ஓம் – பகவானின் தெய்வீகப் பேருரையிலிருந்து
ஓம்–பகவானின் தெய்வீகப் பேருரையிலிருந்து
-
- மாறுபாடற்ற, சாசுவதமான, பிரபஞ்சம் மற்றும் தலையாய கடவுளின் சின்னமே ஓம். விண்ணில் தாரகைகளின் இயக்கமே ஓம். எப்பொழுது படைக்கும் சங்கல்பம் நிராகாரத்தைச் செயலாக்கத்துக்குக் கொண்டு வந்ததோ, அப்பொழுது வெளிப்படுத்தப்பட்ட ஒலியே ஓம் .
(SSS-தொகுதி 6, அத்.42).
-
- ஒவ்வொரு சிறுஅசைவும், நிகழ்வும் ஒலியை உருவாக்குகின்றன. உன் செவியின் கேட்கும் திறன் அவ்வளவு தான். ஆகவே மிகச்சிறு ஒலியை உன் காதால் கேட்கமுடியவில்லை. இமைகொட்டும் பொழுது ஒலி ஏற்படுகிறது. பூவிதழில் பனித்துளி விழும்பொழுது ஒலி கேட்கிறது. அமைதியைப் பங்கப்படுத்தும் ஒரு சிறு சலனம் கூட ஒலியை ஏற்படுத்துகிறது. ஆதிஇயக்கத்தால் ஒலி ஏற்பட்டது. தானே ஏற்படுத்திய மாயையில் அது பிரம்மத்தை மறைக்கிறது. அது தான் பிரணவ சப்தம் அல்லது ஓம். பிரணவத்தின் விரிவாக்கமே காயத்ரி. ஆகவே காயத்ரி பூஜிக்கத் தக்கதாக, மதிப்புடையதாக உள்ளது. காயத்ரியை ஆழ்ந்து சிந்திப்பதன் மூலம் ஆன்மீகவாழ்வில் அடியெடுத்து வைக்கிறோம்.
(SSS-தொகுதி 4, அத் .18)
-
- உங்களுக்கு ஆன்மீகச் செவி இருந்தால் ஓம் என்ற சப்தம் கேட்கும். கடவுள் ஓம் வடிவத்தில் சர்வத்திலும் உள்ளாரென்பதை அது புலப்படுத்தும். பஞ்சபூதங்களும் ஓம் என்னும் ஒலியை உண்டாக்குகின்றன. கோவில் மணியின் ஓம் என்ற தொனி சர்வ வியாபியான கடவுளின் சின்னமாகத் திகழ்கிறது. கோவில் மணி ஓம் என்று ஒலிக்கும் பொழுது நமக்கு உள்ளே உறைந்திருக்கும் தெய்வீக உணர்வு தட்டியெழுப்பப்படுகிறது. அப்பொழுது கடவுளின் இருப்பை நாம் உணர்கிறோம். கோயில் கருவறையில் ஒலிக்கப்படும் மணியின் பொருள் அதுவே.
(SSS-தொகுதி 1. அத்.9)
-
- ஓம்காரத்திற்கும், மற்றஒலிகளுக்கும், வார்த்தைகளுக்கும் இடையேயுள்ள வேறுபாடு யாது? ஓம்காரம் என்பது ஓதப்படுவது. அது தனித்தன்மை வாய்ந்தது. மற்ற வார்த்தைகள் உச்சரிக்கப்படும் பொழுது, உதடுகள், நாக்கு, கன்னங்கள், தாடைகள் ஆகியவை செயல்படுகின்றன. ஓம்காரத்தை ஓதும்பொழுது இவை எதுவுமே அசைவதில்லை. இது ஓம்காரத்தின் தனித்தன்மை ஆகும். ஆதலால், ஓம் மட்டும் அக்ஷரம் (அழியாதது). மற்றஒலிகள் அனைத்தும் பல்வேறு மொழிகளின் வெளிப்பாடுகளே.
- மிகச்சிறந்த உபதேசம் பிரணவமே. புனித அக்ஷரமான ஓம் இறையியல் தத்துவம் மற்றும் கடவுள் உணர்வை நேரடியாகப் பெறுதல் ஆகிய கோட்பாடுகளின் தொகுப்பாகும்.
- நடைபயிலும் குழந்தைகளுக்கு குறுக்குக்கட்டை உள்ள மூன்று சக்கரவண்டியைக் கொடுப்பார்கள். அந்தக் குறுக்குக்கட்டையைப் பிடித்துக்கொண்டு அது முன்னே செல்லும். ஆன்மீகக் குழந்தைக்கு நடைவண்டி ஓம். அந்த நடைவண்டியின் மூன்றுசக்கரங்கள் அ, உ, ம். மூச்சுக்காற்றில் கலந்துள்ள ஆதிஒலியே ஓம்.
(SSS-தொகுதி 5,அத்.46)
-
- நான்கு வேதங்களின் வெளிப்பாடும் விளக்கமுமே ஸ்ரீகிருஷ்ணனின் புல்லாங்குழல் இசை. அதன் சாரமே ஓம். ராமதத்துவத்தின் சின்னமே ஓம். ராம, லட்சுமண, பரத, சத்ருக்ன சகோதரர்கள் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களே.
(SSS-தொகுதி 14, அத்.9)
-
- உரக்க ஓசை எழுப்பும் மனஅலைகளை பிரணவ ஜபம் அமைதிப் படுத்தும். வேத போதனைகளும், கடவுளைப் பற்றிக் கூறும் அனைத்தும், மற்றும் அனைத்து வகை கடவுள் வழிபாட்டு முறைகளும் ஓம்காரமே. ஓம் இதி ஏகாக்ஷரம் பிரம்மம். ஓம் என்னும் ஓரெழுத்தே இறைவன்.
- அபினி (கஞ்சா – ஓபியம்)க்கு அடிமையான ஒருவனை மாற்ற ராமகிருஷ்ண பரமஹம்சர் அவனிடம் ஒரு சாக்கட்டியைக் (சாக்பீஸ்) கொடுத்தார். அதன் எடை அளவு அபினியை அவன் உட்கொள்ளலாம் என்றார். ஆனால் தினமும் ஓம் என்று பிரணவத்தை ஒரு சிலேட்டில் எழுதிவிட்டு சாக்கட்டி எடையை நிறுக்க வேண்டுமென்றார். அவனும் ஒத்துக் கொண்டான். ஒவ்வொரு முறையும் ஓம் எழுதப்பட்டதும், சாக்கட்டியின் எடை சிறிது சிறிதாகக் குறைந்தது. ஒரு நாள் சாக்கட்டி முற்றிலும் கரைந்தது. அவனுடைய போதைப் பழக்கமும் ஒழிந்தது. அபினியால் கிடைத்த போதையால் விளைந்த மாயையான அமைதி போய், ஓம்காரத்தால் நிலைத்த அமைதியும் ஆனந்தமும் அவனுக்குக் கிட்டின.
(SSS- தொகுதி 7, அத் .43)
-
- மூன்று ஒலிகளின் சேர்க்கையே ஓம். ‘அ’ காரம் நாபிக்கமலத்தில் இருந்து உருவாவது. ‘உ’ காரம் தொண்டை , நாக்கில் வெளிப்படுவது. ‘ம’ காரம் உதடுகளை மூடி நிறைவு செய்வது.
- ஓம் மந்திரத்தை ஓதும் பொழுது ஒரே மூச்சில், படிப்படியாக ஒலியை ஏற்றி, அவ்வாறே படிப்படியாகக் குறைக்க வேண்டும். ‘ம் ‘என்பது அமைதியான எதிரொலியாக இதயத்தின் உட்குழிவில் எதிரொலிக்க வேண்டும். என்னால் நீண்டநேரம் மூச்சைத் தக்கவைக்க முடியாது என்று, இரண்டு கட்டமாக ஓம்காரத்தை ஓதுதல் கூடாது.
- விழிப்பு, கனவு, ஆழ்ந்தஉறக்கம், தூங்காமல் தூங்கும்நிலை (துரியாஅவஸ்தை ) ஆகியவற்றை ஓம் குறிப்பிடுகிறது. பூகாயாகி, ரசம் உள்ள கனியாக மரத்திலிருந்து விழுவது போல ஓம் ஒருவரின் தனித்தன்மையைப் படிப்படியாக உயர்த்துகிறது.
(SSS- தொகுதி 10, அத், 13).
- பிரசாந்தி நிலைய நியமங்களுள் ஒன்று யாதெனில், காலையில் எழுந்ததும் ஓம்காரத்தை 21 முறை ஓதுதல் வேண்டும் என்பதாகும். 21 என்ற எண், மனதிற்கு தோன்றியபடி கூறப்பட்ட எண் அல்ல. 21 என்ற எண்ணுக்கு ஆன்மீக முக்கியத்துவம் உண்டு. கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, பிராணன்கள் ஐந்து, கோசங்கள் ஐந்து, மனம் ஒன்று ஆக 21 தத்துவங்களும் ஓம்காரத்தை ஓதுவதால் தூய்மை அடைகின்றன. 21 முறை ஓம்காரத்தை ஓதுவதால் ஜீவதத்துவம் பரதத்துவத்துடன் ஐக்கியமாகிறது (sss தொகுதி 14, அத்.3). ஜீவதத்துவத்தை 21 குதிரைகளில் பயணிக்கும் பயணியாக உருவகப்படுத்தலாம்..
- ஓம்காரத்தை ஓதியபின் மூன்று முறை சாந்தி கூற வேண்டும். இதனால் ஓம்காரத்தை ஓதுவதால் ஏற்படும் தெளிவும், தூய்மையும் நிறைவடைகின்றன. ஆதிபௌதீகத் (உடல்) தின் தூய்மைக்காக முதல் முறை சாந்தி, ஆதிதெய்வீகத்தின் (மனம்) தூய்மைக்காக இரண்டாவது முறை சாந்தி, ஆத்யாத்மிகத்தின் (ஆத்மா) தூய்மைக்காக மூன்றாம் சாந்தி கூறுகிறோம்.
- பிரணவத்தை ஓதினால் நீ உயர்நிலை அடைவாய். மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கும். இறைவன் அனுக்கிரகம் விரைவில் கிட்டும்.
(SSS-தொகுதி 14, அத் .3)