பகவான் பாபாவின் பிறந்த நாள்-உட்கருத்து

Print Friendly, PDF & Email
பகவான் பாபாவின் பிறந்த நாள்

பகவான் சத்திய சாயி பாபா அவர்கள் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள புட்டபர்த்தி என்ற கிராமத்தில் 1926-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ஆம் தேதி தமிழ் வருடமான அக்ஷய வருடம், கார்த்திகை மாதம் திங்களன்று சங்கடஹர சதுர்த்தி நன்னாளில் அதிகாலை பிரம்ம முஹூர்த்தத்தில் ஈஸ்வரம்பாவுக்கும் பெத்த வெங்கப்ப ராஜுவிற்கும் மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த போது அவர்கள் வீட்டில் பரணில் வைத்திருந்த இசைக்கருவிகள் தானாகவே இயங்கி ஒலி எழுப்பியது, அனைவருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது. அதுவே, பிறந்தது ஒரு தெய்வீகக் குழந்தை என்பதை பறை சாற்றுவதுபோல் இருந்தது. மேலும் அக்குழந்தை, பிறந்தவுடன் அங்குள்ளவரைக் கண்டு சிரித்தது. அவரன்னை ‘சத்ய நாராயண விரதம்’ அனுஷ்டித்துப் பிறந்ததால் அவருக்கு சத்யநாராயணன் என்று பெயர் வைக்கப்பட்டது. அவரை எல்லாரும் சத்யம் என்றே அழைத்தனர். அவருடைய பாட்டனார் கொண்டமராஜு, சத்யா ஒரு தெய்வீகக் குழந்தை என்று நன்கறிவார். சத்யாவுக்கு சிறு வயதிலேயே மற்றவர்களுக்கு உதவும் பண்பு மிகுந்திருந்தது. பசுபக்ஷியிடமும் அன்பு காட்டும் அச்சிறுவன், யாரேனும் அவைகளுக்குத் தீங்கு செய்ய நினைத்தால் ஓடிப் போய் அதைக் காப்பாற்றுவார். அந்த எளிய கிராமச் சிறுவர்களுக்கு இறைவழிபாட்டைக் கற்பிப்பதற்காக ‘பண்டரி பஜனை’ குழு ஒன்றை அமைத்தார்.அவர் பள்ளிக்குச் செல்வதற்கு அவரிடம் ஒரே ஒரு சீருடை மட்டுமே இருந்தது.காலணிகளும் கிடையாது. அவற்றைப் பொருட்படுத்தியதும் கிடையாது. அவர் பள்ளிக்குச் சென்றபோது அவரிடம் டிபன் பாக்ஸ் கூட கிடையாது. அவர் கேழ்வரகுக் களியைத் துணியில் கட்டி எடுத்துப்போவார். ஆனால் சரியான நேரத்திற்குப் பள்ளி செல்வார். தனது பதினான்காவது வயதில் வீட்டைவிட்டு வெளியேறும் போது தன் பக்தர்களுக்கு உதவும் பொருட்டு தான் வெளியில் வந்து விட்டதாகக் கூறினார். அப்போது அவரன்னை அவரை புட்டபர்த்தியைத்தான் தன் வாசஸ்தலமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியபோது அதை ஏற்று அதன் படி நடந்தார். அன்று முதல் கடைசி மூச்சு வரை அவர் செய்த தன்னலமற்ற சமூக சேவைகள் ஏராளம். அவரது சேவைகளைக் கண்டு உலகமே வியந்தது. அவர் ஒருவரால் தான் ஜாதி மத ஒற்றுமையைக் கொண்டுவர முடிந்தது. மதங்கள் பலவாயினும் இறைவன் ஒன்றே என்ற கருத்தை வலியுறுத்துவார். எல்லா மதத்தினர்களின் பண்டிகைகளை புட்டபர்த்தியில் கொண்டாடுவது வழக்கம். அவர் பிறந்த கிராமத்தில் பள்ளிவசதி, மருத்துவ வசதி, குடிநீர்வசதி என்று எதுவுமே முன்பிருந்ததில்லை.

தன் அன்னைக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும்பொருட்டு அந்த வசதிகளை அமைத்துக்கொடுத்தார். அங்குள்ள மருத்துவ மனை உலகத்தரம் வாய்ந்தது. அதே சமயத்தில் அங்கு நோயாளிகளுக்கு எல்லாம் இலவசம். அங்குள்ள பல்கலைக்கழகமும் தரம் வாய்ந்தது.அங்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி முற்றிலும் இலவசம். கட்டணம் வசூலிப்பதில்லை. மாணவர்கள் தரம் வாய்ந்த கல்வியுடன் பஜனை பாடுதல் வேதம் ஓதுதல் போன்றவற்றிலும் முழுவதுமாகக் கலந்து கொள்கிறார்கள். தவிர குக்கிராமமாக இருந்த புட்டபர்த்தியில் பிளானடேரியம், புகைவண்டி நிலையம், விமான நிலையம், உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கு,சைதன்யஜோதி என்ற கண்காட்சி ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ளார். அவர் எப்போதும் மற்றவருக்கு “உதவிசெய், ஒருபோதும் துன்புறுத்தாதே” என்று கூறுவர். அவர் வலியுறுத்துவது விழுக்கல்வி. தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்தும் பகவான் எல்லோரும் விழுக்கல்வியைக் கடைபிடிக்க வலியுறுத்துவார். குஜராத்தில் பூகம்பம் வந்தபோது அம்மக்களுக்குத் தேவையான பொருட்களையும் அனுப்பிவைத்து வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க ஏற்பாடுகள் செய்தார். தமிழ் நாட்டில் சுனாமி வந்தபோதும் மக்களுக்குத் தொண்டுகள் பல செய்தார். ஏழைகளுக்கு அவர் செய்த சேவை எண்ணிலடங்காது. மனிதனுக்குச் செய்யும் சேவை மாதவனுக்குச் செய்யும் சேவை என்பார். ”எல்லோரையும் நேசி எல்லோருக்கும் சேவை செய்” என்பதை செய்துகாட்டிய பெருமை பகவான் பாபாவையே சேரும். ஒரு தனி மனிதனால் இவ்வளவு சேவை செய்யமுடியுமா என்று அதிசயித்த மக்கள் சாக்ஷாத் பகவான் ஒருவர் மட்டுமே இத்தகைய செயலை செய்யமுடியும் என்றுணர்கின்றனர். அவரது பிறந்தநாளில் அவர் செய்த சேவைப் பணிகளையும், அவரின் உபதேசங்களையும் நினைவுகூர்ந்து அவர் வழி நடப்போமாக.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன