பரதன் ஊர் திரும்புதல்

Print Friendly, PDF & Email
பரதன் ஊர் திரும்புதல்

இராமர் காட்டிற்குச் சென்ற பிறகு தசரதர் மனமொடிந்து போனார். எந்நேரமும் இடைவிடாது, “இராமா! சீதா! இலட்சுமணா! ‘என்று புலம்பியவாறு அழுது அழுது உடல் நலம் குன்றிப் படுக்கையாக கிடக்கலானார். நாளுக்கு நாள் அவரது நிலைமை சீர் கெட்டு வந்தது. ஒரு நாள் இரவு இராமர் பெயரைச் சொல்லிக் கொண்டே அவர் இறந்து விட்டார். கங்கை நீரின் புனிதமான சுவையை ஒத்து இருந்தது அவர் உச்சரித்த இராம நாமம்.

நாடே துக்கக் கடலில் மூழ்கியது. இராமர் அகன்றது போதாது என்று அரசரும் மறைந்து விடவே மக்களிடையே ஓர் இருண்ட சூழ்நிலை உருவாகியது. குலகுரு வசிஷ்டர் தாம், அமைதியாக அனைவருக்கும் ஆறுதல் கூறி, அன்னை வழி பாட்டனார் வீட்டிற்கு சென்றிருந்த பரத சத்ருக்னர்களை உடனே அழைத்து வருமாறு வீரர்களை அனுப்பினார்.

அவர்களும் விரைந்து வந்தனர். நகருக்குள் நுழையும்போதே பரதன் எங்கும் பரவியிருக்கும் வழக்கத்திற்கு மாறான சூழ்நிலையைக் கண்டான். ஒருவரும் அவனோடு சரியாக பேசவில்லை. அவன் நேராகத் தம் தாயின் மாளிகைக்குச் சென்றான். கைகேயி தன மகனை வரவேற்க உயர்தர அதிகாரத்துடன் ஆடம்பரமாக ஏற்பாடு செய்திருந்தாள். அவற்றைக் கண்ணுற்ற பரதன் தம் அன்னையிடம், “எப்போதும் நான் வரும்போதே, என்னை அன்போடு வரவேற்கும் என் தந்தையார் எங்கே? என் அன்பின் இராமரும் இலட்சுமணரும் எங்கே? நான் அவர்களைப் பார்க்கவே இல்லையே! ஏன்? “ என்று கேள்விகளை அடுக்கினான். கைகேயி பரதனது கேள்விகளைப் பொருட்படுத்தாமல் , அசட்டையாகத் தடுத்து அருகிருந்த மந்தரையை விளித்து, அர்சகுமாரனுக்கு நிலைமையை விளக்கச் சொன்னாள்.

மந்தரைதான், மிகமிக உற்சாகத்தோடு இருந்தாளே! எனவே முகமெல்லாம் மலர பரதன் முன் வந்து, “அருமை குழந்தாய்! உனக்காக நாங்கள் எவ்வளவோ ஏற்பாடுகள் செய்துள்ளோம். அதற்கான வழி தெளிவாகவே இருக்கிறது. நீ உடனடியாக அயோத்தியின் சக்கரவர்த்தியாக முடி சூட்டப் பெறப் போகிறாய். கருணை மிக்க கடவுள் மிக்க உயர்ந்தவர். நாங்கள் தீட்டிய திட்டங்கள் செவ்வனே நிறைவேறின. எனவே முடி சூட்டிக் கொள்ள ஆயத்தமாக இரு. துரதிருஷ்டவசமாக உன் தந்தையார் திடீரென இறந்து விட்டார்., “ என்று கலகலப்பான குரலில் கூறினாள்.

முதலில் பரதனால் மந்தரையின் சொற்களை முழுதுமாக ஏற்றுக் கொள்ள இயலவில்லை. ஆனால் தந்தையார் இறந்து விட்டார் என்ற செய்தி அவனைத் திடுக்குறச் செய்து உலுக்கி விட்டது. உரத்த குரலில், “என் தந்தையார் வேதனையால் துயரமுற்று இருக்கும்போதே ஏன் எனக்கு முன்னாடி தெரிவித்து அழைத்து வரவில்லை? சக்கரவர்த்தியாக முடி சூட்டிக் கொள்ள முழு உரிமையும் பண்பும் பெற்றுள்ள அண்ணா இராமர் இருக்கும்போது நான் எப்படி முடிசூட்டிக் கொள்ள முடியும்? நீங்கள் எல்லாரும் என் சித்தத்தைக் குழப்பி, பித்துப் பிடிக்க வைக்கிறீர்களே! அம்மா! என்ன நேர்ந்தது என்று எனக்கு இப்போதே விவரவமாகச் சொல்லுங்கள்,” என்று இரைந்து கேட்டான் பரதன்.

கைகேயி பரிவுடன் அவனது தோள்களைப் பற்றி, மலர்ந்த முகத்தோடு பேசலானாள். மந்தரை, பரதனது நன்மைக்காக எப்படியெல்லாம் திட்டமிட்டது, கைகேயி அதை செயல் படுத்தி, அவனது தந்தையாரை, அவர் முன்பு ஒரு முறை கொடுத்த வாக்கினின்றும் மீள முடியாத ஒரு சிக்கலான சூழ்நிலையில் நிறுத்தி, தான் வெற்றி பெற்றது இவற்றை விரிவாக மகனுக்கு எடுத்துரைத்தாள் கைகேயி.

பரதனுக்கு மெதுமெதுவாக நிலைமை புரிந்தது. நடந்தவற்றைத் தெரிந்துக் கொண்டவுடன் கோபத்தினால் முகம் சிவக்க வெகுண்டு எழுந்தான். தன்னைப் பற்றியிருந்த அன்னையை வேகமாகப் பிடித்து தள்ளி விலக்கினான். “நீங்களும் ஒரு பெண்ணா? உங்கள் மனம் என்ன கடினமான பாறையினால் செய்யப்பட்டிருக்கிறதா? உங்களுடைய செயல் தான் தந்தையாரை கொன்று விட்டிருக்கிறது என்று நீங்கள் உணரவில்லையா? இராமருக்குக் கொடுமை புரிய நீங்கள் எப்படி நினைக்கவும் இயன்றது? அவர் உங்களைத் தம் அன்னையைப் போலவே பாவித்து வந்தாரே! தெய்வீகப் பெண்மணியான சீதைக்கு எத்தகைய துன்பத்தை விளைவித்திருக்கிறீர்கள் என்று நீங்கள் அறிவீர்களா? இராமரும் சீதையும் இல்லாமல் மதிப்பற்றுப் போய்விட்ட அரசாட்சியை நான் ஏற்றுக் கொள்வேன் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் மகன் பரதன் ஒரு நொடி நேரம் கூட இராமரைப் பிரிந்து இருப்பதை நினைக்கவும் இயலும் என்று நீங்கள் உங்கள் மனத்தில் எண்ணினீர்களா? நீங்கள் அப்படி எண்ணியிருந்தால் நீங்கள் என்னைப் பெற்ற அன்னையே அல்ல! என் முகத்தில் இனி விழிக்காதீர்கள்! இஷ்வாகு குலத்தையே நாசமாக்கி விட்டீர்கள், என்பதை இன்னும் உணரவில்லைய? இராமரது பாத கமலங்களை தவிர எனக்குப் புகலிடமே இல்லை. இப்போதே காட்டிற்குச் சென்று இராமரை அழைத்து வரச் செல்கிறேன்.,” என்று கோபமாகப் பொரிந்தான்.

அதன் பிறகு அவனுக்கு அங்கு நிற்கவே பிடிக்காது போயிற்று. அவர்கள் விட்டு விலகிச் செல்லத் திரும்பினான். பரதன் கைகேயியை கோபத்துடன் குற்றஞ்சாட்டி வந்தபோது, சத்ருக்னன், மந்தரையின் தலைமுடியைப் பற்றி இழுத்துக் கீழே தள்ளி அடிக்கலானான். அதற்குள் பரதன் கோபம் தணிந்து அந்தக் கூனிக் கிழவிதான் இத்துணைத் துன்பத்திற்கும் காரணம் என்ற போதிலும், தன தம்பி அவளை மேலும் துன்புறுத்துவதிலிருந்து தடுத்தான்.

பிறகு சகோதரர் இருவரும் மனமொடிந்து போயிருந்த கௌசல்யையிடம் சென்றனர். அவளது பாதங்களில் விழுந்து பணிந்தனர். தனக்கு, இங்கு நடைப்பெற்றுவிட்ட சூழ்ச்சிகளும் திட்டங்களும் ஏதுமே தெரியாது என்றும், சூழ்ச்சியில் தனக்கும் பங்கு உண்டோவென்று தன்னைத் தவறாக நினைக்க வேண்டாம் என்றும், பரதன் கௌசல்யையிடம் மன்றாடிக் கேட்டுக் கொண்டான். அதற்குக் கௌசல்யை, அங்ஙனமெல்லாம் அவன் வருந்த வேண்டாம் என்று அமைதிப் படுத்தி, அவனுடைய தூய அன்பின் பண்பினை அவள் அறிவாள் என்று பரிவோடு கூறி அமைதிப் படுத்தினாள். பிறகு, “இந்த நிகழ்ச்சிகளுக்காக யாரையுமே குறை சொல்ல வேண்டியதில்லை. நீ எப்போதும் போல என் அன்பினைப் பெற்றிருக்கிறாய்,” என்றும் மொழிந்தாள்.

பின்னர் வசிஷ்டர், பரதனும் மற்றும் முக்கிய பெரியோர்களும் கலந்து பேச ஒரு கூட்டம் கூட்டினார். மீண்டும் பழைய அமைதி நிலையை நாட்டுவதற்கு ஆவன செய்ய முயன்றார். அதற்காக, இராமர் வரும் வரை பரதன் நாட்டைச் செவ்வனே ஆண்டு வந்து அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வற்புறுத்திக் கூறினார்.

பரதன் அனைவரது அறிவுரைகளையும் கூர்ந்து கேட்டான். பிறகு உறுதியான குரலில்,” அனைவருக்கும் என் பணிவார்ந்த வணக்கங்கள். நன் முறையில் அறிவுறுத்தியதற்கு மிகவும் நன்றியுடையேன். ஆனால் அன்பு கூர்ந்து என்னை மன்னித்து விடுங்கள். இராமர் ஒரு துறவி போல் கானகத்தில் அலைந்து கொண்டிருக்கும்போது இங்கு ஓர் அரசனாக நான் போகத்தோடு வாழ்வது என்பது என்னால் இயலாத செயலாகும். என் மனமார்ந்த விருப்பம் ஒன்று உள்ளது. நான் இப்போதே சென்று, இராமரது திருவடிகளில் பணிந்து, அவர் மீளவும் அயோத்தியா திரும்பி வந்து அரசாட்சியை ஏற்றுக் கொள்ளும்படி கெஞ்சிக் கேட்டுக் கொள்ளப் போகிறேன். இராமரை அழைத்து வரத் தாங்கள் அனைவரும் என் கூடவே காட்டிற்கு வரும்படி வேண்டிக் கொள்கிறேன்,” என்று பணிவுடன் கூறினான்.

குழுமியிருந்த அனைவரும், பரதனது, பக்தி, நாணயம், தியாக உணர்வு இவற்றைக் கண்டு வியப்பினால் வாயடைத்து நின்றனர். பரதனது வேண்டுகோளுக்கிணங்கி இராமர் மறுபடியும் நாட்டிற்குத் திரும்பி வந்து விடுவார் என்று எதிர்பார்த்து எண்ணும்போதே அனைவரும் பேருவுவகை அடைந்தனர். காட்டிற்குச் சென்று இராமரைச் சந்திக்கவும், தேவை ஏற்படின் காட்டிலேயே முடிசூட்டு விழா நடத்தவும் ஆவன செய்யும்படி அமைச்சர்களை பரதன் கேட்டுக் கொண்டான்.

கேள்விகள்:
  1. பரதன் அயோத்தியா திரும்பியதும் அவனிடம் ஏற்பட்ட, எதிர் விளைவுகள் என்ன?
  2. அனைவரும் நாட்டை ஆளும்படி கேட்டபோது, பரதன் என்ன செய்தான்?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: