மன நிறைவும் மன அமைதியும்
மன நிறைவும் மன அமைதியும்
கடவுளின் தூதரான கௌதமபுத்தர் ஒரு காட்டுவழியே அடுத்துள்ள நகரத்திற்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு குளிர்ந்த நீரோடையைப்பார்த்த அவர் அந்தத்தெளிந்த நீரில் கைகால் முகம் கழுவிப் புத்துணர்ச்சி பெற்றவராக ஒரு மரத்தடியில் தியானத்தில் அமர்ந்தார்.
அவ்வழியே, குதிரையின் மீதமர்ந்த ஓர் அரசன் வந்தான். அவன் தன் இராஜ்ஜியத்தை விரிவாக்க எப்போதுமே அடுத்துள்ள அரசர்களோடு போர்புரிந்து வருபவன். அதனால் அவனது இதயம், பகைமை, அச்சம், பொறாமை போன்ற தீயஉணர்வுகளால் நிறைந்திருந்தது. அப்படிபட்டவன், கண்களை மூடிக்கொண்டு சோம்பேறி போல ஒரு சந்நியாசி அமர்ந்திருப்பதை பார்த்ததும், மிகவும் கோபம் கொண்டான். குதிரையிலிருந்து கீழிறங்கி புத்தரிடம் வந்து “ஓ, சந்நியாசியே, கண்களை திறந்து, உன் முன் நிற்பது யார் என்று பார்! சகல வசதிகளையும் பெற்ற ஒரு அரசனான நானே சோம்பி உட்கார இயலவில்லை. சந்நியாசிகள் என்ற பெயரோடு மற்றவர் உழைப்பினால் வயிற்றை நிரப்பிவரும் நீங்களும் சோம்பேறிகளாக இருந்து மற்றவர்களுக்கும் அங்ஙனமே உபதேசித்து அவர்களையும் கெடுக்கிறீர்கள்”, என்று பொங்கி எழுந்த சீற்றத்தில்; சொற்களை பொரிந்து தள்ளினான் அவன். மிதமிஞ்சிய கோபத்தில் கொதித்த குரலில் சொற்களை கௌதமர் மேல் வாரி வீசிய அவன், சற்று நேரத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டதால் களைத்து சோர்ந்து போனான்.
அமைதியாக அதுவரை அம்ர்ந்திருந்த கௌதமர் மெல்ல கண்களைத் திறந்தார். இளநகை இனிதாக அரும்ப அரசனிடம், “உட்கார் மகனே! உண்மையில் நீ மிகவும் களைத்துத்தான் போயிருக்கிறாய். தாகம் தணிந்து உன் சோர்வை போக்க, நீரோடையிலிருந்து குளிர்ந்த நீர் கொண்டுவரட்டுமா?” என்று பரிவோடு வினவினார்.
மென்மையும் இனிமையும் சேர்ந்த அவரது அன்பின் சொற்களைக்கேட்ட மன்னன் சிலையென நின்றுவிட்டான். அந்தக் கணமே அந்த சந்நியாசி இளவரசர் சித்தார்த்தராகத்தான் இருக்க வேண்டும் என்று அவனுள் ஒரு உள்ளுணர்வு கூறியது. சித்தார்த்தர் அரண்மனையின் சுகபோகங்களையெல்லாம் உதறிவிட்டு அமைதியைத் தேடி வெளிவந்தவர். பின்னர் அவரே கௌதமபுத்தர் என்றும் “மெய்யறிவு பெற்றவர்” என்றும் போற்றப் பெற்றார்.
அவரை யார் என்று ஓரளவு உணர்ந்துகொண்ட அரசன் உடனே சந்நியாசியின் கால்களில் பணிந்து வணங்கினான். “என் இழிவான தவறுக்கு அன்புகூர்ந்து என்னை மன்னித்து விடுங்கள்!” திடீரெனச்சீறி எழுந்த கோபத்தினால், நான் கூறிய கடும்சொற்களையும், கண்டபடி நான் திட்டியதையும் பொறுத்துக்கொண்டு அங்ஙனம் சலனமற்று அமைதியாக அமர்ந்திருக்கவும், பின்னர் அவ்வளவு பரிவுடன் கனிவாக என்னுடன் பேசவும் தங்களால் எங்ஙனம் இயலுகின்றது என்பதை தயவுசெய்து கூறவேண்டுகிறேன் என்று கேட்டான்.
அன்பின் மகனே! நீ ஒரு தட்டு நிறைய இனிப்புகளை வைத்து ஒருவனுக்குத் தருகிறாய் என்று வைத்துக்கொள். அவன் அதைப்பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டானானால், அந்த இனிப்பு பிறகு யாரைச்சேரும்?” என்று அரசனைக்கேட்டார் கௌதமர்.
உடனடியாக அதற்கு அரசன், “கட்டாயம் அதை யார் கொடுத்தார்களோ அவர்களிடம்தான் அது சேர்ந்துவிடும்” என்று சரியான விடை பகர்ந்தான்.
அங்ஙனமே நீ கூறிய ஒரு சிறிய சொல்லைக்கூட நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை நீ கவனிக்கவில்லையா? அதனால் நீ படபடவென்று பொரிந்தவை எப்படி என்னை பாதித்து வருத்த முடியும்?” என்றார் புத்தர் அமைதியாக. அந்த சந்நியாசி புத்தரேயன்றி வேறு எவரும் அல்லவென்று வெள்ளிடை மலையென உணர்ந்து விட்டான் அரசன்.
உடனே சென்னி தாழ்ந்து வணங்கியவனாய் “பேரறிவின் ஜோதியே! நிலையான இன்பம் பெற எனக்கு வழிகாட்டியருளுங்கள்”. என்று வேண்டினான். இறைவனின் அருளைப்பெற்ற புத்தரது கண்கள் ஞானச்சுடர் வீசின. மகனே! கோபம், பேராசை, பொறாமை அச்சம் மற்றும் எல்லா வகையான ஆசாபாசங்களும் மனிதனுடைய மகிழ்ச்சியை கொள்ளையடித்து கொண்டு போய்விடுகின்றன . நிறைவான மனம், அருளார்ந்த அமைதி கனிவார்ந்த அன்பு இவையே மனிதனின் நிலையான இன்பத்துக்கு அடிப்படைகளாகும். எவனொருவன் மன நிறைவும்,அதனால் மன அமைதியும் பெறாது இருக்கிறானோ அவன் ஒரு பிச்சைக்காரனே. எவனொருவன் யாருக்கும் உதவி புரியும் மனப்பாங்கும் அன்போடு சேவை செய்யும் பண்பும் பெற்றிராது இருக்கிறானோ அவன் ஒரு சோம்பேறியாவான். எவனொருவன் நிறைவான மனம் என்ற கிரீடத்தைத் தரித்தவனாய், அமைதியும், அனைவரிடமும் அன்பும் கொண்டவனாய் இருக்கிறானோ, அவனே அரசர்க்கெல்லாம் பேரரசனாக விளங்குவான். ஏனெனில் அவன் ஒருவன் தான் வாழ்க்கையில் நிலையான இன்பத்தை அறிந்தவன்” என்று அரசனுக்கு நீண்ட அறிவுரை வழங்கினார் கௌதமபுத்தர்.
நன்றி நிறைந்த உள்ளத்தினனாய் அரசன் புத்தரின் காலடியில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்துவிட்டான். “ஐயனே! புத்தர்பிரானே! என்னை தங்கள் சீடனாக ஏற்று அருளுங்கள். இன்றிலிருந்து தாங்கள்தாம் என் தலைவர். தாங்கள் வழிகாட்டி செல்லுங்கள் நான் தங்களை பின் தொடர்ந்து வருகிறேன்” என்று தன்னையே அவரிடம் ஒப்படைத்துக் கூறினான் அரசன்.
கேள்விகள்:
- அரசன் கௌதமபுத்தரிடம் ஏன் கோபப்பட்டான்? அவன் புத்தரைத் திட்டியது சரியானதா, தவறானதா? தக்க காரணத்தோடு விளக்குக?
- கோபத்தினால் சுடுசொற்களை வீசிய அரசனிடம் புத்தரால் எங்ஙனம் அத்துணை பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்க முடிந்தது?
- அரசனுக்குப் புத்தர் கூறிய அறிவுரை என்ன?