அர்ஜுனனின் ஒன்றிய கவனம் — ஒருமுக மனக்குவிப்பு
அர்ஜுனனின் ஒன்றிய கவனம் — ஒருமுக மனக்குவிப்பு
முன்னொரு காலத்தில் திருதராஷ்டிரன் என்று ஓர் அரசன் இருந்தான். அவனுக்கு பாண்டு ராஜன் என்ற இளவல் இருந்தான். திருதராஷ்டிரனுடைய மக்கள் கௌரவர் எனப் பெற்றவர். பாண்டுவின் புதல்வர் பாண்டவர் எனப் பெற்றனர், எல்லா இளவரசர்களும் குரு துரோணாச்சாரியிடம் அவரது மாணவராக கல்வி கற்று வந்தனர். அவர் எல்லா பாடங்களையும கற்பித்ததோடு அவர்களுக்கு வில்வித்தையும் சிறப்புறக் கற்பித்தார். பாண்டவரிடையே அர்ஜுனன் மூன்றாவது இளவரசனாவான். பாண்டவர் ஐவர். கௌவரர்கள் நூறு பேர்கள்.
அனைத்து இளவரசர்களிலும் அர்ஜுனன் கூர்மையான அறிவு பெற்றவன். அனைத்து பாடங்களிலும் முதலாவதாக இருந்ததோடு, குறிப்பாக வில்லாண்மையில் அவன் மிகச் சிறந்தவனாக விளங்கினான். வில்லாண்மை கலையில் அவன் காட்டிய தீவிர ஆர்வமும், தேர்ச்சியும் அவனைத் துரோணாச்சாரியரது அன்பிற்குகந்தவனாக உயர்த்தியது. மேலும் அர்ஜுனன் கடின உழைப்பாளி. பாடங்களில் கருத்து மிக்கவன். அர்ஜுனனது இத்தகைய சிறப்புகள் கௌரவ சகோதரர்களைப் பொறாமை கொள்ளச் செய்தது. ஆனால் அவனுடைய இந்த உயர்வு அவனுக்கு ஆசிரியரது தனி அன்பைப் பெற்றுத் தந்தது. அர்ஜுனன் துரோணரது அன்பிற்குகந்த மாணவனாக சிறக்கவே, துரியோதனாதியர்கள் அவன் மீது, அழுக்காறு கொண்டு வந்தனர். ஆசிரியர் பாரபட்சமாக நடந்து கொள்கிறார் என்றும், அர்ஜுனனிடம் தனிப்பட்ட அன்பு செலுத்துகிறார் என்றும் குறை கூறினர்.
இந்த குற்றச்சாட்டு, எப்படியோ துரோணரது காதுகளுக்கு எட்டிவிட்டன. இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டைத் தடுத்து அந்த கௌரவ இளவரசர்களது மனத்தில் உண்மையை விளக்க விரும்பினார். துரோணர், இது ஓரவஞ்சனை அல்ல. அர்ஜுனன் தன் அறிவின் திறத்தினால் ஆசிரியரிடம் தானே பெற்ற தனி அன்பு என்பதை எடுத்துரைக்க முயன்றார்.
ஒரு நாள் துரோணர் தமது மாணவர் அனைவரையும் ஒரு சேர அழைத்தார். அவர்களிடம் “குழந்தைகளே! கூர்ந்து கவனியுங்கள்! வில் வித்தையில் உங்கள் சாமர்த்தியத்தை நான் சோதிக்கப் போகிறேன். நீங்கள் அந்தக் கிளையிலிருக்கும் குருவியைக் குறிப் பார்த்து அம்பு எய்ய வேண்டும்” என்றார்.
மாணவர் அனைவரும் மகிழ்ச்சி கலந்த ஆர்வத்தோடு, “ஆகட்டும் ஐயா” என்றபடி ஆயத்தமாக முன் வந்தனர்.
துரோணர் துரியோதனனிலிருந்து ஒருவர் பின் ஒருவராக ஒவ்வொருவரையும் தம் அருகே அழைத்தார். அவர், “துரியோதனா! அந்த மரத்தில் இருக்கும் குருவியின் மீது நீ அம்பு எய்ய வேண்டும். நீ அதைப் பார்க்கிறாய் அல்லவா?” என்று கேட்டார்..
“ஆம் ஐயா, நான் அதை நன்கு பார்க்க முடிகிறது” என்று விடையிறுத்தான் துரியோதனன். “இன்னும் என்னவெல்லாம் நீ பார்க்கிறாய்?” என்று மேலும் கேட்டார் ஆசிரியர். “ஐயா! மேலே இருக்கும் நீல வானத்தையும் பெரிய மரத்தையும், அடர்ந்து இருக்கும் இலைகளையும். தாங்கள், என் தம்பியர், தர்மஜா, மற்றவர்களையும் எல்லாம் கூடத்தான் பார்க்கிறேன்” என்று துரியோதனன் பெருமையோடு விடையிறுத்தான்.
துரோணர் உடனே,” நீ போகலாம்” என்று அவனை அனுப்பிவிட்டார். அதேபோல மற்ற மாணவர் அனைவருமே அங்ஙனம் அனுப்பப்பட்டனர். எல்லோருமே ஏறக்குறைய துரியோதனனை போலவே விடையிரறுத்தனர்.
இறுதியில் அர்ஜுனன் முறை வந்தது. துரோணர் அவனிடம், “அர்ஜுனா! அந்த பெரிய மரத்தின் கிளை உச்சியில் இருக்கும் குருவியை பார்க்கிறாய் அல்லவா?” என்று கேட்டார்.
அர்ஜுனன், “ஆமாம் ஐயா!” என்றான்
“வேறு என்னென்ன பார்க்கிறாய்?” தொடர்ந்து துரோணர் கேட்டார்.
“வேறு எதையும் நான் காணவில்லை ஐயா!” என்று அர்ஜுனன் கூறினான் .
“வானம், மரம், கிளைகள், இலைகள் எதுவுமே உன் கண்களில் படவில்லையா?” என்று மீண்டும் கேட்டார்.
“இல்லை ஐயா! அந்தக் குருவியைத் தவிர நான் வேறு எதையுமே காணவில்லை” என்று அர்ஜுனன் பணிவோடு கூறினான். அதை கேட்டதும் துரோணர் மட்டற்ற மகிழ்ச்சி பெற்றார். “நீ போகலாம்” என்று உவந்து கூறினார். இத்தகையத் தேர்வினால், துரோணர் தம் மாணவர்களுக்கு எத்தகைய சிறப்பை உணர்த்த முயன்றார் என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். இது ஒரு வில்லாண்மைத் தேர்வு என்று அவர் கூறிய போதிலும், செயலில் கருத்தூன்றி இருப்பதற்கான தேர்வுதான் இது என்று உறுதியாக கூறலாம். ஒருவனது செயல் வெற்றி பெற, ஆற்றப் பெரும் செயலிலேயே ஒருமுகமாக மனம் குவித்து இருப்பது முக்கியமாகத் தேவை என்ற கருத்தை மாணவருக்கு வலியுறுத்திக் கற்ப்பிக்கவே துரோணர் விரும்பினார். எந்த மாணவனுக்கும் கவனத்தைத் திருப்பும் நிகழ்ச்சிகள் எதுவுமே ஏற்படக் கூடாது. வாழ்க்கையில் ஒவ்வொரு அடியிலும் கவனக்குறைவு தோல்வியை ஏற்படுத்தி விடும்.
கேள்விகள்:
- துரோணாச்சாரியாரால் அர்ஜுனன் ஏன் மிகவும் விரும்பப் பெற்றான்?
- உண்மையாக, நடத்தப்பெற்ற தேர்வு எதைக் குறித்தது? வில்லாண்மைக்காகவா? ஒன்றிய கவனத்திற்காகவா? அதைத் தெளிவாக உன்னுடைய சொற்களில் விவரித்துக் கூறு.