உணவை ஒத்து எண்ணங்கள் அமையும்

Print Friendly, PDF & Email
உணவை ஒத்து எண்ணங்கள் அமையும்

பீஷ்மர் வீழ்ச்சியடைந்தது மகாபாரதப் போரின் பத்தாவது நாளிலாகும், அன்றிலிருந்து, பதினெட்டாம் நாள் போர் முடியும்வரை, கிருஷ்ணர், யுத்தத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளைக் கவனித்துக் கொண்டிருக்க, பீஷ்மர், அர்ஜுனனின் அம்புகளைக் கொண்டு தானே அமைத்துக் கொண்ட அம்பு படுக்கைமீது படுத்துக் கொண்டிருந்தார். போரின் இறுதி நாளன்று, வெற்றி வீரர்களான பாண்டவர்கள் திரௌபதியோடு பீஷ்மரிடம் அவரைச் சேவிக்க வந்தனர். அம்பு படுக்கையில் படுத்தவாறே பீஷ்மர் அவர்களிடம் மிகுந்த பாச உணர்வோடு பேசினார். அவர்களுக்கு சாந்தி பருவம் என்று போற்றப் பெறும் அமைதி நூலைப் போதித்தார். அந்தச் சூழ்நிலையில் பீஷ்மர், ஒருவன் அமைதி பெறக்கூடிய ஒழுக்கநிலையின் இயல்புகளைப் போதித்துக் கொண்டிருந்தபோது, திரௌபதியின் மனத்தில் வேறு சில எண்ணங்கள் தோன்றவே, அவள் வாய் விட்டு உரக்கச் சிரித்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்தாள் உடனே பாண்டவர், அந்த நேரத்தில் பொருத்தமில்லாத, தகுதியற்ற, செயலாக அதைக் கருதியவர்களாய் பெரியோர்கள் கூடியிருந்த அந்த சமயத்தில் அவள் அங்ஙனம் சிரித்ததை அவர்கள் விரும்பாது இறுக்கமாக முகம் சுளித்தனர். ஆனால் பீஷ்மர் எல்லாம் அறிந்தவர். பாண்டவர் மனத்தில் ஓடும் எண்ணங்களைப் புரிந்து கொண்டார். அவர்களுக்கு தக்க ஆதாரத்தோடு விளக்கம் தரவேண்டி, திரௌபதியை தம் அருகே அழைத்தார். தீர்க்க சுமங்கலியாக வாழ அவளை ஆசிக் கூறி வாழ்த்தியருளினார். பிறகு அவள் எது செய்தாலும் பொருத்தமான காரணத்தோடுதான் செய்வாள் என்றும், அங்ஙனம் அவள் வெடித்துச் சிரித்ததற்கான காரணத்தைத் தன் கணவர்கள் அறிய எடுத்துரைக்கும்படியும் அவர் அவளைப் பணித்தார்.

திரௌபதி பீஷ்மரை மரியாதைக் கலந்த அன்போடு பணிந்து எழுந்தாள். பிறகு, பெரியோரே! துரியோதனன் சபையில் நான் மான பங்கம் படுத்தப்பட்டபோது, தாங்கள் ஒழுக்கத்தின் பண்புகளைப் பற்றி ஒன்றுமே பேசவில்லையே! என் கணவர்மார்கள் பன்னிரண்டு ஆண்டுகள் காட்டிற்கு விரட்டியடிக்கப்பட்ட போதும், ஓராண்டு மறைந்து வாழ கட்டளையிட்டபோதும், தாங்கள் ஒழுக்க இயல்புகளைக் குறித்து ஒரு சொல் கூட யாருக்கும் போதிக்கவில்லையே! இப்போது தர்மத்தின் திரு உருவங்களாக விளங்கும் பாண்டவருக்குச் சாந்தி பருவத்தைப் பற்றி விளக்குகிறீர்கள். இத்தகைய போதனை தேவையற்றவர்களுக்கு, ஏன் தங்கள் இப்போது இதைக் கற்றுக் கொடுக்கிறீர்கள். இந்த அறிவுரை துரியோதனனுக்கும் அவனைச் சார்ந்தவர்களுக்குமல்லவா கற்றுத் தரப் பெற்றிருக்கவேண்டும்! இது போன்ற எண்ணங்கள் என் நினைவில் ஓடியதால்தான் நான் அங்ஙனம் சிரித்தேன். அது மட்டுமல்ல, அரச சபையில் தர்மஜா சொக்கட்டான் ஆடி தோற்று வந்தபோது, தம்மையே பணயமாக வைத்தும் தோற்று விட்டார். அதன் பிறகு தான் என்னைப் பணயம் வைத்து ஆடினார். அப்போது பாண்டவர் வனவாசம் செய்ய வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள் நானும் அவமானப் படுத்தப்பட்டேன். அது தர்மமா என்று கூறுங்கள்! தாங்கள் தர்மத்தின் திரு உருவம், நேர்மையின் மறுவடிவம். குறிப்பட்ட அந்த நாளில், தர்மஜா தன்னையே பணயம் வைத்து தோற்ற பிறகு என்னைப் பணயம் வைக்க உரிமை பெற்றவரா என்பதைத் தாங்களே சிந்தித்துக் கூறுங்கள். அப்போது தாங்கள் உறுதியாக பின்பற்றும் தங்களுடைய நேர்மையான பண்பிற்கு என்ன நேர்ந்தது? அடுத்ததாக தம்மையே இழந்த பிறகே அவர் என்னைப் பணயம் வைத்து ஆடினார். அங்ஙனம் அவர் செய்ய ஓர் உரிமையும் அப்போது பெற்றிருக்கவில்லையே! அன்றைய தினமே, தர்மஜா முதலில் தம்மையே இழந்து, அதன்பிறகே என்னைப் பணயம் வைத்து ஆடினாரா அல்லது என்னை வைத்துச் சூதாடியபிறகே தம்மை வைத்து ஆடித் தோற்றாரா என்று தங்களிடமே நான் கேட்டேன், ஆனால் அதற்கு தாங்கள் மறுமொழியே சொல்லவில்லை. தங்களுடைய நேர்மையான நற்பண்புகளுக்கு அன்று என்ன நேர்ந்து விட்டது? இன்று ஒரு விதத்திலும் தேவையற்றிருக்கும்போது, பாண்டவர்க்குத் தாங்கள் நேர்மையின் இயல்புகளைப் பற்றி போதிக்கிறீர்கள் ?

இது கட்டாயம் சிரிக்கத் தகுந்த செய்திதானே! அதனால் என்னை உரக்க சிரிக்கத் தூண்டியது, என்று கூறினாள் திரௌபதி. வாழ்விற்கும் மரணத்திற்கும் இடையான நிலையில் ஊசலாடிக் கொண்டு, பீஷ்மர் கிடக்கும்போது, திரௌபதி அவ்வளவு உறுதியாக வாதாடி, பொருத்தமற்ற கேள்விகளைக் கேட்டு விவாதித்தது, தர்மஜாவைத் திடுக்குறச் செய்தது. எப்படியிருந்தபோதிலும் பீஷ்மரும் திரௌபதி கூற்றுக்கு வாய்விட்டு உரக்கச் சிரித்தார். அறிவிற்சிறந்து அங்ஙனமெல்லாம் அவள் கேட்டதற்காக அவளை வாழ்த்தினார். அவளது கேள்விகளுக்கு ஏற்ற விடைகள் வரப் போகும் கலிகாலத்திற்குப் பொருத்தமானவையாக இருக்கும் என்று கூறி பாண்டவரை அமைதிப் படுத்தினார்.

“பல ஆண்டுகாலமாக, தீய அரசர்களுக்கும், பழி பாவமே செய்தவர்களுக்கும் பணி புரிந்து வந்தேன். அவர்கள் எனக்குக் கொடுத்த உணவை, அவர்களது உப்பை உண்டு வந்தேன். அதனால் நேர்மையும், தர்மமும் என்னுள் ஆழப் புதைந்து போய் கிடந்தன. உன்னுடைய கணவன் அர்ஜூனன் விட்ட அம்புகள் என்னை துளைத்தபோது, என்னுள் ஓடிய தீய இரத்தம் எல்லாம் வடிந்து விட்டது, அப்போது என்னுள் புதைந்து கிடந்த தர்மம் மீண்டும் மேலெழுந்து வந்து விட்டது. அதனால்தான் நான் இப்போது நல்லியல்புகளைப் பற்றி பேச முடிகிறது.” என்றார் அவர்.

பீஷ்மர் உபதேசித்தருளிய சாந்தி பருவத்திலிருந்து நாம் ஒரு பாடம் கற்றுக் கொள்ளலாம், கெட்ட வழியாலும் தீயச் செயல்களாலும் ஒருவன் செறிந்து பணம் சேகரித்து செல்வந்தனானால் அவனது உடலிலும் தீய இரத்தம் ஓடி அதனால் அவனிடம் இருக்கும் நற்பண்புகள் அவனுள் ஆழப் புதைக்கபட்டுவிடும். இந்த கருத்தோடுதான் கிருஷ்ணர் சமைக்கும் பாத்திரங்கள், சமைக்கப் பெறும் பண்டங்கள், அந்த உணவைச் சமைப்பவர் கூட தூய்மையாக இருக்கவேண்டும், என்று வற்புறுத்தி கூறியுள்ளார்.

இந்த உரையாடலினால் பீஷ்மர், நாம் ஏற்கும் உணவிலும் தீங்கு நிறைந்திருக்கும் என்று உலகுக்கு உணர்த்தினார். நாம் உண்ணும் உணவைப் பொறுத்து எண்ணங்களும், நம்முள் எழுச்சி பெரும் எண்ணங்களுக்கேற்ப, நம் செயல்களும் உருவாகின்றன. நம் செயல்களுக்கேற்ப நம்முடைய நல்வினை, தீவினைகள் நிகழ்கின்றன. பொருத்தமான பாடங்களைப் பாண்டவர்க்குக் கற்பித்த பிறகு, பீஷ்மர் உயிரை விட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: