இராமரைக் குறித்து பரதன் சோர்வு

Print Friendly, PDF & Email
இராமரைக் குறித்து பரதன் சோர்வு

அன்று இரவு உறக்கம் பரதனை விட்டகன்றது. இரவு முழுவதும் இராமரை நினைத்து நினைத்துக் கண் கலங்கித் தவித்தான், அவனை அந்த நொடியே காட்டிற்கு ஓடிச் சென்று, இராமரது பாதங்களில் பணிந்து விழ அவன் அங்கமெல்லாம் துடித்தது.

பொழுது விடிந்தது. தாய்மார்கள் மூவரும், குரு வசிஷ்டர், அமைச்சர்கள், பெரும்படை ஒன்று ஆயிரக்கணக்கில் அயோத்தி மக்கள், அனைவரும் பின் தொடர பரதனும், சத்ருக்னனும் அயோத்தியை விட்டு காட்டிற்குப் புறப்பட்டனர். இரண்டு நாட்கள் பயணத்திற்குப் பிறகு அவர்கள் கங்கை நதிக்கரையை அணுகினர். அங்குப் படகோட்டிகளின் தலைவன், குஹன் என்பவன் நின்றிருந்தான். பரதன், மாபெரும் படையைத் திரட்டிக் கொண்டு இராம, இலட்ச்மணருடன் போர் புரிய வந்துள்ளான் என்று பரதனைத் தவறாகக் கருதிவிட்டான் குஹன். தன்னுடைய ஊகம் சரிதானா என்று தெரிந்துக் கொள்ள விரும்பி இராமரைப் போலவே தோற்றம் கொண்டிருந்த பரதனை மெதுவாக அணுகினான். பரதனது கண்கள் துயரத்தினால் சிவந்து இருந்தன. அரச உடை அணியாது மரவுரி தரித்திருந்தான் அவன். குஹன் தன்னை நெருங்கியபோது இராமரை அழைத்து வருவதற்காகவே காட்டிற்குச் செல்வதாகப் பரதனே குஹனுக்குத் தெரிவித்தான்.

அதைக் கேட்டதும் வியப்பினால் வாயடைத்து நின்று விட்டான் குஹன். பரதனுடைய எளிமையான தன்மையும். கள்ளங்கபடமற்ற நேர்மையான பண்பும் குஹனுடைய உள்ளத்தை உருக்கிக் கவர்ந்தன. உடனே விரைந்து சென்று வந்திருந்த அனைவரும் ஆற்றைக் கடக்க வேகமாக ஆயத்தங்கள் செய்தான். அதன் பிறகு பாரத்வாஜ ரிஷியின் ஆசிரமத்திற்கு வழி காட்டி அவர்களை அழைத்துச் சென்றான். ஆசிரமம் அருகே சென்றபோது படையினரைச் சற்று தூரத்திலேயே நிறுத்தி வைத்து விட்டு, பரதனும் சத்ருக்னனும் மட்டும் சென்று முனிவரைச் சேவித்தனர். இராமரைப் பார்க்க விரும்பும் தங்கள் எண்ணத்தையும் அவரிடம் எடுத்துக் கூறினர். பரத்வாஜர் அவர்களது எண்ணம் தூய்மையானதா என்று சோதிக்க விரும்பினார். “இராமரைக் கண்டு பிடித்துக் கொல்வதற்கு, நான் அவர்களுடைய இருப்பிடங்களை உனக்குக் காட்ட வேண்டும் என்று நீ விரும்புகிறாயா?” என்று பரதனைக் கேட்டார். அந்தச் சொற்கள் பரதனைக் கூரிய அம்பு போல கொடுமையாகத் தாக்கி விட்டன. “இத்தகைய குற்றச்சாட்டை ஏற்பதற்கு உண்மையிலேயே நான் பெரும் பாவம் ஒன்றினைச் செய்தனவனாகத்தான் இருக்க வேண்டும். ஆ! முனிவரே ! நான் இத்தகைய குற்றத்தைச் செய்வதற்கு, அவ்வளவு இழிந்த பண்பினனா?” என்று வருந்தினான

பரத்வாஜர் பரதனின் எண்ண அலைகளை நன்கு புரிந்து கொண்டார். அதனால் அவனைப் பலவாறு அமைதிப்படுத்தி, அன்று இரவு அறுசுவை கூடிய விருந்து படைத்து உபசரித்தார். ஆனால் இராமர் பேரிலேயே தன் நினைவெல்லாம் செலுத்தியிருந்த பரதனால் முழுமனதோடு விருந்தில் கலந்துகொள்ளவே இயலவில்லை. மறுநாள் காலை, பரத்வாஜ முனிவரே, பரதனையும் மற்றவரையும் இராமர், சீதை, இலட்சுமணனோடு தங்கியிருக்கும் சித்ரகூட பர்வதத்திற்கு அழைத்துச் செல்லப் புறப்பட்டார்.

சித்ரகூடத்தில் இராம இலட்சுமணர்கள் ஓர் எளிய குடிலமைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இராமர் இயற்கை எழில் நிரம்பிய காட்சிகளையும் பச்சைப்பசேல் என்று வளர்ந்திருந்த செழிப்பான புல்வெளிகளையும் சீதைக்குக் காட்டி அவளை மகிழ்வுறுத்துவார். ஒரு மரத்தடியில் மூவரும் அமர்ந்து இன்பமாக உரையாடிக் கொண்டிருந்தபோது பேரொலி ஒன்று சுழன்று வந்து செவியில் கேட்டது. பறவைகள் சிறகடித்துப் பறந்து ஓடின. இலட்சுமணன் விரைந்து ஓடி ஒரு மரத்தின் மீது ஏறிச் சுற்றிலும் பார்த்தான். ஏறிய வேகத்தில் இறங்கி ஓடி வந்தான். “அண்ணா! பரதன் பெரும் படையைத் திரட்டிக் கொண்டு, நம்மைச் சிறைப் பிடிக்க வருகிறான்: அது என்ன அவ்வளவு எளிதான செயல் என்று அவன் நினைத்து விட்டானா? அவன் என் கையால் தான் தன் முடிவைப் பெறப் போகிறான்” என்று கூவினான். கோபத்திலும் பதட்டத்திலும் அவனுக்குச் சொற்கள் தடுமாறின. கோர்வையாகப் பேசக் கூட இயலவில்லை அவனால்.

இராமர் அவனை தடுத்து நிறுத்தி, “இலட்சுமணா! அவதூறாகப் பேசாதே! இஷ்வாகு குலத்தின் பெயரைப் பரதன் ஒருநாளும் இழிவு படுத்த மாட்டான். என்னிடம் அவன் கொண்டுள்ள தூய அன்பு, பக்தியின் அளவு எனக்குத் தெரியும். உனக்கு அரசாங்கம் வேண்டுமாயின் பரதன் முழுமனதோடு உனக்கு அதை வாரி வழங்கத் தயாராக இருப்பதை நான் உறுதியாகக் கூறுவேன்” என்றார்.

இலட்சுமணனை இராமருடைய சொற்கள் துளைத்து விட்டன. தன் தவற்றை அவன் புரிந்து கொண்டு வருந்தினான். சிந்தனையற்றுப் பேசிவிட்டதற்காக, வெட்கித் தலை குனிந்து, இராமரிடம் தன்னை மன்னிக்கும்படி கேட்டான். பின்னர் மூவரும் பரதனது வருகைக்காக ஆவலோடு காத்திருந்தனர்.

தூரத்தில் பரதன் வருவது தென்பட்டவுடனே, அவனது துறவற உடையையும் கவலை தோய்ந்த முகத்தையும் இராமர் கண்டு கலங்கினார். பாச உணர்வு உந்த, பாய்ந்து சென்று அணைத்துக் கொண்டார். இருவர் கண்களிலிருந்ததும் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. மனம் அமைதி பெறும் வரை அழுதனர் இருவரும்.

இராமர் அயோத்தியிலுள்ள அனைவர் நலன்களையும் வினவினார். அரசாட்சியின் நிலைமையையும் கேட்டார். அதற்கு மறுமொழியாக பரதன், “அண்ணா! தாங்கள் அகன்ற பிறகு அந்த அரசை நான் ஆள்வேன் என்று நினைக்கிறீர்களா? எப்போதும் மூத்த மகன் பட்டத்திற்கு வருவதுதான் அரச பரம்பரை. அதனால் தாங்களை அரசாள அழைத்துச் செல்லவே நான் இங்கு வந்துள்ளேன். தாங்கள் அயோத்தியை விட்டு வந்த பிறகு நம் அருமைத் தந்தை நம்மை அனாதைகளாக்கி விட்டு மறைந்து விட்டார்,” என்று துயரத்தோடு வெடித்துக் கூறினான்.

தந்தையார் இறந்தார் என்ற செய்தி கேட்டதும் இராமர் நினைவிழந்து விழுந்தார். சற்று நேரத்தில் தெளிந்து எழுந்து, தம்பியரோடு மந்தாகினி நதிக் கரைக்குச் சென்று தங்களை விட்டுப் பிரிந்த தந்தையாரது ஆத்மா அமைதி பெற ஈற்றுக் கடன்களைச் செய்து முடித்தார்.

மறுபடியும் எல்லோரும் வந்து அமர்ந்தனர். அப்போது இராமர்,

“பரதா! ஏன் அரசாட்சியை விட்டு, துறவி உடை அணிந்து காட்டிற்கு வந்தாய்!” என்று கேட்டார். அதற்கு பரதன், “அன்பார்ந்த அண்ணா! தந்தையாரது மறைவிற்குப் பிறகு அயோத்தியை விட்டு தர்மமே மறைந்து விட்டது. மேலும் அரசாள எனக்கு எந்த வகையிலும் உரிமையோ தகுதியோ கிடையாது. அதனால், தாங்கள் மீளவும் நாட்டிற்கு வந்து அரச பொறுப்பேற்று நடத்தி, தர்மத்தை மீண்டும் தழைக்கச் செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்ளவே இங்கு எல்லோரும் வந்துள்ளோம். என் அன்னை கைகேயி கூட, வஞ்சகமாக திட்டமிட்டுத் தங்களுக்குத் தீங்கு விளைவித்ததற்கு பெரிதும் வருந்துகிறாள்.” என்று விடையளித்தான். இராமர் உடனே, “நீங்களனைவரும் என்னிடம் காட்டி வரும் பேரன்பிற்குப் பெரிதும் நன்றியுடையேன். அன்னை கைகேயியைப் பொறுத்த மட்டில் அவளை யாரும் குறை கூற வேண்டாம். மனிதப் பிறவியெடுத்த நாம் அனைவருமே, தவிர்க்க முடியாத ஊழ்வினைப் பயனுக்குத் தலை தாழ்த்தித்தான் ஆக வேண்டும். நான் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டும். அது போது நீ அரசாள வேண்டும் என்பது தந்தையாரது விருப்பமாகும். அவரது விருப்பத்தை நிறைவேற்றுவோமாக! அதனால் அவரது ஆத்மா அமைதி பெறுவதாகுக!” என்று உறுதியோடு பொறுமையாக எடுத்துரைத்தார்.

இராமருக்குச் சமமான பிடிவாதம் பரதனும் கொண்டிருந்தான். “தாங்கள் இல்லாமல் நான் நாட்டிற்கே திரும்ப மாட்டேன். அரச பொறுப்பை ஏற்க எனக்கு எந்த உரிமையும் கிடையாது. அதனால் எனது வேட்கையுடன் கூடிய சத்ருக்னன், அன்னையர், நாட்டு மக்கள் ஆகிய அனைவரது விருப்பத்தையும் தடையில்லாது நிறைவேற்றுங்கள்,” என்று பிடிவாதமாகக் கூறினான்.

இராமர் மறுமொழியாக அழுத்தமான குரலில், “ நான் தெளிவாகச் சிந்தித்துச் செயலாற்றுகிறேன். என் தந்தையின் கட்டளைக்கு நான் கீழ்ப் படிய வேண்டும். அதனால் திரும்பி விடுவது என்பது என்னால் இயலாத செயல். தந்தையாரது மறைவிற்குப் பிறகு நாட்டை நிர்வகித்து, மக்கள் நலன் பேணுவது உன் கடமையாகும். அங்கு உனக்குச் சத்ருக்னன் உதவி புரிவான். இங்கே இலட்சுமணன் எனக்கு ஆவன செய்வான். அதனால் திரும்பிச் சென்று அரசாட்சியை கவனி! என்னுடைய ஆசி உனக்கு என்றென்றும் துணையிருக்கும்.,” என்று திட்டவட்டமாகக் கட்டளையிடுவது போலக் கூறினார்.

எதற்கும் பரதன் இளகவேயில்லை. இராமர் வரும்வரை அயோத்தியில் ஒரு கடுமையான நோன்பு ஏற்கப் போவதாகக் கூறினான். நிலைமையைப் பார்த்த வசிஷ்டர், முன் வந்து, குறிப்பாக ஒரு ஆலோசனை கூறினார். “இராமர் திரும்பும்வரை பரதன் அவரது பிரதிநிதியாக அரசாளட்டும்.,” என்றார். இதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். எனினும் பரதன், “இராமா! அன்பு கூர்ந்து தங்களுடைய காலணிகளைத் தாருங்கள். அவற்றைச் சிம்மாசனத்தில் இருத்தித் தாங்கள் வரும் வரை அரச ஆணைகளை நேர்மையாக நடத்தி வருகிறேன். என்னைப் பொறுத்தவரயில் அருகிலுள்ள ஒரு கிராமத்தில், ஒரு துறவியாக வாழ்ந்து தாங்கள் திரும்பும்போது, தங்களோடேயே தான் நாட்டிற்குள் புகுவேன். பதினான்கு ஆண்டுகள் கழிந்த பின்னர் தாங்கள் திரும்பி வராது போனால், தீ வளர்த்து அதில் என் வாழ்வை முடிப்பேன்!,” என்று உள்ள உறுதியோடு உரைத்தான்.

குழுமியிருந்த அனைவரும் பரதனது நல்லியல்புகளைக் கண்டு வியந்து போற்றினர். இராமர் அனைவருக்கும் ஆசி கூறி வாழ்த்தி அயோத்தியாவிற்கு வழியனுப்பி வைத்தார்.

கேள்விகள்:
  1. பரதன் ஏன் அரச பொறுப்பை ஏற்க மறுத்தான்?
  2. இராமர் அயோத்தியாவிற்குத் திரும்ப ஏன் இணங்கவில்லை?
  3. வசிஷ்டர் எல்லோரும் நிறைபெறும் வண்ணமாக எப்படி சிக்கலைத் தீர்த்து வைத்தார்?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன