார். தந்தையின் நுண்ணறிவினால் மகன் திலகர் மிளிர்ந்தார். கல்லூரிக்கல்வியை பெற்ற முதல் தலைமுறை இந்தியர்களில் இவர் ஒருவரானார்.
இளமைப் பருவத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வு
பால கங்காதர திலகர் அதிபுத்திசாலியான மாணவன். (சிறுவயது நிகழ்வுகளை மாணவர்களைக் கொண்டு நடிக்கச் சொல்லலாம்.)
கணக்கு ஆசிரியர்: ஐந்து ஆடுகள் ஒரு புல்வெளியிலுள்ள அனைத்து புற்களையும் 28 நாட்களில் மேய்ந்து விட்டது. எத்தனை ஆடுகள் 20 நாட்களில் அந்த புற்களை மேய்ந்து விடும்?
கேள்வி முடியுமுன்பே பதில்வந்தது
திலகர்: ஏழு ஆடுகள்
ஆசிரியர்: கணக்கை செய்து பார்க்காமல் பதிலளித்ததுயார்?
இரண்டு மூன்று மாணவர்கள்: திலகர் ஐயா
ஆசிரியர் திலகர் இருக்குமிடம் சென்று அவர் நோட்டுப்புத்தகத்தைத் திறந்து பார்த்தார். விடை காணக் கணக்கைப் போடுவது இருக்கட்டும்; அந்தமாணவன் கணக்கையாவது எழுதியிருக்க வேண்டுமல்லவா?
ஆசிரியர்: இந்தக் கணக்கை எங்கு செய்திருக்கிறாய்?
குறும்புச் சிரிப்புடன் அந்தமாணவன் தன் ஆள்காட்டி விரலால் தன் தலையைக் காண்பித்தான். “நீ அந்தக் கணக்கை நோட்டுப் புத்தகத்தில் செய்திருக்க வேண்டும்.” என்றார் ஆசிரியர். அதற்கு மாணவன் திலகர் “நான் மனதிலேயே செய்து விடுவேன்” என்றார்.
திலகருடன் படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர் ஒரு கணக்கை மூன்று முறை போட்டுக் கற்றுக் கொடுத்தாலும் புரிந்து கொள்ளக் கஷ்டப் படுவார்கள். ஆனால் திலகருக்கோ அது நீர் அருந்துவது போல சுலபமானது, ஸம்ஸ்க்ருதமோ எனில் உரித்த வாழைப் பழம் போல் மிக எளிது.
சுதந்திரமான கருத்துக்கள்
குழந்தைப் பருவத்திலேயே சுயமாக சிந்தித்து எப்போதும் அந்த நிலைப்பாட்டிலேயே உறுதியாக இருப்பார். அவரொத்த வயதினர்களிடையே அவர் தனித்து விளங்கினார். ரத்னகிரியில் ஆரம்பபள்ளியில் படிக்கும் போது ஒருநாள், ஒரு மாணவன் பள்ளியில் இடைவேளையின் போது வகுப்பில் வேர்க்டலைகளை உண்டுவிட்டு, தோலிகளை ஆசிரியர் மேஜைக் கருகில் வீசிவிட்டுச் சென்றுவிட்டான். எந்த மாணவனும் அதைக் கவனிக்கவில்லை. பள்ளி மணி அடித்ததும் அவ்வகுப்பு மாணவர்கள் தத்தம் இருக்கையில் அமர்ந்தனர். ஆசிரியர் வகுப்புக்குள் நுழைந்தபோது வேர்க்கடலைகளின் ஓடுகள் மேஜைக்கருகில் எங்கும் சிதறியிருப்பதைக் கண்டார், “யார் இதைச் செய்தது?” என்று மிகுந்த கோபத்துடன் கர்ஜித்தார். மாணவர்கள்யாரும் பதிலளிக்கவில்லை. தவறிழைத்தவன் பதிலளிக்கவில்லை என்றால் அது பற்றித் தெரிந்தவன், அது யார் என்று சொல்ல வேண்டும் என்றார். தவறு செய்தது யார் என்று அறியாத மாணவர்கள் ஒருவரை ஒருவர் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒருவரும் ஆசிரியருக்கு பதில் அளிக்கவில்லை. கோபம் கொண்ட ஆசிரியர் மேஜையிலிருந்த பிரம்பினை எடுத்தார். பின் “நீங்கள் யாரும் தவறிழைத்தவனைக் கண்டுபிடிக்க எனக்கு உதவவில்லை என்பதால் உங்கள் ஒவ்வொருவரையும் பிரம்பு கொண்டு அடிக்கப் போகிறேன்” என்றார். ஆசிரியர் முதல்வரிசையில் அமர்ந்திருக்கும் மாணவர்களை நெருங்கிய போது திலகர் தனதிருக்கையிலிருந்து எழுந்து தைரியமாகக் கூறினார், “எங்களில் பல மாணவர்களுக்கு இந்தத் தவற்றை செய்த மாணவன் யார் என்று தெரியாது. மற்றவர்களும் தரையில் இறைந்திருக்கும் இந்த வேர்க்கடலை ஓடுகளைப் பார்க்கக் கூட இல்லை. இடைவேளையில் நாங்கள் அனைவரும் வகுப்பைவிட்டு வெளியே வந்துவிட்டோம். மற்ற வகுப்பிலுள்ள மாணவன் ஒருவன் கூட இதை செய்திருக்கலாம். அப்படியிருக்க அப்பாவி மாணவர்களை ஏன் அடிக்க வேண்டும்?”
ஆசிரியர், திலகரின் நன்னடத்தையை அறிந்திருந்தாலும் தன் கோபத்தை அடக்க முயற்சிசெய்து, அதில் தோல்வி அடைந்தார்,” அதி மேதாவி போல் பேசாதே! இங்குள்ள மாணவர்களுக்கு குற்றம் செய்தவன் யார் என்பது தெரியும், நீங்கள் சொல்ல முற்படவில்லை என்றால் அனைவரையும் தண்டிப்பேன்” என்றார். உடனே திலகர் மிக்க மரியாதையுடன் கூறினார், “ஆனால்…….. இது நேர்மையானதோ, நியாயமானதோ கிடையாது. எங்கள் யாருக்கும் எதுவும் தெரியாது என்பதே உண்மை. ஒன்றும் அறியாதவர்கள் தண்டனை பெறுவதை நான் காண விரும்பவில்லை. ஆகவே என்னை வகுப்பிலிருந்து வெளியேற அனுமதியுங்கள்” ஆசிரியர் பதிலளிக்க முற்படு முன்பே திலகர் புத்தகங்களை எடுத்துக்கொண்டு வகுப்பை விட்டு வெளியேறினார்.
திலகரின் தைரியத்தையும், நியாயம், நேர்மை மீது அவர் வைத்திருந்த பற்றையும் கண்டு எல்லா மாணவர்களும் அவரைப் பாராட்டினர், ஆசிரியர் கூட திலகரைப் புகழாமல் இருக்க முடியவில்லை. அவர் வகுப்பிலுள்ளவர்களைப் பார்த்து திலகர் சாதாரணமாணவன் இல்லை. ஒவ்வொரு மாணவரும் திலகரைப் போல் உண்மை பேசுபவனாகவும் கட்டுப்பாடுடன் இருப்பவனாகவும் இருந்தால் நம்நாட்டின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்றார்.
குழந்தைப் பருவத்தில் கேட்ட ஊக்கம் அளிக்கும் கதைகள்
கதைகள் என்றால் திலகருக்கு மிகவும் பிடிக்கும். அன்றாடப் படிப்புகள் முடிந்தவுடன் தன் தாத்தாவிடம் கதை கேட்க ஓடி விடுவான். திலகர்,நானாசாஹேப், தாந்தியா தோபே மற்றும் ஜான்ஸிராணி போன்ற புரட்சியாளர்களின் கதைகள் கேட்டு அவனுக்கு மெய்சிலிர்க்கும். மராத்திய அரசன் சிவாஜியின் சரித்திரம், அவரது தாய்நாட்டுப் பற்று ஆகியவைகளால் அவன் பெரிதும் ஈர்க்கப் பட்டான். நாட்டுப் பற்றின் காரணமாக தம் உயிர்களைத் துறந்த அவர்கள் எவ்வளவு உயர்ந்தவர்கள். தான் பெரியவனான பின், தானும் அவர்களைப்போல் நாட்டிற்குச் சேவை செய்து தாய்நாட்டை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று இதயத்திலிருந்து அவனுக்கு வேட்கை தோன்றியது.
கல்வி
பால கங்காதரருக்கு பத்து வயது ஆனபோது அவர் தந்தை கங்காதர் பந்த் பூனாவிற்கு மாற்றப்பட்டார். பூனாவில் இருக்கும் ஆங்கிலோ வெர்னாகுலர் பள்ளியில் சேர்ந்ததன் மூலம் நன்கு அறிந்த ஆசிரியர்களிடமிருந்து நல்ல கல்வியைப் பெறமுடிந்தது. மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றபின் டெக்கான் கல்லூரியில் சேர்ந்தார். 1877 ஆம் ஆண்டு பி.ஏ பட்டம் பெற்றார். கணிதத்தில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றாரென்றால் அதில் வியப்பேதுமில்லை. தனது படிப்பைத் தொடர்ந்து எல்.எல்.பி பட்டமும் பெற்றார்.
ஆரோக்கியமே செல்வம்
அவர் தன் அன்னையைப் போன்றே பலமற்றிருந்தார். உடல் மென்மையாக ஆரோக்கியமற்றிருந்தால் எவ்வாறு நாட்டிற்காகத் தன் வாழ்க்கையைத் தியாகம் செய்யமுடியும்? ஆகவே திலகர் தன் தேகத்திற்கு வலிமையூட்ட முடிவு செய்தார். அதற்காக தினமும் உடற்பயிற்சி மேற்கொண்டார். அவர் தன் உணவுமுறையை ஒழுங்குபடுத்தி, அதே சமயம், அவ்வுணவை சத்துள்ளதாகவும் அமைத்துக்கொண்டார். ஒரு வருடத்திற்குள் திலகர் எல்லா விளையாட்டுப் போட்டிகளிலும் முதன்மையானவராகத் திகழ்ந்தார். நீந்துவதிலும், மல்யுத்தத்திலும் சிறந்து விளங்கினார், அவர் தன் உடலைப் பேணி வளர்த்ததால் அவரது பிரகாசிக்கும் ஆரோக்கியத்தைக் கண்டவர்கள் அவரைப்பார்த்து ஆச்சரியமடைந்தனர்.
நாட்டிற்கு அவருடைய பங்களிப்பு
இரட்டைப் பட்டதாரியான திலகருக்கு பிரிட்டிஷ் காலத்தில், மற்றவர்களைப் போல நன்கு சம்பாதிக்கக்கூடிய வேலைகள் கிடைத்திருக்கும். ஆனால், சிறு வயதிலேயே முடிவெடுத்ததால் தன்னையே நாட்டின் சேவைக்காக அர்ப்பணித்தார். திலகர் தன் நண்பர்களான அகர்கர், நம்ஜோஷி, சிப்லும்கர் ஆகியவர்களுடன் சேர்ந்து ஆன்மீகக்கல்வி, அரசியல்கல்வி, மற்றும் வட்டார மொழியில் கல்வியைக் கற்பிப்பதற்காக “தி நியூ இங்கிலிஷ் ஸ்கூல்” என்ற பள்ளியை நிறுவினார். இந்தப்பள்ளி, நாளடைவில் வளர்ந்து “டெக்கான் எஜுகேஷன் சொசைட்டி” என மாறியது. இது ஆரம்பித்த முதல் ஆண்டில் திலகரோ அல்லது சிப்லுங்கரோ ஒரு ரூபாய் கூட சம்பளமாகப் பெறவில்லை.
பத்திரிக்கையாளராக திலகர்
பள்ளியோ, மாணவர்களுக்கு மட்டுமே கல்வி அளிக்கிறது. ஆகவே, திலகர் கல்வித் திட்டத்தை விரிவடையச் செய்ய விரும்பினார். ஒவ்வொரு இந்தியனுக்கும் அடிமைத்தனத்தின் தன்மையை அவன் மனதில் புரிய வைக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே திலகர் செய்தித்தாள்களே அதற்குப் பயனுள்ள ஊடகம் என்று எண்ணினார். பள்ளி ஆரம்பித்த மறுவருடமே திலகர் வார இதழ்களை வெளியிட்டார். மராத்தியில் “கேசரி” என்ற இதழையும் ஆங்கிலத்தில் மராட்டா என்ற வார இதழையும் வெளியிட ஆரம்பித்தார். சமூக சீர்திருத்தத்திற்காக அரசுக்கு எதிராகவே புரட்சியை ஏற்படுத்தினார். குழந்தைத் திருமணம் தடை செய்யப்பட வேண்டும் என்று அறை கூவலிட்டார். அதே சமயம், விதவைத் திருமணத்தை ஆதரித்தார்.
உள்ளூர் விழாக்கள் முதல் தேசிய விழாக்கள் வரை
திலகர் கணேஷ் சதுர்த்தி, சிவாஜி திருவிழா போன்றவற்றை தேசியத் திருவிழாக்களாக மாற்றி அமைத்தார், மக்கள் மனதிலும் அவர்கள் உடலில் ஓடும் ரத்தத்திலும், எலும்பிலும் எல்லோரும் சமம் என்று ஒற்றுமையை உணரவேண்டும். அடிக்கடி அவர்கள் ஒன்று கூடவேண்டும். அனைவருக்கும் பொதுவான கொள்கை இருக்கவேண்டும். அவர்கள் தங்களுக்குள் உள்ள வேற்றுமைகளைக் களைந்து அனைவரும் சேர்ந்து சந்தோஷமாக இருக்கவேண்டும். என்று உணர்ந்தார். திலகரின் திட்டத்தினால், சில வருஷங்களில் மகாராஷ்ட்ரத்தின் எல்லா இடங்களிலும் மூலை முடுக்குகளிலும் இந்தத் திருவிழாக்கள் பரவின.
புனிதச்சொல்: சுதேசி
இந்திய சுதந்திர இயக்கத்தின் ஒரு பகுதியாக, சுதேசி இயக்கம் தீவிரமடைந்தது. இந்த இயக்கத்தின் நோக்கம், அயல்நாட்டில் உற்பத்தி செய்த பொருட்களைப் புறக்கணித்தல் என்பதே ஆகும். திலகர் வீடு முன்பு, பெரிய “ஸ்வதேஷி மார்க்கெட் (சுதேசிச்சந்தை)” என்பது திறக்கப்பட்டது. அதில், கிட்டத்தட்ட ஐம்பது கடைகளில் சுதேசிப் பொருட்கள் விற்கப்பட்டன.
“சுதேசி, ஸ்வராஜ்யம், புறக்கணிப்பு, தேசியக்கல்வி” ஆகியப் புனிதச் சொற்களே திலகரால் பிரச்சாரம் செய்யப்பட்டது. திலகர் சுதந்திரமாக இருந்தால் தங்கள் அரசுக்கு ஆபத்து என்று ஆங்கிலேயர்கள் கருதினர். ஆங்கிலேய அரசு திலகரைக் கைது செய்வதற்காக அவர் எழுதிய “நாட்டின் துரதிருஷ்டம்” என்ற கட்டுரையைக் காரணம் காட்டி, அது, அரசுக்கெதிரான துரோகம் என்று அறிவித்தது. 1908 ஆம் ஆண்டு, ஜூன் 24 அன்று பம்பாயில்(மும்பையில்) கைது செய்யப்பட்டு ஆறு வருடங்கள் இந்தியாவிற்கு வெளியே மாண்டலேயில் சிறை வைக்கப்பட்டார்.
திலகரின் மனைவி சத்யபாமா, தன் கணவர் போன்றே எளிமையானவர். அவள், விலை மிகுந்த உடைகளை அணிந்ததே இல்லை. குடும்பத்திற்காகவும், விருந்தினர்களைக் கவனிப்பதற்காகவும் தன் வாழ்நாளைச் செலவு செய்தாள். அவள் இந்தியாவில் இறக்கும்போது திலகர் மாண்டலேயில் சிறையில் இருந்தார்.
திலகரின் அறைகூவல்: “ஸ்வராஜ்யம் நமது பிறப்புரிமை, நாம் அதைப் பெறுவோம்”
லோகமான்யர்
திலகரின் நாட்டுப்பற்று, அஞ்சாமை,போர்குணம் கூரிய புத்தி, நேர்மையான பண்பு மற்றும் தியாக உள்ளம் ஆகிய குணங்களால் மக்களின் அன்புக்குப் பாத்திரமானார். மக்கள் அன்பாக அவரை, “லோகமான்யர்” என அழைத்தனர். (மக்களால் தலைவராக ஏற்றுக்கொள்ளப் பட்டவர் என்பது அதன் பொருள்.)
திலகரும் ஆன்மீகமும்
மாண்டலே சிறையில் இருந்தபோது தினமும் காலையில் இறைவனைப் பிரார்த்திப்பார், காயத்ரி மந்திரம் மற்றும் இதர தெய்வீகப்பாடல்களை ஓதுவார், மதசடங்குகளைச் செய்வார். கீதையின் நடுநாயகமாக விளங்கும் கர்மயோகத்தில் நம்பிக்கை கொண்டார். பகவத்கீதைக்கு விளக்க உரையாக “கீதாரஹஸ்யம்” என்ற நூலை எழுதினார். வேதங்களை ஆழமாகக் கற்றார். “தி ஆர்க்டிக் ஹோம் ஆப்தி வேதாஸ் (The Arctic Home Of The Vedas)” என்ற புத்தகத்தை எழுதினார்.
அவர் எளிமையாக வாழ்ந்து, தன் உடல் மனம் ஆவியை தேசசேவைக்காக அர்ப்பணித்தார். அவருக்கு சொத்து ஏதும் இல்லை. அவர் எளிமையான ஆடைகளை உடுத்தினார். ஒரு வேஷ்டி ஒரு சட்டை, தோளில் ஒரு ஷால், தலையில் பகடி என்ற சிகப்பு வண்ண மராத்தியத் தொப்பி ஆகியவைகளை மட்டுமே அணிவார். “மதமும் அன்றாட நடைமுறைவாழ்வும் வேறல்ல, சன்யாசம் ஏற்பது என்பது வாழ்க்கையைத் துறப்பதல்ல. உனக்காகவே மட்டும் உழைக்காமல் இந்தநாட்டை உன்குடும்பமாக ஏற்பதே அதன் உட்பொருளாகும். இதையும் தாண்டி மானிடர்க்கு சேவை செய்தல் வேண்டும் அடுத்து நாம் இறைவனுக்கு சேவை செய்ய வேண்டும்.” திலகர் இதையே நம்பினார். திலகர், “நான் இந்தியாவை தாய்நாடாகவும் என்னுடைய இறைவியாகவும், இந்தியமக்களை சுற்றத்தாராகவும் கருதி அவர்களின் அரசியல் சுதந்திரத்திற்காகவும் சமூகவிடுதலைக்காகவும் உண்மையாகவும் விசுவாசமாகவும், நிலையுறுதியாகவும் உழைப்பதே மிக உயர்ந்த மதமும் கடமையுமாகும்” என்றுகூறினார்.
ஷீரடியில் பால கங்காதர திலகர்
பால கங்காதர திலகர் ஷீரடியை அடைதல்
1917ம்.வருடம் மே.மாதம் 19ஆம் தேதி. கபர்டேயுடன் பால கங்காதர திலகர் ஷீரடிக்கு வந்தார். கபர்டே முன்னமேயே ஷீரடி வந்து பாபாவின் பெருமையை நேரில் கண்டவர். இந்திய தேசிய காங்கிரஸில் தீவிரத் தலைவராகவும் சுதந்திரப் போர்வீரராகவும் திகழ்ந்த திலகரை பாபாவின் தரிசனத்திற்காகவும் சுதந்திர இயக்கம் சம்பந்தமாக சில அறிவுரைகளைப் பெறவும் அழைத்து வந்தார். ரகசியமாக பாபா அவருக்கு அறிவுரைகள் அளித்ததற்கு இன்றும் சில அத்தாட்சிகள் உள்ளன. ஆங்கிலேய ஆட்சி இருந்ததால் இந்த விஷயங்கள் ரகசியமாக வைக்கப்பட்டன. இந்தியா கட்டாயமாக அஹிம்சை வழியில் சுதந்திரம் பெறுமே தவிர தீவிரவாதவன் முறைகளால் அல்ல என்று ஷீரடி பாபாவால் கணிக்கப்பட்டதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. இந்த விஷயங்களை எடுத்துரைத்து சில அறிவுரைகளைத் திலகருக்கு வழங்கினார். அன்றிலிருந்து வன்முறைகள் குறைய ஆரம்பித்தன. ஆதாரம்-(www.saibaba.org)
குருமார்களுக்கான செயல்பாடுகள்/ குருமார்களிடையே கலந்துரையாடல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் டிசம்பர் வரை பிரசாந்திநிலயத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகள் சுதேசி என்ற கருத்துப் படிவம் -இதை விழுக்கல்வியுடன்/ பஞ்சபூதங்களுடன் பொருத்துக. (குறிப்பு: உள்ளூரில் உற்பத்தி செய்த பொருட்கள்)