இராமாின் பிறப்பு

Print Friendly, PDF & Email
இராமாின் பிறப்பு

Birth of Rama

முன்னொரு காலத்தில் அயோத்தி நாட்டை மிகவும் திறமைசாலியான தசரதன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். இவர் ரகு குலத்தில் பிறந்தவர். இவர் கோசல நாட்டு மன்னரின் புதல்வியான கௌசல்யாவை மணம் புரிந்தார். இவர்களுக்குக் குழந்தை இல்லாததால் தசரதர் மிகவும் வருத்தமுற்றார். அதனால் கெளசல்யாவின் வேண்டுகோளுக்கு இணங்கி சுமித்திரையையும் பிறகு கைகேயியையும் மணந்தார். ஆனால் மூன்று மனைவிமார்களுக்குமே புத்திர பாக்கியம் கிட்டவில்லை.

மிகுந்த வருத்தத்துடன் மன்னர் தசரதன் அவர்களின் குலகுருவான வசிஷ்டரிடம் பிரார்த்தனை செய்தார். குலகுருவின் அறிவுரைப்படி, குழந்தை பிறக்க வேண்டும் என்று கடவுளின் ஆசிகளை வேண்டி பிரார்த்திக்க, புத்ரகாமேஷ்டி யாகம் செய்தார். அந்த யாகத்தை ரிஷ்யசிருங்க முனிவர் நடத்தி வைத்தார். அந்த யாகத்திலிருந்து ஒரு தெய்வீக வடிவம் கையில் கலசத்துடன் வெளி வந்தது. அதே நேரத்தில் ”மகாராஜா! இந்த கலசத்திலுள்ள புனிதமான பாயஸத்தை உன் மூன்று மனைவிமார்களுக்கும் சரிசமமாகப் பகிர்ந்து கொடு” என்று ஓர் அசரீரி ஒலித்தது. மன்னன் அந்தப் பாயஸ கலசத்தை, கையில் வாங்கியவுடன் அந்த தெய்வீக வடிவம் மறைந்து விட்டது.

குருமார்கள் குழந்தைகளுக்குச் சொல்லவேண்டியது:

இறைவனிடம் கையேந்துங்கள்-அவன் இல்லை என்று சொல்லுவதில்லை

கற்றுக்கொள்ள வேண்டிய நீதி: கடவுளிடம் நம்பிக்கை வைப்பது பிரார்த்தனை மற்றும் சரணாகதியின் முக்கியத்துவம்

புனிதமான பாயஸம் மூன்று அரசிமார்களுக்கும் சரிசமமாக பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆனால் சுமித்திரையின் கிண்ணத்தை ஒரு கழுகு கவர்ந்து சென்று விட்டது. அதனால் கௌசல்யாவும் கைகேயியும் தங்கள் கிண்ணங்களிலிருந்து பாதியை சுமித்திரைக்கு கொடுத்தார்கள். விரைவிலேயே கௌசல்யாவிற்கு இராமனும், கைகேயிக்கு பரதனும், சுமித்திரைக்கு இலட்சுமணனும் சத்ருக்னனும் பிறந்தனர்.

கற்றுக்கொள்ள வேண்டிய நீதி: மற்றவர்களின் நலனில் அக்கறையும், அவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் ஏற்படும் மகிழ்ச்சியும். பகிர்ந்து கொள்வதால் உண்டாகும் மகிழ்ச்சி அளவில்லாதது.

தசரதன் தன் நான்கு குழந்தைகளின் பிறப்பை வெகு விமரிசையாகக் கொண்டாடினார். ஏழைகளுக்குப் பசுக்களைக் கொடுத்தார். தசரதனுக்குப் பிறந்தவர்கள் சாமானியக் குழந்தைகள் அல்ல. தெய்வீகமானவர்கள். ஆகவே அவர்கள் தனி மரியாதையுடன் கவனிக்கப்பட்டார்கள். குழந்தையான லட்சுமணன், இரவும் பகலும் அழுவதை சுமித்திரை கண்டாள். வைத்தியர்களிடம் காண்பித்து மருந்து கொடுத்தாலும் எதற்கும் பலனில்லை. கடைசியாக வசிஷ்டரின் அறிவுரைப்படி லட்சுமணனை இராமன் படுத்திருக்கும் தொட்டிலிலேயே கிடத்தினாள். உடனேயே லட்சுமணன் அழுகை நின்றது. அதே போல் சத்ருக்னனும் பரதனுடன் சந்தோஷமாக இருந்தான். அரசகுமாரர்கள் ஓரளவு வளர்ந்தவுடன் தசரதன் அவர்களை வசிஷ்டரின் குருகுலத்திற்கு, கல்வி கற்க அனுப்பி வைத்தார். குருகுலத்தில் அவர்கள் விலை உயர்ந்த உடைகள் அணியாமல் மிகவும் சாதாரண உடைகளையே உடுத்தினார்கள்.

குருமார்கள் குழந்தைகளுக்குச் சொல்லவேண்டியது:

பகட்டான உடைகளை அணியக்கூடாது.

விலை உயர்ந்த கடிகாரங்கள், பென்சில் டப்பா, பேனா போன்றவற்றை பள்ளிக்கூடத்திற்கு எடுத்துச்செல்ல கூடாது. ஏனென்றால் அங்கு அனைத்து மாணவர்களும் சமமாக இருக்க வேண்டும்.

பள்ளிக்கு நாம் செல்வது நல்ல விஷயங்களை கற்றுக்கொள்வதற்காக மட்டுமே.

அவர்கள் கல்வி கற்று முடிந்தவுடன் வசிஷ்டர் அவர்களை தசரதனுடன் அரண்மனைக்குத் திரும்பிச் செல்ல அனுமதித்தார். தசரதன் அவர்களுக்கு வில் வித்தையிலும் பயிற்சி அளிக்க விரும்பினார். பயிற்சி கொடுப்பவர்கள் காட்டிலுள்ள பறவைகளைக் குறி வைத்து வேட்டையாடச் சொன்ன போது, இராமன் வில்வித்தை கற்பதே நல்லவர்களைப் பாதுகாக்க மட்டுமே என்றும், தீங்கற்ற மிருகங்களையும் பறவைகளையும் வேட்டையாட அல்ல என்றும் கூறி மறுத்து விட்டான்

கற்றுக்கொள்ள வேண்டிய நீதி:எளிமையான வாழ்க்கையும் உயர்ந்த எண்ணங்களுமே மேன்மையான வாழ்க்கைத்தரமாகும், ஆடம்பரமான பகட்டுகள் அல்ல.

குருமார்கள் குழந்தைகளுக்குச் சொல்லவேண்டியது:
ஸ்ரீ ராமர் தெய்வீக மொழிகளான ‘எப்போதும் உதவிசெய், ஒருபோதும் துன்பம் செய்யாதே’ என்பதனைப் பின் பற்றினார் .

கற்றுக்கொள்ள வேண்டிய நீதி: அஹிம்சா / தர்மம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: