நடனம்
நடனம்
பழங்காலத்திலிருந்து, நாட்டியம் இந்தியாவில் ஆராதனையுடன் தொடர்பு கொண்டிருந்தது. வைதிகச் சடங்குகளில் நாட்டியத்துக்கு முக்கியப் பங்கு இருந்தது. இருப்பினும், சங்கீதத்தில் உள்ள ஈடுபாடு மக்களுக்கு நாட்டியத்தில் இல்லை. மேனாட்டில் இருந்தது போன்று இந்தியாவில் சமூக வாழ்க்கையில், ஒரு அங்கமாக நாட்டியம் பரிணமிக்கவில்லை. இந்தியாவில் சாஸ்தீரிய நடனம், கிராமிய நடனம் ஆகிய இரு வகைகளாக நாட்டியங்கள் வளர்ந்துள்ளன.
இந்தியாவில் வளம் பெற்றுள்ள சாஸ்திரீய நடனங்கள் எல்லாவற்றிலும் பரதநாட்டியம் மிகவும் எழில் மிக்கது. தென்னாட்டில் அது ஆரம்பமாயிற்று. இப்போது இந்தியாவில் மட்டுமல்ல, வெளி நாட்டிலும் பரதநாட்டியத்தில் தேர்ச்சி மிகுந்தவர் பலர் உள்ளனர். பல வருடங்கள் பயிற்சிக்குப் பிறகு தான் இக்கலையில் தேர்ச்சி பெற முடியும். இதனைப் புரிந்துக்கொண்டு ரஸிப்பதற்கு, ரஸிகர், முத்திரைகள்(கைவிரலசைவு), பாவனைகள்(முகத்தசைவு) இவற்றை நன்கு அறிந்துகொள்ள வேண்டும்.
வட இந்திய நடனங்களில், மிகவும் பிரசித்தி பெற்றது மணிபுரி. மணிபுரி, பரத நாட்டியத்தைப் போல் முத்திரைகளையே முழுவதும் சார்ந்திருப்பதில்லை. ஓடிஸ்ஸியும் குச்சிபுடியும் மிகவும் பிரசித்தி பெற்ற நடன பாணிகள்.
இந்த நடனங்களின் வரலாறு, முறைகள் இவற்றைக் கற்றுக்கொண்டு அறிவினை விருத்தி செய்து கொள்வது சிறந்த அனுபவமாகும். இதனை நாட்டிய மேடையில் ரசிப்பது எழிலுணர்வு மிகுந்த அனுபவமாகும்.
எவ்வாறு நாடோடிப் பாடல்கள் இந்தியாவின் இசைப்பரம்பரையில் ஒரு பிரிக்க முடியாத அம்சமோ, அதுபோல நாடோடி நடனங்களும் இந்திய நடனங்களின் மரபில் இணை பிரியாத அம்சமாகும். இந்தியாவின் நாட்டுப் புறங்களுக்குச் சென்று பாருங்கள்; அங்கு எவ்வாறு மக்கள் பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் சமயச் சடங்குகளில் ஈடுபடுகிறார்கள் என்பதைக் காண்பீர்கள். திருவிழாக்களிலும், மேளாவிலும் அவர்கள் நடனமாடுவது உண்டு. கிராமிய நடனங்களும் கிராமியப் பாடல்களும் கூட புராணக் கதைகளை மட்டும் சார்ந்தவை என்று கொள்ளலாகாது. அவற்றில் பல சாதராண மக்களின் வாழ்க்கையினைப் பற்றியும், சமூகத்திலுள்ளவீரர்கள், வீராங்கனைகள் இவர்களைப் பற்றியும், விவரிப்பவையாகும். இந்திய நாடோடிப் பாடல்கள் நடனங்கள் இவற்றின் பொருளைப் புரிந்து கொள்பவர், நம் நாட்டுப்புற மக்களின் முற்கால வாழ்க்கையையும், பண்புகளையும் அறிந்து கொள்வார்.