இன்னாசெய்யாமை (அகிம்சை)

Print Friendly, PDF & Email
இன்னாசெய்யாமை (அகிம்சை)

இருக்கும் எல்லாவற்றின் ஒருமை நிலையும் ஒற்றுமைநிலையும், அத்வைத விழிப்புநிலையும், ஆத்மாவைப்பற்றிய விழிப்பின் முழுமையான மலர்ச்சியும் ஆகிய இவற்றின் பயனே அகிம்ஸையாகும். அது, எல்லா உயிரின், படைப்பின் முழுமையான ஒருமை (Identity)யினைப்பற்றிய உணர்வும் நிலையுமாகும். அது ஆன்மீக அறிவுணர்வனுபவத்தின் பயனாகும். அது முழுமையாக விழிப்படைந்த ஆன்மாவின் பண்பும், வெளித்தோன்றும் அம்சமாகும். (Attribute). அது எவ்விடத்திலும் இறைவனொருவரையே காண்கிறது. அது, இறைவன் எல்லா இடத்திலும் உளதாகி (beings)இருப்பதையும், படைப்பின் ஒவ்வொரு துணுக்கிலும் இருப்பதையும் காண்கிறது. அவ்வாறு விழிப்படைந்தசீவன், ஒவ்வொருவரின், ஒவ்வொரு உயிரின் இன்பமும் துன்பமும் தன்னிலே இருப்பதாகவே உணரத்தொடங்குகின்றது. அத்தகையவர் தனக்கும் மற்றவருக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் காண்பதில்லை. அது, ஆத்மாவிடமிருந்த பாகுபாடற்றுப் பரிசுத்தமாக உருகியோடும் அன்பாகும்.

தனி மனிதன், மற்ற தனி மனிதனுடனோ மனிதர்களுடனோ, தொடர்பு கொள்ளும்போது ஏற்படும் பிரதிபலிப்புணர்வுகளில்(Responses) சத்யம், தர்மம், சாந்தி, பிரேமை உட்கிடக்கையாக இருந்து ஆளுமைத் தன்மையினை நிறைவிப்பனவாகும். அகிம்சையோவெனில், ஒருவர் சமூகத்திற்குச் செய்ய வேண்டியநன்றிக்கடன், உலகனைத்தையும் பற்றி, எல்லா உயிர்களையும் பற்றிய பொதுநோக்கு ஆகியவற்றில் வெளிப்படுத்திக் கொள்வதாகும். அது, முழுமையாக விரிவடைந்த, முழுமையினையும் தன்னுள் அடக்கிய பேரன்பாகும். வேறுபாடின்றி எங்கும் வெளிப்படுத்துகின்ற பேரன்பாகும்.

எல்லாச் சமயங்களும் அகிம்ஸையே மனிதனின் மிகவுயர்ந்த கடமை “ அஹிம்ஸா பரமோ தர்ம:” எனப் போற்றுகின்றன. இது புறப்பொருள் பற்றியது மட்டுமல்ல, எண்ணத்திலும், சொல்லிலும், செயலிலும் அகிம்ஸை வெளிப்படல் வேண்டும். அதுவே உண்மையான அகிம்சையாகும்.

மேற்கண்ட ஐந்து குணமேம்பாடுகளும், வாழ்க்கையின் மற்றெல்லாக் குணநலன்களையும் (Virtues)மேம்பாடுகளையும் தம் முள்அடக்கியவை. இம்மேம்பாடுகளை இலட்சியமாகக் கொண்டு, இவற்றைச் சாரமாகக் கொண்டு இதயத்தையும் மனதையும் பண்படுத்தி, நமது அறிவுப்புலனையும், சங்கற்பபலத்தையும் நேர்வழியில் செல்லுமாறு ஒழுங்குபடுத்தி, இம்மேம்பாடுகளுக்கு இசைந்தவாறும், இவற்றில் தோய்ந்தவாறும் நமது நடத்தையைச் சீர்படுத்தி இவ்வாறு வாழ்வதே நேரான வாழ்க்கையாகும். இவ்வாறு நமது நன்மையினைப் பெருக்கிக் கொள்கிறோம். தெய்வ சங்கற்பத்துடன் இசைந்து. இறைவன் திட்டமிட்டபடி வாழ்கின்றோம்.

இதுவே சாயி அருளுகின்ற நற்செய்தி, இவ்வுபதேசத்தை சாயி தன் சொந்த வாழ்க்கை மூலமாகவும், முன்னு தாரணத்தின் மூலமாகவும், எப்போதும், நமக்குக் கற்பித்துக் கொண்டேயிருக்கிறார். நாம் சாயி வழியிலேயே நடப்போம், அவரது காலடிச் சுவடுகளையே பின்பற்றி நடப்போம்; நம்மைப் புனருத்தாரணம் செய்து கொள்வோம். நம்மால் முடிந்த அளவு எளிய சிறிய வழியில் உலகத்துக்கும், சமூகத்துக்கும் நல்லதையே செய்வோமாக.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: