கர்மயோகம்
இந்தக் கதை, மகாபாரதத்தில் வருவது.ஆன்மீக வாழ்கையில் ஆர்வங் கொண்ட அந்தண இளைஞன், தனது பெற்றோரையும், குடும்பத்தையும் விட்டுவிலகி, துறவறவாழ்க்கையில் ஈடுபட்டான். கிராமத்துக்கு வெளியே உள்ள காட்டில் அவன் தங்குவது வழக்கம். காலை தியானத்தை முடித்துக் கொண்டு, பிட்சைக்கு காலையில் கிராமத்துக்கு வருவது வழக்கம்.
காட்டிலுள்ள, மரத்தடியில் வழக்கம் போல ஒருநாள் தியானம் செய்துக் கொண்டிருந்தான். நடுப் பகலாயிற்று; பிட்சைக்குக் கிளம்பும் நேரம். அதே சமயம், மேலிருந்த கிளைகளிலுள்ள ஒரு பறவையிட்ட எச்சம் அவன் தலைமேல் விழுந்தது. சினத்துடன் மேலே பார்த்தான்.அங்கே ஒரு கொக்கு கிளைகள் மேலே உட்கார்ந்திருப்பதைக் கண்டான். அவன் சினத்துடன் கொக்கைக் காண, அது உடனே இறந்து கீழே வீழ்ந்து சாம்பலாயிற்று. அந்தஅந்தணன் மிகவும் ஆச்சரியம் அடைந்தான். உற்சாகமடைந்தான். கர்வப்பட்டான். தன் உடல் மேல் எச்சமிட்ட கொக்கு சாவது சரியே என்று நினைத்தான்.
இத்தகைய கர்வத்துடன் அவன் கிராமத்துக்கு நடந்துசென்றான். ஒரு வீட்டிற்கு முன்னால் நின்று, பிட்சை வேண்டுமென்று கேட்டான். உள்ளிருந்த பெண்மணி, ‘தயவு செய்து காத்திருங்கள்’ என்றாள். சிறிது நேரம் சென்றது. அவள் வெளியே வந்து பிட்சையிடவில்லை. இவனுக்கு மன அமைதி குறைந்தது. படபடப் படைந்தான். என் போன்ற தபஸ்வியை எவ்வாறு கௌரவிப்பது என்று இந்த மூடப் பெண்மணிக்குத் தெரியவில்லை என்று நினைத்தான். எரிச்சல் சினமாக மாறியது. சாபமிட வேண்டும் என்றும், தனது ஆற்றலை வெளிப்படுத்த வேண்டுமென்றும் தோன்றியது. அக்கணம், உள்ளே அவன் கொந்தளித்துக் கொண்டிருந்த போது, உள்ளிருந்தவாறே அப்பெண்மணி, அமைதி குன்றாது நிதானமாக, “பிராமணரே, உங்கள் கோபத்தால் சாம்பலாவதற்கு நான் கொக்கல்ல. தயவு செய்து காத்திருங்கள். என் கணவருக்கு நான் பணிவிடை செய்கிறேன். வேலை முடிந்ததும், உங்களை கவனித்து, பிட்சை அளிக்கிறேன்” என்று கூறினாள். பிராமணனுக்கு ஒரே ஆச்சரியம்! அந்தப் பெண் தன்னை இன்னும் வந்து பார்க்க வில்லை, தன் எண்ணங்களைத் தெரிந்துகொண்டாள். காட்டில் நடந்ததையும் அவள் அறிந்தாள். இது எப்படி? முடிவில் பிட்சையுடன் அம் மாதரசி வெளியேவந்தபோது காக்க வைத்ததற்கு மன்னிப்புக்கேட்டு, தாமதம் தவிர்க்க முடியவில்லை என்றும், கணவனுக்குப் பணிவிடை செய்வது ஒரு பெண்ணுக்கு முதற் கடமையென்றும் அதனால் தாமதம் என்றும் கூறினாள்.
பிராமணனின் கர்வம் தவிடு பொடியானது. அவன் வெட்கமடைந்தான். இத்தகைய உயர்ந்த அறிவை அவள் எவ்வாறு பெற்றாள் என்பதைக் கூற வேண்டும் என்றும், தனக்கு குருவாக இருக்க வேண்டும் என்றும் வேண்டினான். “நான் சாதாரண இல்லத்தரசி, படிப்பறிவில்லாதவள். என்னைப் பொருத்தவரையில் என் கணவருக்குச் செய்ய வேண்டிய கடமையே முதலாவதாகும். என்னை முழுவதும் அர்ப்பணித்துக் கொண்டு நான் அதைச் செய்கிறேன். இதுவே எனது சாதனா மார்க்கம். இதற்குமேல் நான் உங்களுக்கு ஒன்றும் சொல்ல இயலாது. நீங்கள் மிதிலாபுரிக்குச் செல்லுங்கள். அங்கு ஒரு சந்தில் கசாப்புக்கடை வைத்து நடத்தும் தர்ம வியாதனிடம் கற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறினாள்.
அவ்வந்தணன் மிதிலாபுரிக்குச் செல்கிறான். அங்கே தர்மவியாதனின் கசாப்புக்கடைக்கு வருகிறான். அவ்விடம் மிகவும் அருவருக்கத் தகுந்த இடம். அங்கு தர்மவியாதன் மாமிசத்தை வெட்டிக்கொண்டும், விற்றுக்கொண்டும், வாடிக்கைக்காரர்களிடம் பேசிக்கொண்டும் இருப்பதைக் கண்டான். இவ்வாறு செய்துகொண்டே தர்ம வியாதன் பிராமணனை ஏறிட்டு நோக்கினான். பிராமணன், இந்த இடத்துக்கு அந்தப் ‘பெண் ஏன் தன்னை அனுப்பினாள். அதுவும் ஆன்மீக உண்மைகளைக் கற்றுக் கொள்ள இந்த மனிதனிடம் ஏன் அனுப்பினாள் என்று குழப்பமடைந்தான். அதே சமயம் தர்ம வியாதன் அவனை நோக்கி, “மதிப்பிற்குரிய அய்யா, தயவு செய்து அங்குள்ள இருக்கையில் அமருங்கள். என்னுடைய வேலையை சீக்கிரம் முடித்து விடுகிறேன். அந்தப் பெண்மணி என்னைப் பார்க்கும்படி கூறி தங்களுக்கு மிகவும் சிரமம் கொடுத்துவிட்டாள். எனது வேலையை முடித்துக் கொள்கிறேன்.பிறகு நாம் வீட்டுக்குச் செல்லலாம்” என்றான். இதைக் கேட்டதும்,“ பிராமணன் பேச்சிழந்து நின்றான். இந்தக் கசாப்பு கடைக்காரன் எல்லாமறிந்தவன் போலக் காணப்படுகிறான். என்னைப் பற்றிஎல்லாம் அவனுக்குத் தெரிகிறது” என்று நினைத்தான்.
வீடு வந்து சேர்ந்ததும், தர்மவியாதன் பிராமணனை உட்கார்த்திவிட்டு, தனது வயதான பெற்றோருக்குப் பணிவிடைகள் செய்து, உணவளித்து, அவர்கள் ஓய்வெடுக்கச் சென்றபின் ,அந்தணனுக்கு பழங்கள், பால் இவை கொடுத்து உபசரித்தான். பிராமணன் ஆன்மீகக் கருத்துகளை அவனிடம் விவாதிக்கத் தொடங்கினான். தர்மவியாதனின் ஆழ்ந்த ஞானத்தைக் கண்டு அதிசயமுற்றான். பிறகு பிராமணன் தன்னைப் பற்றிச் சிந்திக்க தொடங்கினான்.
இவ்வளவு காலம் செய்த தவத்துக்குப் பிறகும் அவன்மாறவில்லையே. ஒரு கொக்கின் செயலைப் பொறுக்க முடியாமல் அவன் கோபத்துக்கு அடிமையானான். பிட்சையிடுவதில் சிறிது நேரத் தாமதம் அவனால் பொறுக்க முடியவில்லை. கர்வத்துக்கு அடிமையானான். அவனுடன் ஒப்பிடுகையில் படிக்காத அந்த பெண்மணியும், தாழ்ந்த ஜாதியில் உள்ள கசாப்புக் கடைக்காரனும், ஆன்மீகத்தில் எவ்வளவு உயர்ந்தவர்கள். .கர்மயோகத்தின் மூலம் அவர்கள் ஜீவன் முக்தர்களாகி விட்டார்கள். அன்றாட வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் போதே, அவர்கள் மனம் கடவுளை நினைந்திருந்தது. தானோ கடமைகளை விடுத்து வீட்டை விட்டு ஓடிவந்து பெற்றோரை மறந்து, துறவு வாழ்க்கையை நாடினான். அதனால் என்ன பயன்? கடைசி வரையில் சினத்துக்கும் கர்வத்துக்கும் அடிமையாகவே இருந்தான்.
இல்லத்தரசிக்கு, கணவனே கடவுள். தர்மவியாதனுக்கு, அவன் பெற்றோரே தநடமாடும் தெய்வங்கள். அவர்கள் வீடுகளே கோயிலாக மாறின. கர்மயோகத்தின் மூலம் வாழ்க்கையைப் புனிதப்படுத்திக் கொண்டார்கள். இவ்வாறாக அவ்வந்தணன் அறிந்து கொண்டான்.