சீதையைக் கவர்ந்து செல்லுதல்

Print Friendly, PDF & Email
சீதையைக் கவர்ந்து செல்லுதல்

Abduction of Sita

சூர்ப்பணகை உடனே தன் சகோதரன் இராவணனின் பாதுகாப்பை வேண்டி, இலங்கைக்குச் சென்றாள். சூர்ப்பணகையின் பறிதாபமான தோற்றத்தைக் கண்டு இராவணன் மிகவும் கோபமுற்றான். இராமர், சீதை, லட்சுமணன் மூவரும் பஞ்சவடியில் எந்தப் பாதுகாப்புமின்றி வசிப்பதாகவும், பூலோகத்தில் சீதையே பேரழகி என்றும் கூறினாள். இராவணன் சீதையைக் கவர்ந்து வர ஒரு திட்டம் தீட்டினான். அவன் மாரீசனிடம் சென்றான். மாரீசனுக்கு தன் விருப்பப்படி எந்த உருவத்தையும் எடுத்துக் கொள்ளக் கூடிய சக்தி உண்டு. இராவணன் மாரீசனை ஒரு அழகான பொன் மானாக உருவெடுத்து இராமரைக் காட்டிலிருந்து வெகு தூரத்திற்கு அழைத்துச் சென்று உதவுமாறு வேண்டினான்.

மாரீசன் இராவணனை எவ்வளவோ இராமரிடமிருந்து விலகிச் செல்லுமாறு அறிவுறுத்தியும் இராவணன் கேட்கவில்லை. ஆனால் தன் திட்டத்திற்கு மாரீசன் ஒப்புக் கொள்ளாவிட்டால் அவனைக் கொன்று விடுவதாக இராவணன் பயமுறுத்தினான். மாரீசன் இராமரின் கைகளாலேயே தான் இறக்க முடிவு செய்து சீதை அபகரிக்கும் இராவணனின் திட்டத்திற்கு ஒப்புக் கொண்டான். அதனால் மாரீசன் ஒரு பொன் மானாக உருவெடுத்து இராமரின் குடிலுக்கு அருகில் சென்றான். சீதை அந்த மானைத் தன்வசமாக வைத்துக் கொள்ள ஆசைபட்டாள். இராமர் சீதையை லட்சுமணனின் பாதுகாப்பில் விட்டு விட்டு அந்த மானை விரட்டிப் பிடிக்கக் காட்டில் அதன் பின்னே சென்றார்.

குருமார்கள் குழந்தைகளுக்குச் சொல்லவேண்டியது: பொய்மையும் மாயையும் அனைவரையும் விரைவில் ஈர்த்து மதிமயக்க வைக்கும் தன்மை கொண்டது. ஒருமுறை இதன் கவர்ச்சியின் பிடியில் சிக்குண்டால் பிறகு இதிலிருந்து வெளிவருவது என்பது மிகுந்த போராட்டமானது. சீதை தனது சந்தோஷங்களையும் அரண்மனை செல்வங்களையும் சுகபோகங்களையும் துறந்து இராமர் பின் காட்டிற்கு சென்றது எதற்காக? எப்போதும் இராமருடனேயே இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் பொன்மானைக் கண்டு மயங்கியதல், ஒரே கணத்தில் அவளது துறவுநிலை ஆசையாக மாறியது. இதனால் இராமர் அவளிடமிருந்து தூர விலகிச் செல்ல வேண்டியதாயிற்று.(இராமனும் காமனும் ஒரே இடத்தில் இருக்க இயலாது.)

சுவாமி கூறுகிறார், நாம் நம்மைச் சுற்றியுள்ள உலகாயத விஷயங்களில் ஆசைப்பட்டு அவைகளை அனுபவிக்க விழையும் போது கடவுளின் ஞாபகம் வருவதில்லை. கடவுள் ஒருவர் உள்ளார் என்பதையும் கூட மறந்து விடுகிறோம். இவைகளால் நிரந்தர சந்தோஷமும் கிடைப்பது இல்லை.

கற்றுக்கொள்ள வேண்டிய நீதி: மின்னுவதெல்லாம் பொன் அல்ல. தோற்றம் எல்லாம் மாயை.

ஆசைகள் அளவுக்கு மீறி நம்மை அடிமையாக்கும் போது சுயக் கட்டுப்பாட்டை கடை பிடிக்க வேண்டும். இல்லையென்றால் இதுவே நம் அழிவுக்கு காரணமாகிவிடும். சுவாமி இதை அழகாக கூறுவார் : காமன் வந்தால் இராமன் போய்விடுவார்.

காட்டில் வெகுதூரம் சென்ற பிறகு இராமர் அந்த மானின் மீது அம்பெய்தி அதைக் கொன்றார். ஆனால் இறக்கும் தருவாயில் மாரீசன் தன் குரலை இராமரின் குரலைப் போல் மாற்றி லட்சுமணா! சீதா! என்று கத்தினான். சீதை அந்த குரலைக் கேட்டதும், லட்சுமணனை இராமரின் உதவிக்குச் செல்லுமாறு வேண்டினாள். லட்சுமணன் இராமரின் ஆணையை மீற விரும்பாமல், இராமருக்கு எதுவும் நேராது என்று சீதையிடம் கூறினான். ஆனால் சீதை வற்புறுத்தினாள். லட்சுமணன் சீதையை தன் தாயாக மதித்ததால் அவளுடைய ஆணையை அவனால் மறுக்க முடியவில்லை. அவன் அந்த குடிலைச் சுற்றி நான்கு கோடுகள் கிழித்து, சீதையை, அதைத் தாண்டி வராமல் இருக்கக் கூறினான். லட்சுமணன் அந்த இடத்தை விட்டு அகன்றதுமே இராவணன் ஒரு சன்யாசியைப் போல் வேடம் தரித்து அந்த ஆச்ரமத்தை நெருங்கி பிக்ஷை கேட்டான். அவனால் லட்சுமணன் கிழித்த கோட்டை தாண்டி உள்ளே வர முடியவில்லை. அதனால் சீதையிடம் தான் மிகவும் பசியாக இருப்பதால் அவளை வெளியே வந்து தனக்கு பிக்ஷை இடுமாறு வேண்டினான். சீதை கோட்டைத் தாண்டிய மறு நிமிடமே, சீதையை இராவணன் தன் தேரில் கவர்ந்து சென்றான்.

குருமார்கள் குழந்தைகளுக்குச் சொல்லவேண்டியது: நமது பெற்றோர்களும், ஆசிரியர்களும், பெரியவர்களும் நம்மை சில காரியங்கள் செய்வதை தடுப்பதோ அல்லது கண்டிப்புடன் வீட்டிலேயே அல்லது வகுப்பிலேயே இருக்க வேண்டும் என்று கூறும்போது அவர்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து பின்பற்ற வேண்டும். ஏனென்றால் கட்டுப்பாடுகளை வலிய நம்மிடம் திணிப்பது நமது நன்மைக்காகவேதான். பதிலுக்கு இந்தக் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேற முயற்சித்தால் இதன் பின் விளைவுகள் அழிவை நோக்கியே இருக்கும்.

கற்றுக்கொள்ள வேண்டிய நீதி : மூன்று டி’ க்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது. கடமை, பக்தி, ஒழுக்கம் : சுவாமி கூறுவது: ஒழுக்கம் இல்லாமல், கடமையும் பக்தியும் மட்டும் இருந்தால் பலனில்லை.

கழுகுகளின் அரசன் ஜடாயு,சீதையைக் கவர்ந்து செல்லும் இராவணனுடன் முடிந்த வரை போரிட்டது. இராவணன் அதன் சிறகுகள் இரண்டையும் வெட்டி வீழ்த்தி விட்டு சீதையை அழைத்துச் சென்று விட்டான். இராமரைப் பார்க்கும் வரை தன் உயிரை விட மறுத்து அழுது புலம்பியது ஜடாயு. இராமரிடம் நடந்தவைகளை சொல்வதற்காக முழு பிரார்த்தனையுடன் இராமருக்காக காத்திருந்தது. இராமர் பொன் மானைக் கொன்ற பிறகு தன்னுடைய ஆச்ரமத்திற்குச் சென்ற போது அங்கு சீதையைக் காணவில்லை. இராமரும் லட்சுமணனும் சீதையைத் தேடிச் சென்றனர். வழியில் ஜடாயுவை சந்தித்தனர். ஜடாயு நடந்தது அனைத்தையும் இராமரிடம் கூறியது. பிறகு ஜடாயு இராமர் கையால் தண்ணீர் பருகி தன்னுடைய இறுதி மூச்சை விட்டது.

குருமார்கள் குழந்தைகளுக்குச் சொல்லவேண்டியது :ஜடாயு நேர்மையானவனும் தர்மவானும் ஆவார். சீதையைக் காப்பாற்றுவதற்காக தானாகவே முன் வந்து அதர்மவான் ராவணனிடம் சண்டையிட்டார். ஜடாயுவிற்கு வயது முதிர்திருந்த போதிலும் வலிமைமிக்க ராவணனிடம் தனியாகவே போரிட முயன்றார். நமது காரியங்கள் அனைத்தையும் நேர்மையான, தர்ம வழியில் செயல்படுத்த அன்பையும் நேர்மையையும் பேணி வளர்க்க வேண்டும்.

குழந்தைகள் தைரியமும் மன உறுதியும் கொண்டு பயமில்லாமல் இருந்தால்தான் :
1) வாழ்க்கையில் வரும் எந்த அறைக்கூவல்களையும் தனது திறமைக்கும் சக்திக்கும் ஏற்றவாறு முயன்று எதிர் கொள்ளலாம்.
2) தீனர்களுக்கு ஆதரவாக செயல் படலாம். (யாரேனும் தனது பலத்தால் அடுத்தவரை கொடுமைப்படுத்தும்போது வெறும் பார்வையாளராக இருக்காமல் உடன் சென்று உதவிசெய்தல் )

(இங்கு குருமார்கள் மிகவும் விரிவாக விளக்கி கூறவேண்டும். உரிமைக்காக போராடுவது தர்மத்தின் வழயில் இருக்க வேண்டும். ஏதேனும் நேர்மையற்றதும் அநியாயமானதுமான விஷயங்களை பிள்ளைகள் காணும்போது தானே சண்டைக்கு செல்லாமல், அவர்களது பெற்றோர்களிடமோ அல்லது பெரியவர்களிடமோ தெரிவிக்க வேண்டும்).

கற்றுக்கொள்ள வேண்டிய நீதி : உனது செயலில் நேர்மையுள்ளவனாக இரு / உனது இலக்கில் குறியாக இரு/ வாழ்க்கை ஒரு அறைக்கூவல் – எதிர் நோக்கு / சிறப்பான மனிதனாக இரு . சிறப்பற்ற மனிதனாக இராதே/ நேர்மையும் தர்மமும் நிறைந்த செயல்கள்தான் கடவுளை வெகுவாக திருப்தி படுத்தும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: