பகவத்கீதை அத்தியாயங்கள் I-VI
முதலாம் அத்தியாயம் – அர்ஜுன விஷாத யோகம்
(அருச்சுனனின் மனக்கலக்கம்)
தனது துக்கத்துக்கு அருச்சுனன் இரண்டு காரணங்களைக் கூறுகின்றான். அவன் கீழ்க்கண்டவற்றை எண்ணி, குழம்பினான்.
- மனிதனின் உண்மையான ஆளுமைத்தன்மையானது(ஆத்மா) உடலுடன் கூடவே அழிகிறது. இது தேகாத்மப்பிராந்தி எனப்படும். அதாவது அழியாத ஆத்மாவை அழியும் உடலென நினைத்துக் குழம்புதலாகும்.
- அறத்தைக் காப்பாற்றுவதற்காகப் போரிட்டால் கூட, அப்போரானது பாவச்செயலாகும். இவ்வாறு கருதிய போது, தன் உயிரைக் கொடுத்தாவது அறத்தை நிலைநிறுத்துதலும், தீமையை அடக்குதலும், கொடுமையை ஒழித்தலும் மன்னர்குல வீரனின் கடமை என்பதை மறந்துவிட்டான்.
அறத்தைக் காப்பாற்றுவதற்காகப் போரிட்டால் கூட, அப்போரானது பாவச்செயலாகும். இவ்வாறு கருதிய போது, தன் உயிரைக் கொடுத்தாவது அறத்தை நிலைநிறுத்துதலும், தீமையை அடக்குதலும், கொடுமையை ஒழித்தலும் மன்னர்குல வீரனின் கடமை என்பதை மறந்துவிட்டான்.
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா முதலாவதான அறியாமையினை கீதையின் இரண்டாவது அத்தியாயமான சாங்கியயோகத்தில் கூறப்பட்ட நமது உபதேசத்தின் மூலம் விளக்குகிறார். அதில், விவேகம் என்பது என்ன என்பதும், அழியாத ஆத்மா எத்தகையது என்பதும் விளக்கப்பட்டன. இரண்டாவது அறியாமையானது, மூன்றாவது அத்தியாயமான கர்மயோகத்தில் கூறப்பட்ட உபதேசத்தின் மூலம் விலக்கப்பட்டது. அதில், ஸ்வதர்மத்தின் ஒப்பற்ற தன்மையும், முக்கியத்துவமும் அதன் ஸ்வபாவமும் இயல்பும் விளக்கப்பட்டன. இவ்வுபதேசங்களின் மூலம் அறிவுதெளிந்து, அருச்சுனனது மனத்தில் நிகழ்ந்த போராட்டம் விலகி, அவனது துக்கம் மறைந்தது. கண்ணன் உபதேசித்த ஆத்மாவின் பண்பு பிரம்மவித்தை எனப்படும். அது ஒப்பற்ற பரம்பொருளைப்பற்றிய அறிவாகும். இதனைக்கற்றுக் கொள்ள அருச்சுனன் எவ்வாறு தகுதியும் உரிமையும் பெற்றவன் என்பது முதலாம் அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளது. சரணாகதி, ஆசையறுந்த நிலை, மனோவேகங்குறைந்தநிலை, பற்றற்ற நிலைஇவை அந்தச் சூழ்நிலையில் அவனுக்கு மிகுந்ததால் அவ்வேளையில் அவன் உபதேசம் பெறத் தகுதியுள்ளவனாக ஆனான்.
மூவுலகங்களின் அரசபதவி எனக்குக் கிடைத்தாலும் நான் அவற்றை வேண்டேன்” என்று அருச்சுனன் கூறிய போது, அவனது மனோவேகங்குறைந்து ஆசையறுந்த நிலை வெளிப்பட்டது. அத்துடன்கூட, இறைவனின் திருவடி மலர்த்தாள் பணிந்தபோது, அருச்சுனன் உபதேசம் பெறத்தகுதி உள்ளவன் ஆனான்.
இரண்டாம் அத்தியாயம் – சாங்கிய யோகம்
(விவேக தத்துவம்)
இந்த அத்தியாயத்தில் ஆத்ம தத்வஞானம் போதிக்கப்படுகிறது. ஆத்மா அறுவகை மாறுதல்களையும் (விகாரங்கள்) கடந்தது. அது நித்தியமானது; அது ஒன்றேயாகும். இரண்டற்றது; அது எங்கும் வியாபித்துள்ளது. அதுசெயலற்றது. (தூய சாட்சி). அதுவே ஸத்-சித்- ஆனந்த ஸ்வரூபம், நமது உண்மையான ஆளுமைத்தன்மையான ஆத்மா உடலுடன் அழிகிறது என்ற பொய்யுணர்வு இந்த போதனையால் விலகுகிறது. ஒவ்வொருவரும் சாவைக் கண்டு பயப்படுவது இயல்பு. தனது உள்ளாழத்தில் இருக்கின்ற ஆளுமையின் அழியாத தன்மையை ஒருமுறை புரிந்துகொண்டால், மனிதன் இந்த மரணபயத்திலிருந்து விடுதலை பெறுகிறான். இந்த அத்தியாயத்தில், மரணபயத்தை போக்க, ஆத்மஸ்வரூப ஞானம் போதிக்கப்படுகிறது. அத்துடன் ஆத்ம பேருணர்வில் நிலைபெற்ற ஸ்திதப்பிரக்ஞனுடைய மகிமை பொருந்திய இலட்சணங்கள் வருணிக்கப்படுகின்றன.
மூன்றாம் அத்தியாயம் – கர்மயோகம்
ஆத்மாவின் அறிவு உள்ளே சென்றடைய, சித்த சுத்தி(மனத்தூய்மை) முதன் முதலில் தேவைப்படுகிறது. ஒருவனது மனமும் புத்தியும் கூடிய அந்தக்கரணமானது தூய்மையாக இருக்கவேண்டும். காமம் குரோதமும் நிறைந்த இதயத்தால், ஆத்மதத்துவத்தைப் பற்றிய அறிவை ஏற்றுக்கொள்ள இயலாது. காமமும் குரோதமும், உலக விஷயங்களுடன் தொடர்புள்ளவை; அவற்றிற்காக உருவானவை.
ஆகவேதான், மனம் கர்மேந்திரியங்களை ஏதாவது ஒருசெயல்புரியத் தூண்டிக்கொண்டே இருக்கிறது. ஆசைகள் மிகுந்த செயல்கள் அனைத்தும் (காம்ய கர்மங்கள்) வாஸனைகளை சேமிக்கின்றன. சம்சாரக் கடலில் சீவனை ஆழ அமுக்குகின்றன, கர்மத்தளைக்குக் காரணமாகின்றன. ஆனால், கடவுளின் வழிபாடு என்று எண்ணிச் செயலில் ஈடுபட்டு, அதன் பயனைத்தான் அனுபவித்து இன்புற வேண்டும் என்ற ஆசை இல்லாதிருந்தால், அவனது சித்தத்திலுள்ள அழுக்கு நீங்கி, சித்தம் தூய்மையாகிறது. (சித்தமலம் அறிவித்து சிவமாக்கி எனையாண்ட அத்தன் எனக்கருளியவாறு ஆர்பெறுவாரச்சோவே – திருவாசகம்). அப்போது அவனைக் கட்டிப்பிணைக்கின்ற ப்ரவிருத்தி கர்மங்களும் (உலகியற்செயல்களும்) விடுதலைப்பேறு அளிக்கும் நிவிருத்தி கர்மங்களாக (முக்திச்செயல்களாக) உருமாற்றங்கொள்கின்றன. செயலின் தளை இவ்வாறு நலிந்து அறுபடுகிறது. இத்தகைய உணர்வுடன் கடமையுடன் இசைவுபட்டு நிஷ்காம உணர்வுடன் செயல்படுவதால் மனம் பரிசுத்தமாகி, அறியாமையின் திரை அறுந்து, அறிவும் பரிசுத்தமாகிறது. ஆகவேகர்மம் கர்மயோகமாகி ஆன்மீக அறிவைத் தூய்மையாக்கி, ஆன்மீக அறிவுக்கும் விடுதலைப் பேறுக்கும் இட்டுச்செல்கிறது.
நிஷ்காம கர்ம அனுஷ்டானமும், ஸ்வதர்ம கர்ம அனுஷ்டானமும், கர்ம யோகத்தின் சாரமாகும். ஒருவன் தன் ஆசைகளை வென்றால், இவ்வழியில் வெற்றி கிடைப்பது உறுதி.
நான்காம் அத்தியாயம் – ஞான யோகம்
(அறிவின் வழி)
பரிசுத்த இதயந்தான் உண்மையை உணரவல்லது. ஆத்மஞானம், தூய இதயத்தில் தான் உதயமாகும். இந்த அத்தியாயத்தில், ஞானத்தின் மகிமையும், அதன் ஒளியும், ஒப்பற்ற ஞானத்தை அடையும் சாதனா முறைகளும் கற்பிக்கப்படுகின்றன. கர்மயோகம் கனிந்து, ஞானயோகத்தில் தனது நிறைவை அடைகின்றது. உண்மையறிவு எல்லாப் பாவங்களையும், எல்லா வாஸனைகளையும் (பதிவுகள்) அழிக்கிறது. ஞானம், பரிசுத்த நிலையையும், பரிபூரண நிலையையும் அடைவதற்கான வழி. இதை அடைவதற்கு முக்கியமான வழிமுறைகள்.
1) ப்ரணிபதம்(குருவிடம் சரணாகதி) 2) பரிப்ரச்னம் (மறுபடியும் மறுபடியும் தெளிவைத்தேடி அறிதல்) 3) சேவை (குருவுக்குப் பணிபுரிதல்), 4) சிரத்தை (நிலையான, அசையாத நம்பிக்கை), 5) தத்பரத்வம்(தெய்வத்துவத்திடம் பற்றுக்கொள்ளுதல்), 6) ஜிதேந்திரியத்வம்(முழுமையான புலனடக்கம்)இவையெல்லாம் இந்த அத்தியாயத்தில் கற்பிக்கப்படுகின்றன.
ஐந்தாம் அத்தியாயம் – ஸந்நியாச யோகம்
(செயலைத் துறத்தல்)
ஆத்மஞானத்தை அடைந்தவன், ஜீவன் முக்தன். ஜீவன்முக்தனின் மகிமை மிகுந்த மனப்போக்குகளும், தன்மைகளும் இங்கு வருணிக்கப்படுகின்றன. அத்தகைய ஞானி இவ்வுலகில் செயல்படுவது போலத் தோன்றினாலும், அவனது உறுப்புகளே அவ்வாறு செயல்புரிகின்றன. உள்ளிருக்கும் அவன், தூய விடுபட்ட சாட்சியாகத் துலங்குகிறான். அதாவது, செயலற்ற தன்னிறைவில் உள்ளே அவன் இருக்கிறான். உடலிலிருந்து அவன் உள்ளுணர்வில் விடுபட்டவன். ஆத்மப் பேருணர்வில் அவன் எப்போதும் நிலைந்திருக்கிறான். உடல், மனம் இவை அவனை ஆதிக்கம் கொள்ளவில்லை. உடலுடன் கூடியிருக்கும் போதே, அவன் விடுபட்டவனாக இருக்கின்றான். கர்ம சந்நியாசமும் (செயல்களின் பயன்களை தான் அனுபவிக்க விரும்பும் ஆசையைத் துறத்தலும்)சாட்சியாக இருத்தலும், இந்நிலையில் அடையப்பெற வேண்டிய சாதனா முறைகளாகும்.
ஆறாம் அத்தியாயம் – தியான யோகம்
(தியானம் செய்தலும், புலனடக்கமும்)
உலகத்து ஆசைகளின் ஆதிக்கத்திலிருந்து யார் விடுதலை பெற்றும், சுயநலமற்ற செயல்களின் மூலம் யார் தன் மனத்தூய்மைப்படுத்தியும் இருக்கின்றானோ, அவன் புத்தியைத் தூய்மைப்படுத்த தியானம் செய்யவும் அதன் மூலம் சாட்சாத்காரம் பெறவும் வேண்டும்.
தியானத்தைப் பயிலுவதற்கான பற்றற்ற நிலையும், உணவு, பிராணாயாமம், மனதில் ஓடும் எண்ணத் தொடரைச் சீர்படுத்தி, அமைதிப்படுத்தல் இவை பற்றிய ஒழுக்கங்கள் என்ன என்பதும் இந்த அத்தியாயத்தில் கற்பிக்கப்படுகின்றன.