அறம் (தர்மம்)

Print Friendly, PDF & Email
அறம் (தர்மம்)

பாபா “எப்போதும் சரியான செயலைப் புரிவதற்கு மனிதசங்கற்பத்தை (Will) செலுத்திச் செல்வதே தர்மமாகும்” என்று விளக்குகின்றார். மனித சங்கற்பத்தைப் பிழைபடாது செயற்படுத்துவதன் மூலமாகவே சரியான நடத்தை உருவாகின்றது. நன்னடத்தையானது நன்கு ஒன்றிணைந்த ஆளுமைத்தன்மையின் தவிர்க்க முடியாத அம்சமாகும் (Component). மனித சங்கற்பத்தைக் குணமேம்பாடுகளுக்கும் சூழ்நிலைக்கும் தகுந்தவாறு உருவாக்கி, நேரான செயலில் (சங்கற்பத்தினை) ஈடுபடுத்துவதன் மூலமாக வேநன்னடத்தை நிகழ்கின்றது. இந்திய கோட்பாட்டின்படி, உடல்வழிப்பட்ட, அறநெறிப்பட்ட, சமூகவழிப்பட்ட, சமயநெறிப்பட்ட, ஆன்மீக நெறிப்பட்ட, எல்லாக் கடமைகளும்(Duties) நன்றிக்கடன்களும்(Obligation) தனக்குள்ளே கொண்டதே அறம் எனப்படும் தர்மமாகும். அது பிறப்பிலிருந்து இறப்பு வரையிலும், விழித்த நேரத்திலிருந்து தூங்கும் நேரம் வரையிலும் மனிதன் புரிய வேண்டிய எல்லாச் செயல்களையும் ஒழுங்குபடுத்துகிறது.

எது தனி மனிதனின் நன்னலத்துக்கும், எல்லோரின் நன்னலத்துக்கும் உறுதுணையாக அமைகிறதோ அந்த நேரான அறநெறிப்பட்ட நடத்தையே தருமத்தின் சாரமும் உட்கிடக்கையுமாகும். தாரயதி இதி தர்ம: என்று கூறப்படுகிறது. இந்தப்பிரபஞ்சம் முழுவதையும் காத்து நிலைநிறுத்துவது எதுவோ அதுவே தர்மமாகும். அதுவே, படைப்பின் இசைவும், இயக்கவிதிகளும் சீர்குலையாதிருக்க வழிசெய்கிறது. ஒவ்வொருவரும் படைப்புச் சங்கிலியில் ஒரு கணு (link)வாக இருக்கின்றனர். சங்கிலி உறுதியாக இருந்து செயல்பட வேண்டுமல்லவா, ஒவ்வொருகணுவும் குறையில்லாது இருக்க வேண்டுமல்லவா, அதுபோலவே இப்பிரபஞ்சம் நிறைவாக இருப்பதற்கும், சீரான முறையில் செயற்படுவதற்கும் ஒவ்வொருவருடைய நடத்தையும் பரிபூரணமாக இருத்தல் வேண்டும்.

குணநலன்கள் கூடியும், நேரான வழியிலும் வாழ்வதுடன்கூட, நமது செயல்கள் அனைத்தையும் இறைபாட்டுச் செயல்களாகக் கருதி அவற்றை இடைவிடாது, தவறாது அர்ப்பணம் செய்து கொண்டே இருத்தல் வேண்டும். இவ்வாறு நம்வாழ்வில் நாம் புரியும் ஒவ்வொரு செயலும் அறநெறிப்பட்டதுடன் அமையாது, ஆன்மீகத்திசையிலும் நம்மை, திருப்பிக்கொண்டே வருகிறது. வாழ்க்கையின் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப் பொருள்களில் அறமே (தர்மம்) முதலாவதும் அடிப்படையானதுமான இலட்சியமாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: