பகவத்கீதை அத்தியாயங்கள் XIII-XVIII

Print Friendly, PDF & Email
பதின்மூன்றாம் அத்தியாயம்

க்ஷேத்ர, க்ஷேத்ரக்ஞ, விபாக யோகம் (ஜீவன், பிரகிருதி)

இவ்வதிகாரத்தில் க்ஷேத்ரம், உபாதிகள் – சார்புடையவை, க்ஷேத்ரக்ஞன் – உள்ளே வசிப்பவர், ஞானம் – பேருணர்வு பெறும்வழி முறை, அதாவது வளர்த்துக்கொள்ளத் தேவையான நற்பண்புகள், ஞேயம் – அறிவு, பிரகிருதி- இயற்கை, சடப்பொருள், புருஷன் – உயிர் இவையனைத்தும் வருணிக்கப் படுகின்றன. இத்தகைய அறிவு, அழிவற்றது எது, அழிவது எது என்பதை அறியும் விவேகத்தை, மதிநுட்பத்தை வளர்க்கிறது.

பதினான்காம் அத்தியாயம்-குணத்ரய விபாக யோகம்

(மூன்று குணங்கள்)

பிரம்மன் ஒன்றே உண்மையானது என்றால், நாம் ஏன் அதை இனங்கண்டு, அனுபவிக்க முடிவதில்லை? நமக்கும் ஆத்மாவுக்கும் இடையே உள்ள தடங்கல் எது?

சீவன் பிரகிருதியினால் மறைக்கப்படுகிறது. பிரகிருதி முக்குணங்கள் கொண்டது. உண்மையிலிருந்து நம்மைப்பிரிக்கும் பிரகிருதியைப் புரிந்துகொண்டு அதைக்கடந்து செல்லவும், இம்மறைப்பு எதனால் ஏற்படுகிறது என்று அறிந்து கொள்ளவும், சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களின் இயல்பும், அவற்றின் ஆற்றலும், அவை எவ்வாறு நம்மைத் தளைப்படுத்துகின்றன| என்பதும் இங்கு விவரிக்கப்படுகின்றன. முடிவில், குணங்களைக் கடந்திருக்கும் குணாதீதனின் மகிமை நிறைந்த பண்பாடுகள் என்ன என்பதும் கூறப்படுகிறது.

குணாதீதனாக மாறுவதற்குரிய சாதனாமுறைகள் என்ன என்பதும் கூறப்படுகிறது.

பதினைந்தாம் அத்தியாயம் – புருஷோத்தமயோகம்

(இறைவன்/ பரமாத்மா)

பிரகிருதி காரணமாக, ஜீவன் சம்ஸாரத்தில் உழல்கிறது. சம்ஸார விருட்சத்தைப் பற்றிய வருணனையும் அந்தத்தளையை(உலகப்பற்றுதலை) வெட்டுவதற்கான வழியும், வைராக்கியத்தின் மூலமாக), புருஷோத்தமனை அடையும் வழியும் இவ்வதிகாரத்தில் கூறப்படுகின்றன.

பதினாறாம் அத்தியாயம் – தெய்வாசுர சம்பத்விபாக யோகம்

(தெய்வீகப்பண்புகளும், அசுர குணங்களும்)

வைராக்கியத்தைப் பெறுவதற்கு, மனிதன் அசுரகுணங்களை விடுத்து, தெய்வீகப் பண்புகளை வளர்த்து, தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும். அசுர குணங்களும், தெய்வீகப்பண்புகளும் இவ்வதிகாரத்தில் விவரிக்கப்படுகின்றன. எது சரியானது, எது தவறானது என்பதை அறிய மறைநூல்கள் தான் சிறந்த வழிகாட்டியும், ஆணையும் ஆகும். மறைமொழிகளில் கூறப்பட்டுள்ள கட்டளைகளின்படி ஒருவன் நடந்துகொண்டு இவ்வுலகில் வாழ்க்கையை நடத்த வேண்டும்.

பதினேழாம் அத்தியாயம் – ச்ரத்தாத்ரயவிபாகயோகம்

(மூவகையான சிரத்தை)

தெய்வீக சம்பத்துகளை (பண்புகளை) வளர்த்துக் கொள்வதில் வெற்றிகாண, வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் நடைமுறைகளிலும் சாத்வீக உறுதியான நம்பிக்கை அவசியம். ஒருவனின் உறுதியான நம்பிக்கை, உணவுப்பழக்கங்கள், யக்ஞம், தானம், தபஸ் இவற்றின் சாத்வீக, ராஜஸிக, தாமஸிக அம்சங்கள் விவரமாக இங்கு வருணிக்கப்படுகின்றன. ராஜஸிக, தாமஸிக அம்சங்களை விலக்க வேண்டுமெனக் கூறப்படுகிறது. சாத்விக சிரத்தையுடன் கூடி செய்யப்படும் எதுவும், ஆத்ம சாட்சாத்காரத்துக்கு இட்டுச்செல்ல வல்லதாகும்.

பதினெட்டாம் அத்தியாயம்

மோக்ஷ சந்நியாசயோகம்(துறவு செய்தல்)

முந்தைய பதினேழு அதிகாரங்களின் உபதேச ஸாரம் இங்கு வழங்கப்படுகிறது. சாத்வீக, ராஜஸிக, தாமஸிக இயல்புகளுக்கும் பொருந்தும் வகையில் தியாகம், ஞானம், கர்த்தா, கர்மா, புத்தி, த்ருதி,சுகம், போன்றவை. எவ்வாறு அமைகின்றன வருணிக்கப்படுகிறது. நால்வகை வருணத்தாரின் கடமைகள், குணங்கள், பொறுப்புகள் விவரிக்கப்படுகின்றன. யக்ஞம், தானம், தபஸ் ஆகியவை அவசியமான பொறுப்புகளும், ஒழுக்கங்களும் எனவும், நிஷ்காமகர்மம், யோக அப்பியாசம், பக்தி, வைராக்கியம், சந்நியாஸம் ஆகியவை சீவனுக்கு முடிவான விடுதலையை அளிக்கவல்ல சாதனாமுறைகளெனவும் கூறப்படுகிறது. இவற்றின் மூலம் ஒப்பற்ற ஞானத்தை ஒருவன் அடைந்து, ஸர்வார்த்த பாவனையைப் பெற்று, துக்கத்தைக்கடந்து, விடுதலைப்பேறு அடைகின்றான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன