கோபத்தை வெல்

Print Friendly, PDF & Email
கோபத்தை வெல்

ஸ்ரீ ராஜேந்திர பிரசாத் இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நடந்த நிகழ்ச்சி இது. அவரிடம் இரத்தினம் என்ற ஒருவன் பணி புரிந்து வந்தான். அவன் தன் தலைவரிடம் நன்றியார்ந்த மதிப்புடன் நேர்மையாகப் பணியாற்றி வந்தான். குறிப்பிட்ட நேரத்தில் தன் யஜமானரின் குறிப்பிட்ட தேவைகளை அவன் நன்கு அறிவான். எனவே அந்தந்த நேரங்களில் ஆயத்தமான பணிகளை நன்கு கவனித்து வந்தான்.

ஒரு நாள் இரத்தினம், ராஜேந்திரபிரசாத்தின் மேஜையைத் துடைத்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு பொருளாக எடுத்து வைத்துத் துடைத்த பொழுது அங்கிருந்த கடிதக்கட்டிலிருந்து பேனா ஒன்று நழுவிக் கீழே விழுந்தது. திடுக்குற்ற இரத்தினம் உடனே குனிந்து அதை எடுத்தான். அதன் எழுதும் முனை உடைந்து விட்டிருந்தது. அதைக் கண்டதும் இரத்தினம் தலைவர் கோபிப்பாரே என்று அஞ்சி நடுங்கி விட்டான். அதே சமயம் ராஜேந்திர பிரசாத் அறைக்குள் வந்தார். பேனாவின் நிலையைக் கண்டார். நடந்ததைப் புரிந்து கொண்டார்.

அந்த பேனா ஓர் உயரிய, மிக்க விலையுள்ள பொருள் மட்டுமன்று, அது அவரது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அருமை நண்பரொருவரிடமிருந்து பரிசாகப் பெற்றது. எனவே, அது பாழாகி விட்டதை அறிந்ததும் அவர் மிக்க கோபம் கொண்டார். இரத்தினத்தை கடிந்துரைத்து, இனி அவன் தன்னிடம் பணியாற்ற வேண்டியதில்லை என்றும் உத்தரவிட்டார். இரத்தினம் மிகவும் மனம் நொந்து போனான். எஜமானரைப் பிரிந்து செல்ல அவனுக்கு விருப்பமே இல்லை. ஏனெனில் அவன் அவரிடம் அவ்வளவு அன்பும் மதிப்பும் வைத்திருந்தான். உடனே அவரது கால்களில் விழுந்து தன் தவறை மன்னிக்கும்படி மன்றாடிக் கேட்டான். ஆனால் அப்போது ராஜேந்திர பிரசாத் கோபத்தின் எல்லைக்கே சென்று விட்டிருந்ததால், அவனை மன்னிக்க மனமற்று, அதே உரத்த குரலில் மறுபடியும், வேலையினின்றும் அவனை நீக்கி விட்டதாகவும், உடனே அங்கிருந்து செல்லும்படியும் கட்டளை இட்டார். என்ன செய்வான் இரத்தினம்? நைந்த உள்ளத்துடன் மெதுவாக வெளியேறினான்.

இரவு வந்தது. படுக்கையில் படுத்த ராஜேந்திர பிரசாத்தின் கோபமும் சற்று தணிந்திருந்தது. அமைதியாகச் சிந்தித்த அவர் நிகழ்ந்துவிட்ட அந்தத் துயர நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தார். “இரத்தினத்தின் மேல் முழுத் தவறுமில்லையே! நான் பேனாவை மூடி வைக்காமல் கடிதக்கட்டுகளிடையே வைத்து விட்டேன். அங்ஙனம் நான் வைத்ததும் தவறுதானே! நான் வைத்ததை அவன் எங்ஙனம் பார்த்திருக்ககூடும்? சுத்தம் செய்யும் நல்ல எண்ணத்தில், தெரியாமல் கட்டுகளைத் தூக்கி விட்டிருக்கிறான். இடையே இருந்த பேனா கீழே விழுந்து விட்டது.” என்று பலவாறு நினைத்து வருந்தினார்.”

இரத்தினம், ஒரு பணிவான வேலைக்காரன். மேலும், கடமை உணர்வு மிக்கவன்; நேர்மையானவன்; மிக அன்பானவன்; அவனைப்போய் நான் அவ்வளவு கடுமையாகக் கோபித்துக்கொண்டேனே!” என்று தம்மையே நொந்து, கடிந்து கொண்டார். இந்தக் குழப்பத்தில் அவர் அன்று இரவு உறங்கவே இல்லை. பொழுது விடிந்தது. அதற்காகவே காத்திருந்த ராஜேந்திர பிரசாத், படுக்கையை விட்டு எழுந்ததும், இரத்தினத்தை அழைத்து வர ஆள் அனுப்பினார். அதே நிலையில் இரவு முழுவதும் உழன்று கிடந்த இரத்தினமும் உடனே வந்தான். ஒரு நண்பனைப் போல் அவனது கைகளைப் பற்றிக் கொண்டு ராஜேந்திரபிரசாத், “நேற்று உன்னிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்டு விட்டேன். என்னை மன்னித்து விடப்பா. நீ முன் போலவே இங்கு பணியாற்ற வர வேண்டும். நீ இல்லாமல் என்னால் இருக்க இயலாது.” என்று அன்புடன் கூறினார். உயரிய நெஞ்சத்திலிருந்து வந்த அந்தச் சொற்களைக் கேட்ட இரத்தினம் உள்ளம் நெகிழ்ந்து போனான். எஜமானரின் காலடியில் சரிந்து விழுந்துக் குழந்தையைப் போல விம்மி விம்மி அழுதான். அச்செயல் அவனது தூய்மையான அன்பையும் நன்றியுணர்வையும் வெளிப்படுத்தியது.

அதற்குப் பிறகு ராஜேந்திர பிரசாத் இந்த நிகழ்ச்சியைக் குறித்துப் பலமுறை, பல நண்பர்களுக்குக் கூறினார். அத்துடன், கோபம் கொண்டு பிறரைத் தண்டிக்க நேரும் போது இரண்டு முறை தீர ஆலோசிக்கும்படி எச்சரித்து அறிவுறுத்தி வந்தார்.

அவரது அறிவுரைப்படி நாம் கோபம் என்ற நாயை அடக்கி வெல்வோமா!

கேள்விகள்:
  1. “கோபம் ஒரு வெறி நாய்; அன்பே தெய்வமாகும்” விளக்குக.
  2. “கோபம் கொள்வது, மற்றவர் செய்த குற்றத்திற்காகத் தன்னைத்தானே தண்டித்துக் கொள்வது ஆகும்” என்று யாரோ ஒருவர் கூறியுள்ளார். அதை ஒப்புக் கொள்கிறாயா காரணத்தோடு விளக்கு.
  3. உன் அனுபவத்தில் இருந்து கூறுக:
    1. சரியான காரணமின்றி நீ ஒருவரிடம் கோபம் கொண்டால்
    2. ஒருவர் செய்த பெறும் தவறுக்கு நீ அவரிடம் கோபம் கொண்டால், என்ன செய்வாய் என்பதை விளக்கு.
    3. இத்தகைய அனுபவங்களை நினைவு கூறும்போது நீ என்ன உணருகிறாய்?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: