ஔவையார்

Print Friendly, PDF & Email
ஔவையார்
ஔவையாரின் சில பாடல்கள்- பொருள்களுடன்

ஈதல்அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காதலர் இருவர் கருத்தொருமித்து – ஆதரவு
பட்டதே இன்பம், பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.

பொருள்:

ஔவை மூதாட்டியின் தம்பியான திருவள்ளுவர், திருக்குறள் நூலில் அறம்பொருள் இன்பம் என்ற மூன்றையும் பெரிய அளவில் பேச, ஔவையார் உறுதிப்பொருள் (புருஷார்த்தம்- உறுதிப்பொருள்) நான்கையும் சுருக்கமாக விளக்குவதாக அமைந்த பாடல்:

கொடுத்தல் அறம் (தருமம்) ஆகும். தீவினை விட்டு ஈட்டியதே பொருள் ஆகும். (நல்லவழியில் சம்பாதிப்பதே பொருள்). உண்மையான அன்பினால் கருத்து ஒருமித்து இணைந்த இருவர் சேர்ந்து நடத்துகின்ற இல்லறமே இனிய இன்பம் ஆகும். பரன் எனப்படும் தெய்வத்தை நினைந்து இம்மூன்றையும் (அறம், பொருள், இன்பம்) விட்டதுதான் பேரின்ப வீடு (முத்தி).

ஈதல் என்பது இங்குப் பிறருக்கு உதவுதலையும் குறிக்கும்.

நல்வழி பாடல் 2

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி

பொருள்:

உண்மை நெறிப்படி கூறுவதாயின், உலகத்தில் பிறந்த மனிதர்களில் இரண்டு வகை ஜாதியினர் தான் உள்ளனர். ஒருவர் அடுத்தவருக்கு கொடுத்து உதவும் நல்ல குணம் படைத்த மேலோர், மற்றொருவர் தன்னிடம் உள்ளவற்றை அடுத்தவருக்கு கொடுத்து உதவாத கீழோர்..மேலோர் கண்ட நீதி நெறி நூலில் சொல்லப்பட்ட விஷயம் இது தான், இதை நன்றாக உணர்ந்து கொள்.

(இட்டார் -பிறருக்கு எந்தவிதப் பிரதிபலனும் எதிர்பாராது கொடுத்தார் உயர்ந்த சாதி; அவ்வாறு இடாதார் இழிசாதி – என்பதாம்.) இடு=கொடு; இட்டல்= கொடுத்தல்.

நல்வழி பாடல் 24

நீறில்லா நெற்றிபாழ்; நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் – மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ்; பாழே
மடக்கொடி இல்லா மனை.

பொருள்:

திருநீறோ, திருமண்ணோ இடாத நெற்றி வீணானதாகும், நெய்யில்லாமல் உண்ணும் உணவு வீணானதாகும், நீர் வளம் தரும் ஆறு இல்லாத ஊர் வீணானதாகும், ஒத்த கருத்து உடைய உடன்பிறப்பு இல்லாத உடம்பு வீணானதாகும், நல்ல குணங்கள் உள்ள மனைவி இல்லாத வீடு வீணானதாகும்.

நல்வழி பாடல் 1

புண்ணியம்ஆம் பாவம்போம் போனநாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள்- எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்

பொருள்:

புண்ணியம் நம்மை ஆக்கும் (நமக்கு ஆக்கம் தரும்), பாவம் நம்மைப் போக்கும் (நம்மை அழிக்கும்). முன் நாட்களில் ஒருவர் செய்கின்ற அவையே (பாவ, புண்ணியங்களே) இந்த மண்ணுலகில் பிறந்தவர்க்கு உரிய பொருள் ஆகும். (மற்றவை எல்லாம் பொருள்கள் ஆகா). நன்கு ஆராய்ந்து பார்த்தால் (எண்ணுங்கால்) இதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை, எந்தச் சமயத்தவராய் இருந்தாலும் அவர் சொல்லுகின்ற சொல்லும் இதுதான், அது: தீமைசெய்யாதே, நன்மையே செய்க!

கருத்து: புண்ணியம் பாவம் என்று கூறும் இரண்டு மட்டுமே, இதைத் தவிர வேறு எதுவும் கூட வாராது, அனைத்து சமயமும் கூறுவது தீமையைச் செய்யாதே உன்னால் முடிந்த நன்மையைச் செய் என்பது தான்… (help ever, hurt never- Swami)

தனிப்பாடல்

‘வாதக்கோன் நாளையென்றான் வையக்கோன் பின்னையென்றான்
ஏதக்கோன் யாதேனும் இல்லையென்றான் – ஓதக்கேள்
வாதக்கோன் சொல்வதிலும் வையக்கோன் சொல்வதிலும்
ஏதக்கோன் சொல்லே இனிது” (தனிப்பாடல்).

பொருள்:

வறுமையால் வாடி வந்த ஒருவன் செல்வந்தர்களிடம் பொருளுதவி கேட்பதாக அமைந்த பாடல் இது:

வாதக்கோன் நாளை வா தருகிறேன் என்று சொன்னான்; இன்னொருவன் (வையக்கோன்) பிறகு தருகிறேன் என்றான். ஏதக்கோன் எதுவும் உனக்குத் தரமுடியாது என்றான். வாதக்கோன் சொன்னதைக் காட்டிலும், வையக்கோன் சொன்னதைக் காட்டிலும், ஏதக்கோன் எதுவும் உனக்குத் தரமுடியாது என்று சொன்ன சொல்லே இனிமையானது என்று பொருள்.

தத்துவப் பொருள்:

வாதக்கோன்- வாத நாடி; வையக்கோன் – பித்தநாடி; ஏதக்கோன்- சிலேத்துமநாடி. வாதநாடி அடங்கினால் ஒருநாளிலும், பித்தநாடி அடங்கினால் ஒருநாழிகையிலும் (2.30மணிநேரம்), சிலேத்தும நாடி அடங்கினால் உடனேயும் மரணம் நிகழும். எனவே, நாளை நாளை என்று சொல்லாதே, பொருள்தர மனம் இல்லையென்றால் இல்லை என்று சொல்லுக, அதுதான் இனிமையானது என்கிறார். மேலும், நீ ஒரு நாள் இருப்பாயா, ஒருநாழிகை இருப்பாயா, இல்லை. இந்த நிமிடந்தான் இருப்பாயா என்றே புரியாத நிலையில்லா வாழ்க்கையில் பொருளின்மேல் பற்றுவைப்பது சரியா? என்கிறார்

நடித்துக் காட்டு!
நாடகம் 

காட்சி – ஒரு காடு –ஒளவை- கையில் தடியுடன் பாடிக்கொண்டே உள்ளே நுழைகிறாள். ஒளவை ஒரு மரத்தடியிலிருந்த கல் ஒன்றன்மீது அமர்ந்து கொண்டாள். மரத்தின்மேல் ஏதேதோ ஓசை கேட்டது. (தலையை நிமிர்த்திப் பார்த்தாள். மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் மரத்தில் அமர்ந்திருந்தான்). ஔவை: என் அன்பின் சிறுவனே! எனக்கொரு பழம் தருவாயா? முருகன்: ஓ! கட்டாயம் தருகிறேன் பாட்டி! ஆனால் உங்களுக்கு சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா என்று சொல்லுங்கள். ஔவை: (ஒரு புறம் திரும்பி) என்ன இது? தன் பேச்சில் இவன் என் காலை வாரி விடுகிறானே! இருக்கட்டும் பார்க்கலாம்! “தம்பீ! எனக்கு சில சுட்ட பழங்களைப் போடு.” (பையன் சில மிகக் கனிந்த பழங்களை மண்ணில் வீசுகிறான். அவ்வை அவற்றைப் பொறுக்கி எடுத்து அவற்றிலிருந்த மண் போக வாயால் ஊதுகிறாள்). முருகன்: பாட்டி! எச்சரிக்கை! கவனமாக ஊதி சாப்பிடுங்கள். அது மிகவும் சுடுகிறது. உங்கள் வாய், தொண்டையெல்லாம் வெந்துவிடப் போகிறது. ஔவை: இறைவா! ஓர் எளிய ஆடு மேய்க்கும் இடைச் சிறுவனால் இங்ஙனம் நான் தாழ்த்தப்பட்டு விட்டேனே!. முருகன்: பாட்டி! துன்புற வேண்டாம்! என்னை உனக்குத் தெரியவில்லையா மேலே பார் நான் உன்னுடைய ………… ஔவை: ஐயனே! முருகா! முருகன்: நான் உன்னிடம் பேச விரும்பினோம். வேடிக்கையாக அறிவுறுத்துவதில் வல்லவன் அல்லவா? நீ? சரி சில கேள்விகளுக்கு விடை பகருவாயா?. ஔவை: மிக மகிழ்வுடன் கூறுகிறேன்! ப்ரபோ! முருகன்: கொடியது எது? ஔவை: கொடியது வறுமை. அதனினும் கொடியது இளமையில் வறுமை. பின்னும் கொடியது பிணியுற்று வருந்துவது. முருகன்: இனியது எது? ஔவை: இனியது தனிமையில் இருப்பது ஆகும். இறைவனைத் தொழுவது அதனினும் இனியது. இறைவன் இன்னருள் இனிதே பெற்ற அடியார் சேர்க்கை அதனிதும் இனிதே! முருகன்: பெரியது எது? ஔவை: உலகம் பெரியது. அதனினும் பெரியது, அனைத்தையும் படைக்கும் அரவன் பிரம்மா. அவரோ மாலவன் நாபியில் உதித்தவன். மாலவன் படுக்கை பாற்கடல் மேலாம். பாற்கடலை அள்ளிப் பருகிய பெரியோன் அகஸ்தியராவார். அவரோ மண்ணில் பண்ணிய பானையில் பிறந்தவர் தாமே. மண்ணின் உலகம் மாபெரும் நாகமாம் ஆதிசேஷன் அன்புடன் தாங்க அமைதியாய் அவன் மேல் அமர்ந்துள்ளது. ஆதி சேஷனோ அன்னையின் விரலில் மோதிரமாக மின்னிப் பொலிபவன். அன்னை பார்வதி ஐயன் சிவனின் அரிய உடலில் பாகம் பெற்றவள். பரமன் சிவனார் பக்தர் நெஞ்சினுள் பதுக்கப் பெற்றவர். இங்கனம் நோக்கின் பக்தர் பெருமையே பெரியது பெரியது. முருகன்:இன்னும் ஒரு கேள்வி. அரிது எது? ஔவை:மானுடப் பிறவி. முருகன்: பொருத்தமான விடைகள் அறிவிற் சிறந்த அவ்வையை விட வேறு யார் இத்தகைய விடைகளைத் தர முடியும்? (அவர் அவ்வையை வாழ்த்தி அவளெதிரில் எழிலுரு வாகக் காட்சி தந்து நின்றார். அவ்வை புன்சிரிப்போடு பணிந்து வணங்கி அவளது மனதிற்குகந்த முருகனைப் புகழ்ந்து அருமையான ஒரு பாடலைப் பாடினாள்.) (திரை விழுகிறது)

[Illustrations by M. Sai Eswaran, Sri Sathya Sai Balvikas Student.]
[Source: Stories for Children II, Published by Sri Sathya Sai Books & Publications, PN]

செயல்பாடு

ஆத்திச்சூடியும் அமுத மொழியும் – பொருத்திக் காட்டு

ஆத்திச்சூடி அமுத மொழி
வேண்டி வினை செயேல் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே தடையாக இருப்பது செய்யும் செயல்களின் பலனை எதிர்பார்ப்பதே.
(The desire for fruits is an obstacle between man and God)
பையலோடு இணங்கேல் சேர் இடம் அறிந்து சேர் – கெட்ட சகவாசத்தைத் தவிர்.
(Avoid Bad Company)
உத்தமனாக இரு; அறனை மறவேல் நல்லவனாக இரு; நல்லதையே பார்; நல்லதையே செய்
(Be Good; See Good; Do Do Good)
ஒப்புரவு ஒழுகு; சுளிக்கச் சொல்லேல் எப்பொழுதும் உதவி செய்; ஒருபோதும் துன்புறுத்தாதே
(Help Ever; Hurt Never)
ஊக்கமது கைவிடேல் முழு முயற்சியே முழு வெற்றி
(Full Effort is Full Victory)
ஞயம்பட உரை; கடிவது மற எல்லோருடனும் இனிமையாகவும், பணிவாகவும் பேசவேண்டும்
(7th Code of Conduct) Speak softly and politely to everyone
ஓதுவது ஒழியேல் சாய் இலக்கியத்தைத் தவறாது படித்தல்
(6th code of conduct) Regular study of Sai Literature
அறம் செய விரும்பு; ஆறுவது சினம் அனைவரிடமும் அன்பு காட்டு; அனைவருக்கும் சேவை செய்
(Love All; Serve All)
திருமாலுக்கு அடிமை செய்
(மக்களை இறைவனாகவே கருதி, அவர்களுக்குத் தொண்டு செய்ய)
மானுட சேவையே மாதவ சேவை
(Service to mankind is Service to God)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன