கட்டிடக்கலை

Print Friendly, PDF & Email
கட்டிடக்கலை

இந்தியாவில் அற்புதமான கட்டிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சிந்துப் பள்ளத்தாக்கு நாகரீகக் காலம் சிறந்த செங்கற்கட்டிடங்களுக்குப் பெயர் போனது. அந்த நாகரீகத்தைப் பற்றிய புத்தகங்களைப் படிக்கும்போது, நமது முன்னோர்கள், கட்டிடக்கலையைப் பற்றி மிக உயர்ந்த கருத்துகளும், மிகச் சிறந்த திறமைகளும் கொண்டிருந்தார்கள் என்று அறிகிறோம். சிந்துப்பள்ளத்தாக்கு நாகரீகத்துக்கு அடுத்தாற்போல, இந்திய வரலாற்றில் ஆரியர்களின் நாகரீகம் தொடங்கியது. கட்டிடக்கலையில் சமய உணர்வு தோன்றியது. இக்காலத்தில் உள்ள சமயச் சார்புக்குச் சிறந்த உதாரணம் புத்த ஸ்தூபம். பழங்காலத்தில் புத்தர்கள் கணக்கற்ற நினைவுச் சின்னங்கள் (monuments) எழுப்பியுள்ளனர். அவற்றில் பல அழிக்கப்பட்டன அல்லது சீர்குலைந்தன. மிஞ்சியுள்ளவற்றில் ஒன்றான சாஞ்சி ஸ்தூபம் உலகப் பிரசித்தி பெற்றது. அசோக சக்கரவர்த்தி புத்த மதத்தினராக மாறிய பொழுது, சாஞ்சி ஸ்தூபியைப் புதுப்பித்தார். புத்தர்கள் கல்வெட்டுச் சிற்பங்களில் தேர்ச்சி பெற்றனர். இந்தியக் கோவில்கள்,
சில ஹிந்து சிற்பக்கலையின் மிகச் சிறந்த கைவண்ணமாக, நம் நாட்டவரும் அதிசயிக்கும் வண்ணம் திகழ்கின்றன. (ஹிந்துக்கள் எங்கு சென்றாலும், கோவில்கள் கட்டுவது வழக்கம்) மிக அற்புதமான சிற்பக் கலைவண்ணம் மிகுந்த மிகப்பெரியகோவில்கள் பல, வெளிநாட்டாரின் படையெடுப்பின் போது அழிக்கப்பட்டன. இருக்கும் கோவில்களைக் கண்டு, மற்றவற்றின் சிறப்பினையும் நாம் ஒருவாறு யூகிக்கலாம். ஒரிஸ்ஸாவில் உள்ள லிங்கராஜா கோவில், கொனாரக்கிலுள்ள சூரிய தேவன் கோவில், மத்தியப்பிரதேசத்திலுள்ள கஜுரஹோ கோவில்கள் போன்ற மற்ற பல கோவில்களும் சிற்ப வேலைப்பாட்டில் தலை சிறந்தவை, புகழ்மிக்கவை. அது போலவே, திராவிடபாணியில் கட்டப்பெற்ற தென்னிந்தியக் கோவில்களும் மிகப் பிரசித்தி பெற்றவை. மதுரையிலுள்ள மீனாட்சி கோவில், காஞ்சிபுரத்திலுள்ள வரதராசர் கோவில், மைசூரிலுள்ள பேலூர், ஹலபீடு, கோமதீஸ்வரர் கோவில்கள் இவை தென்னாட்டில் தலைசிறந்த சில கோவில்கள்.

நாட்டின் தலைசிறந்த கட்டிடங்கள் சில, பேரும் ஊரும் தெரியாத முகலாயச் சிற்பிகளால் கட்டப் பெற்றவை. ஷாஜஹான் சக்ரவரத்தி கட்டிய தாஜ் மஹாலைப் பற்றி யாவரும் அறிவர். சலவைக் கல்லில் கட்டப்பட்ட அந்தக் கட்டிடம், உலகிலுள்ள அதிசயங்களில் ஒன்று என்பதை உள் நாட்டவரும் சரி, வெளிநாட்டவரும் சரி, ஒப்புக்கொள்வர். மொகலாயர்கள் ஆண்ட காலத்தில், பல அழகான மசூதிகள் கட்டப்பட்டன. அடிமை அரசர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட டெல்லியிலுள்ள குதுப்மினார், உலகில் கட்டப்பட்ட அபூர்வமான ஸ்தூபிகளுள் ஒன்று. ஷாஜஹானின் பாட்டனார் அக்பர் கட்டிய பதேபூர் ஸிக்ரி, அபூர்வ வேலைப்பாடமைந்த ஒன்றாகும். ஜைனக் கோயில்களும், சீக்கியக் கோவில்களும் இந்தியக் கலாச்சாரத்துக் குத்துணைபுரிபவை.

சிற்பக்கலையில் இந்தியர்கள் பழங்காலத்தில் வல்லுனராக இருந்ததை தற்கால மக்கள் புரிந்துக் கொண்டு, நமது கலாச்சாரத்தின் சாரத்தை கிரஹித்து பெருமையடைய வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன