கிறிஸ்தவ மதம்

Print Friendly, PDF & Email
கிறிஸ்தவ மதம்

முன்னுரை ஏசு கிறிஸ்துவைக் கடவுளாகக் கொண்டவர்களது மதம் கிறிஸ்தவ மதமாகும். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் யூத மதத்திருந்து தோன்றியது. முதல் கிறிஸ்தவர்கள் யூத மதக்கருத்துக்களை ஆதரித்தனர். ஆனால் அவர்கள் மெஸியா அல்லது கிறிஸ்து நாசரத் என்ற ஊரில் முன்பே ஏசு என்ற பெயரில் அவதரித்துவிட்டதாகக் கருதினார். ஆகவே மெசையா அல்லது கடவுளின் தூதர் அல்லது கிறிஸ்து என்று ஏசு அழைக்கப்பட்டார். ஏசுகிறிஸ்துவின் வாழ்வும், வாக்கும் கிறிஸ்தவ மதத்தின் மையமாகும்.

ஏசு கிறிஸ்துவின் வாழ்க்கை

ஏசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறும் அவரது போதனைகளும் பைபிளில் புதிய ஏற்பாட்டில் (New Testament) காணப்படுகின்றன. ஜோசப் என்ற மரவேலை செய்பவருக்கும் மேரி என்கிற பெண்ணுக்கும் பெத்லஹேம் என்ற ஊரில் மாட்டுத் தொழுவத்தில் ஏசுநாதர் பிறந்தார். அவர் கடவுளின் ஆசிர்வாதத்தால் பிறந்தவர். இந்த உலகைப் பாவங்களிலிருந்து மீட்டு, அன்பு என்ற ஆயுதத்தால் மிகப்பெரிய ஆன்மீகப் புரட்சியை ஏற்படுத்தக் கடவுளால் அனுப்பப்பட்ட தூதர் என்றே அவரைக் கிறிஸ்தவர்கள் நம்பினர். அவர் யூதர்களின் சில மூடப் பழக்கங்களையும், மதக்கோட்பாடுகளின் மொழி பெயர்ப்புகளையும் ஒப்புக்கொள்ள மறுத்தார். அவர் நோயாளிகளைக் குணப்படுத்தும் அற்புதங்களைச் செய்தார்.

ஏசுநாதர் சிறுகதைகள், நீதிக்கதைகள் மூலம் தம் கொள்கைகளை எளிதில் பாமரமக்களும் பின்பற்றும்வண்ணம் எடுத்துக் கூறினார். தன் சீடர்களில் 12 பேரை மட்டும் தேர்வு செய்து தன்னுடன் ஜெருசலேம் அழைத்துச் சென்றார். அவர் சென்ற இடமெல்லாம் அவரது சொற்பொழிவுகள் மக்களை ஈர்த்தன. வெகு விரைவில் மக்களை ஆட்கொண்டவர் ஏசுநாதர். ஏழை, எளியவர்கள், நோயாளிகள், தாழ் குடிமக்கள் இவர்களிடம் அவர் காட்டிய அன்பும், அரவணைப்பும் அனைவரையும் நெகிழ வைத்தன. யூதர்கள் அவரைத் தங்கள் மதத்தைச் சீர்குலைக்கப் பிறந்த விரோதியாகவே கண்டனர்.

யூதர்கள் அவரை ரோமன் கவர்னரிடம் இழுத்துச் சென்று அவரைத் தெய்வ நிந்தனை செய்பவராகச் சித்தரித்து சிறையில் அடைத்தனர். யூத மதத்தலைவர்கள் அவரைப் பலவகைகளில் குற்றஞ்சாட்டி இறுதியில் சிலுவையில் அறைந்தனர். அதன் பின் சில தினங்களிலேயே அவர் உயிர்பெற்று எழுந்ததைச் சீடர்கள் கண்டதால் அவரைப் பற்றிய நம்பிக்கை பரவியது.

புனித நூல்

பைபிள் என்ற கிரேக்க சொல்லுக்கு புத்தகம் என்று பொருள். அதில் 66 புத்தகங்கள் உள்ளன. பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்களும் புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்களும் உள்ளன. மொத்தம் 1189 அத்தியாயங்கள் காணப்படுகின்றன. நாற்பது நபர்களால் பைபிள் எழுதப்பட்டது. இனிமேல் நடக்கக்கூடியவை மற்றும் நடந்தவை போன்ற பல செய்திகளை உள்ளடக்கியது பைபிள். அதில் கூறப்பட்டுள்ள பல முன்னறிவிப்புகள் பிற்காலங்களில் நிறைவேறின. ஆகவே பைபிள் கடவுளின் வாக்காகவே கருதப்படுகிறது.

முக்கிய போதனைகள்

மலைப்பிரசங்கம் (Sermon on the mount), ஏசு நாதரின் போதனைகளை உள்ளடக்கியது. ‘உன்னைப்போல் உன் அயலானை நேசி. பகவனையும் நேசி, சபிப்பவர்களையும் ஆசீர்வதி’ போன்றவை மற்றும் சில போதனைகள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன