பாரத தரிசனம்

Print Friendly, PDF & Email

பாரத தரிசனம்

விவேகானந்தர், தாய் நாட்டினைப் பற்றி அறிந்து கொண்டு, அங்குள்ள மக்கள் நிலையினை நேரில் கண்டு புரிந்து கொண்டு, குருநாதரின் உபதேசமொழிகளை எவ்வாறு நாட்டின் மூலை முடுக்குகளில் பரப்புவதற்காக, முதலில் நாடு முழுவதும் பிரயாணம் செய்ய வேண்டும் என்று விருப்பங்கொண்டார்.

ஜூலை 1890ல் , குருநாதரின் மறைவுக்குப் பிறகு, இளந்துறவிகளின் ஆன்மீக வாழ்வுக்கு வழி காட்டியாக இருந்த அன்னை சாரதமணி தேவியரிடம் விடை பெற்றுக் கொண்டு, பரிவ்ராஜகராக வெளி கிளம்பினார். ஐந்து வருடங்கள், இந்தியா முழுவதும் பெரும்பாலும் கால்நடையாகவே அலைந்து திரிந்தார். இவ்வாறு அலைந்து திரிகையில் பல நாட்கள் பட்டினி கிடைக்க நேரிட்டது ; பாலைவனங்களுக்கு காடுகளுக்கும் இடையில் தனியாக நடக்க நேரிட்டது ; சில சமயங்களில் அவரது உயிருக்கே அபாயமும் ஏற்பட்டது. ஆனால் இத்தகைய துன்பங்களையும் அபாயங்களையும் கண்டு அவரது மனம் கலங்கவில்லை ; உண்மையான துறவியாக வாழுந்தார் – ஒரு நாள் எங்கோ ஒரு மூலையில் உள்ள கிராமங்களில் தெரு தெருவாக பிச்சை எடுத்து உணவு உண்டார் ; மற்றொரு நாள் திவான் அல்லது மகாராஜாவின் மதிப்பிற்குரிய விருந்தினராக இருந்தார்; ஒரு நாள் லட்சக்கணக்கான குடிசைவாழ் மக்களின் வறிய நிலையை கண்டார்; மற்றொரு நாள் இளவரசர்களின் அரண்மனைகளின் ஆடம்பரத்தை கண்டார். பழக்கவழக்கங்கள், மொழிகள், இனங்கள், உட்பிரிவுகள் இவற்றின் வேறுபாடுகளுக்கு இடையே இந்தியாவின் ஒருமைப்பாட்டினை கண்டுணர்த்தார். இவ்வாறு அலைந்து திரிந்ததன் மூலம் பரந்த அனுபவத்தைப் பெற்று, நம் நாட்டு மக்களின் சக்தியையும், பலவீனத்தையும் நன்கு ஆராய்ந்தார் . இந்த அனுபவங்கள், ஆராய்ச்சி அனைத்தும் அவர் பிற்காலத்தில் உலக அரங்கில் மாபெரும் மதபோதகராகவும், அமைப்பாளராகவும் பங்கெடுத்தபோது மிகவும் உதவியாக இருந்தன. இவ்வாறு அலைந்து திரிந்தபோது கண்ட ஏழை மக்களின் கொடிய வறுமை நிலை இவர் மனதின் உள்ளே வாழ்நாள் முழுவதும் அரித்து கொண்டே வந்தது. ‘அவர்களுக்கு எவ்வாறு உதவி செய்வது ?’ என்ற ஒரு எண்ணம் அவரை முழுவதும் ஆட்கொண்டது. அவரது பிற்கால வாழ்க்கையில் அவரது ஆன்மீகப் பெரு முயற்சியுடன் கூட, மற்ற முயற்சிகள் அனைத்திலும், இதுவே முக்கிய அங்கம் வகித்தது.

இவ்வாறு செய்த பிரயாணங்களின் போது, அவர் அக்காலத்தில் சிறந்து விளங்கிய பல சான்றோர்களை சந்தித்தார். சில இளவரசர்கள் அவரது தன்மையில் ஈர்க்கப்பட்டு, அவரது நண்பர்களாகவும், சீடர்களாகவும் மாறினர். அவர்களுள் ஒருவர், இவரது மனமார்ந்த சீடரான கேத்ரி மகாராஜவான அஜித்சிங்.

நம் எல்லோருக்கும் பாடமாகவும், முக்கியத்துவம் மிகுந்ததாகவும் உள்ள ஒரு சிறிய சம்பவம், அவர் ஆழ்வாரில் தங்கியிருந்தபோது நடந்தது. அரசவைக்கு வரும்படி மந்திரி இவரைக் கேட்டுக் கொண்டார். இளைஞரானமஹாராஜா மேனாட்டுக் கல்வி கற்றவர்; ஆகவே, நவீனக் கருத்துக்களும், நம்பிக்கையற்ற மனப்பான்மையும் கொண்டவர். ஆகையால் அவர் அலட்சிய பாவனையுடன், “ஸ்வாமி, நீங்கள் கடவுளைப் பற்றிப் பேசுகிறீர்களே, கோவிலிலுள்ள கல்தெய்வைங்களை நீங்கள் நம்புகீறிர்களா?” என்று கேட்டார். விவேகானந்தர், “ஆம், நிச்சயமாக” என்று பதிலளித்தார். மஹாராஜா மறுபடியும், “கடவுள் எவ்வாறு கல்லாலான ஒன்றாக இருக்க முடியும்?” என்று கேட்டார். ஸ்வாமி மந்திரி பக்கம் திரும்பி “தயவு செய்து மஹாராஜாவின் படத்தைச் சுவற்றில் இருந்து எடுத்து என்னிடம் கொடுங்கள்” என்றார் . மந்திரி அவ்வாறே செய்தபோது, அவரிடம் “இதன் மேல் எச்சில் துப்புங்கள், இது மஹாராஜா இல்லை “ என்றார். மந்திரி “ஒ ! என்னால் இயலாது; எப்படி இவ்வாறு செய்ய முடியும்” என்றார். விவேகானந்தர் மஹாராஜாவிடம் திரும்பிக் கூறினார், “நான் கூறுவது உங்களுக்கு விளங்குகிறதா? கல், படத்தைப் போன்ற ஒரு சின்னம் – முடிவான பேருண்மையான இறைவனைக் குறிக்கும் ஒரு புனிதமான அடையாளம்” என்று கூறினார். அபு மலையில், அவர் ஒரு முஸ்லீம் அன்பர் வீட்டிற்க்கு அழைக்கப்பட்டிருந்தார். ஹிந்து அல்லாதவர்களிடமிருந்து உணவை ஏற்றுக் கொள்ள இவர் சம்மதிப்பாரா என்று சங்கையுற்று, உணவினை அளிக்கத் தயங்கினார். அவர் எண்ணத்தை அறிந்த ஸ்வாமி, “எனக்கு எல்லா ஜாதியினரும், மதத்தினரும் ஒன்றே; எல்லோரும் எனது சகோதரர்கள் “ என்றார்.

பூனாவில், அவர் புகழ் பெற்ற தேசியத் தலைவராகிய பாலா கங்காதர திலகருடன் தங்கினார்.

மைசூர் மஹாராஜா அவரிடம் முகுந்த மரியதை கொண்டிருந்தார். மேனாட்டுக்குச் சென்று அங்குள்ள மக்களிடம் வேதாந்தத்தின் எக்காலத்துக்கும் உண்மையான கருத்துக்களை பற்றிக் கூற, பொருளாதார உதவி அளிப்பதற்கு முன் வந்தார். மைசூரிலிருந்து ஸ்வாமி விவேகானந்தர் திருவனந்தபுரம் சென்று, பிறகு கன்னியாகுமரிக்கு வந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன