அறிவிற் சிறந்த தர்மஜா
அறிவிற் சிறந்த தர்மஜா
பாண்டவர்களின் மூத்தவரான தர்மஜா என்று போற்றப் பெற்ற யுதிஷ்டிரர் தர்மத்தின் இலக்கணமாகத் திகழ்ந்தார். அதாவது நேர்மை மற்றும் நியாயமான பண்பின் சிகரமாக அவர் விளங்கினார். மகாபாரதத்தில் அவருடைய நேர்மையைக் குறிக்கும் நிகழ்ச்சிகள் செறிந்துள்ளன. ஒரு நிகழ்வில் தர்மதேவனான யமனை அவர் சந்தித்தது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
பாண்டவர் வனவாசத்தில் அலைந்து கிடந்தபோது, அவர்களுக்கு நாக்கு வறண்டு மிகுதியாகத் தாகம் ஏற்பட்டது. அவர்களில் இளையவனான சஹாதேவன் ஒரு மரத்தின் மீதேறி பார்த்தபோது சற்றுத் தொலைவில், ஒரு குளம் இருப்பதைக் கண்டான். தனது தமையன்மார்களை அங்கேயே நிறுத்திவிட்டு குளம் இருந்த திக்கில் விரைந்து ஓடினான். குளத்தை நெருங்கியதும், முதலில் தன் தாகத்தை தீர்த்துக் கொண்டு பிறகு தமையன்மார்களுக்குக் குடத்தில் நீர் முகந்து செல்லலாம் என்று எண்ணினான். ஆனால், அவன் குளத்தில் இறங்கி கைகளில் நீரை அள்ளியபோது, எங்கிருந்தோ ஒரு குரல் உரத்து அவன் செயலைத் தடுத்தது.
“நில்! நான் இந்த குளத்தை காத்து வரும் யமன், என்னுடைய கேள்விகளுக்கு விடை சொல்லாமல் நீ நீரைப் பருக முடியாது” என்று கட்டளையிட்டது. சஹாதேவன் அதிகாரமாக கட்டளையிட்ட அந்தக் குரலைப் பொருட்படுத்தாது, கைகளால் நீரை ஆவலோடு அள்ளி அள்ளிப் பருகினான். அடுத்த கணமே மயக்கமுற்று கீழே சாய்ந்து குளக்கரையிலேயே இறந்து விழுந்து விட்டான்.
சற்றுப் பொறுத்து நகுலன் தம்பியைத் தேடி வந்து அங்ஙனமே மடிந்தான். அதேபோல், அர்ஜுனன், பீமன் இருவரும்கூட வந்து நீரைப் பருகி அதே நிலையை அடைந்தனர்.
இறுதியாக யுதிஷ்டிரர் குளத்தை நோக்கி வந்தார். தம்பியர் நால்வரும் இறந்துபட்டு வீழ்ந்து கிடப்பதைக் கண்டு, திகைத்து, காரணம் புரியாது அஞ்சி நடுங்கினார். பின்னர் அவரும் மெதுவாக குளத்தை நெருங்கி நீரை அள்ள முனைந்தபோது, யமனுடைய குரல் அவருக்கும் கேட்டது. தர்மஜா யமனின் கேள்விகளுக்கு விடை சொல்ல உடனே எழுந்து நின்றார். அவரை யமன் பல கேள்விகள் கேட்டான்.
அவற்றில் சிலவற்றையும், அதற்கான தர்மஜாவின் விடைகளும் வருமாறு;
- வினா: மனிதனை ஆபத்திலிருந்து காப்பாற்றுவது எது?
- விடை: அஞ்சாமை
- வினா: எத்தகைய விஞ்ஞான பாடத்தினால் மனிதன் அறிவாளியாகிறான்
- விடை: வெறும் சாஸ்திரங்களை கற்பதனால் மனிதன் சிறந்த அறிவைப் பெற முடியாது.அறிவாளிகளின் கூட்டுறவினால்தான் அவன் மேன்மையான அறிவைப் பெற முடியும்.
- வினா: உலகத்தை விட (பூமாதாவை விட) உயர்தரமான வலிமை மிக்கது எது?
விடை: தன் மக்களைச் செவ்வனே வளர்க்கும் ஒரு தாய், சரீரமாதா. பூமாதாவை விட உயர்தரமான, வலிமை மிக்கவளாவாள். - வினா: காற்றை விட வேகமானது எது?
- விடை: மனம்
- வினா: பயணம் செல்கிறவனுக்குச் சிறந்த தோழன் யார்?
- விடை: அவனுடைய கல்வி
- வினா: மகிழ்ச்சி என்பது என்ன?
- விடை: நல்ல பண்புகளின் விளைவே மகிழ்ச்சி.
- வினா: மனிதன் எப்போது எல்லோராலும் விரும்பப்படுகிறான்?
- விடை: தன்னுடைய அகந்தையை அகற்றினால்.
- வினா: துயரமே தராமல், இன்பத்தைத் தரும் இழப்பு எது?
- விடை: கோபம்
- வினா: எதை விடுத்தால் மனிதன் செல்வந்தனாகிறான்?
- விடை: ஆசையை
- வினா: உலகத்தில் பேரதிசயம் எது?
- விடை: நாள்தோறும், மனிதன், உயிரினங்கள் மடிவதைப் பார்க்கிறான். இருந்தும் இருப்பவர்கள் என்றென்றும் உயிரோடு வாழ விரும்புகின்றனர். ஒரு நாள் இறக்கப் போகும் மனிதன் அன்று இறந்தவனுக்காக அழுகிறான். இது தான் உலக மகா அதிசயமாகும். தர்மஜாவின் பொருத்தமான விடைகளினால் யமன் மிக மகிழ்ந்தான்.
தர்மஜாவிற்கு ஒரு வரம் தருவதாகக் கூறினான். இறந்து கிடக்கும் உடன் பிறந்தோரில், ஒருவனைக் கூறும்படியும், தான் அவனை மட்டும் உயிர்ப்பிப்பதாகவும் கூறினான்.
யுதிஷ்டிரன் நகுலனைத் தேர்ந்தெடுத்தார். அங்ஙனம் தான் அவனைக் குறித்து கேட்டதற்கு விளக்கமும் கூறினார். என் தந்தையருக்கு இரு மனைவியர். குந்தி அவளது மகனான நான் மட்டுமாவது பிழைத்து வந்ததற்கு நிறைவோடு மகிழ்வாள். மாதுரியின் மகன்கள் இருவருமே இறந்து கிடக்கின்றனர். நீதிகோலின் இரு தட்டுக்களையும் சமமாக நிறுத்துவதற்குத்தான் நான் நகுலனை உயிர்ப்பிக்க கேட்டேன்.
யமன் அடுத்தகணமே யமதேவனாக, நீதியை நிலை நிறுத்தும் தர்மராஜனாக மாறினான். தர்மஜாவை அவருடைய அறிவுத்திறனுக்கும் உயர்தரமான பண்பிற்கும் புகழ்ந்து பாராட்டினான். அவருடைய தம்பியர் நால்வரையுமே உய்ர்ப்பித்துத் தந்து, அனைவரும், எல்லாவகையிலும் வெற்றி பெற்று, இன்பமாக வாழ வாழ்த்தினான். தர்மஜாவின் நேர்மை, தர்மநெறியே, எல்லா சூழ்நிலைகளையும் அவரையும் அவரது தம்பியரையும் காப்பாற்றி வந்தது.
கேள்விகள்:
- பாண்டவர் நால்வரும் குளக்கரையில் ஏன் மடிந்து வீழ்ந்தனர்?
- தர்மஜா தம் கூரிய அறிவை எங்ஙனம் வெளிப்படுத்தினார்?
- உயிர்ப்பித்துத் தர அவர் நகுலனை ஏன் தேர்தெடுத்தார்?