திரௌபதி – அன்பின் அன்னை

Print Friendly, PDF & Email
திரௌபதி – அன்பின் அன்னை

பாண்டவரும், பாண்டு இளவரசர்களும், நீதி நேர்மையான பண்பின் ஓர் எடுத்துக் காட்டாக வாழ்ந்தனர். சனாதன தர்மத்தின் நீதி நெறியான கொள்கையில் பெறும் பற்றுதல் கொண்டிருந்தனர். நேர்மை, வீரம், தூய்மை இவற்றின் உருவமாக அவர்கள் விளங்கினர். கிருஷ்ணரிடம் ஆழ்ந்த பக்தி கொண்டு வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும், அவர் வழிகாட்டிய பாதையில் சென்றனர். அந்த சகோதரர்களிடம் பொறுமை, அமைதி, விடாமுயற்சி இவை மிகச் சிறந்த இயல்புகளாக அமைந்திருந்தன. பாண்டவர்களின் மனைவியான திரௌபதியும் குணத்தில் அவர்களுக்கு நிகராகவே விளங்கினாள்.

மகாபாரத யுத்தத்தின் போது, கௌரவப் படையின் போர் வீரனான அசுவத்தாமன், உபபாண்டவர் என்று அழைக்கப்பெறும் பாண்டவ புத்திரர் அனைவரையும் அவர்கள், தங்கள் பாசறையில் ஓர் இரவு உறங்கிக் கொண்டிருக்கும்போது, அங்கு சென்று கொன்று குவித்து விட்டான். பாண்டவர்களுக்கு வில் வித்தைகளைக் கற்பித்து அர்ஜுனனைச் சிறந்த வில்லாண்மையாளனாக உருவாக்கிய அவர்களது குரு துரோணாச்சாரியாரது மகன் தான் இந்த அசுவத்தாமன். எனினும், தூங்கும் குழந்தைகளை, அவர்கள் எதிரிகளாக இருந்தபோதிலும், வெட்டித் தள்ளுவது என்பது குரூரமானதும், வெறுக்கத்தக்கதுமான செயலல்லவா?

பாண்டவர் அனைவரும் இந்த குரூரத்தைக் கண்டு துயரத்தினால் துடித்துப் போய்விட்டனர். திரௌபதிக்கு இந்த கோரமான நிகழ்ச்சியை, எப்படி, யார், அறிவிப்பது என்று செய்வறியாது திகைத்தனர். அசுவத்தாமனைப் பற்றி இழுத்துக் கொண்டு சென்று, திரௌபதியின் முன்னிலையில் நிறுத்தி அவனை எப்படி தண்டிப்பது என்று தீர்மானிக்கும் வாய்ப்பை அவளே பெறட்டும் என்று எண்ணினர். பீமனின் கோபமும், வெறுப்பும் கட்டுக் கடங்காமல் பெருகி எழுந்தன. பழி வாங்கும் உணர்ச்சியால் உடலெல்லாம் நடுங்க, அசுவத்தாமனைத் தள்ளிச் சென்று அவள் முன்னே நிறுத்தினான், “ ஒ ! உபபாண்டவர்களின் அன்னையே ! உன் மக்களை குரூரமான முறையில் கொன்று குவித்த அசுவத்தாமன் இதோ நிற்கிறான். மிகச் சரியான வகையில், தக்கத் தண்டனையை அவனுக்கு நீயே தருவதற்காக அவன் உன் முன்னிலையில் நிறுத்தப்பட்டிருக்கிறான்.” என்று கோபத்தில் உரக்கக் கத்தினான்.

திரௌபதி தன மக்கள் கொலையுண்டதை அப்போது தான் அறிந்தாள். அவள் அடைந்த துயரத்திற்கும், துக்கத்திற்கும் எல்லையின்றி போயிற்று. அந்தச் செய்தியை ஏற்க இயலாது அவள் துடித்து போனாள். அவளது அழுகையும் ஓலமும் குழுமியிருந்த அனைவரையும் உருக்கி விட்டன. அவளை அமைதிப்படுத்த,அவளது வெந்துயரை மாற்ற, ஒருவரும் துணிவின்றி உழன்றனர்.

அசுவத்தாமன் அவள் முன்னிலையில் நிறுத்தப்பட்டதும், அவள் தன் துயரத்தை மிக்க முயன்று அடக்கிக் கொண்டு அவனை நொடி நேரம் மனம் நையப் பார்த்தாள். துயரத்தினால் அடைப்பட்ட குரலில் அவள் திக்கித் திணறிப் பேசியது கொலைக்காரனின் இதயத்தின் ஆழத்தையே கூட தாக்கி உலுக்கிவிட்டது. விம்மல்களுக்கிடையே, மிகவும் முயன்று, மெதுவாக தடைப்பட்டு, தடைப்பட்டு, அவள், அவனை நோக்கி,” என் குழந்தைகள் உனக்கு என்ன தீங்கு செய்தார்கள்? அவர்கள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தபோது ஈவு இரக்கமின்றி அவர்களை கொன்று விட்டாயே! பாண்டவரது குருவின் மகன் நீ, உபபாண்டவரது குருவாகும் நிலைமையில் இருந்தாய். இத்தகைய கொடூரமான, கீழ்த்தரமான செயலை, ஏதும் அறியாத பச்சிளம் பாலகர்களைக் கொலை செய்வதைச் செய்ய உன்னை எது தூண்டியது? அவர்கள் உனக்கு மனமறிந்து ஒரு தீங்கும் செய்யவில்லையே? இங்ஙனம் நீ செய்தது உனக்கே நியாயமாகத் தெரிகிறதா?” என்று அவனைக் கேட்டாள்.

அசுவத்தாமனோடு, அமைதியாக திரௌபதி பேசிக் கொண்டிருப்பதைக் கண்டதும், பீமனும், அர்ஜுனனும், பொறுமை இழந்து தவித்தனர். திரௌபதியின் அமைதியான பண்பு பீமனுக்கு வியப்பாக இருந்தது. ஒரு வேளை, தன் குழந்தைகளை யெல்லாம் ஒரு சேர இழந்த துயரம், அவளை பைத்தியமாக ஆக்கி விட்டதோ என்றும் ஐயுற்றான் அவன். இல்லையெனில், தன் குழந்தைகளை யெல்லாம் ஒருங்கே கொன்று குவித்த கொலையாளி, தன் எதிரில் நிற்கும் போது, ஒரு உண்மையான அன்னையால் இங்ஙனம் பொறுமையைக் கடைப்பிடித்து அமைதியாக இருக்கமுடியுமா என்று அவன் நினைத்தான்.

தங்களுடைய துயரத்தையும், பழிவாங்கும் துடிப்பையும் அதற்குமேல் கட்டுப்படுத்த இயலாதவர்களாக, அவர்கள், அவனை அங்கேயே அப்போதே கொன்றுவிடத் துடித்தனர். அனால் திரௌபதி அவர்களைத் தடுத்து நிறுத்தினாள். பீமன், அசுவத்தாமனை நெருங்க முயல்வதைத் தடை செய்தாள். நெஞ்சடைக்க, நடுங்கும் குரலில் உலகமே முழுமையாக வியக்கும் வண்ணம் எதிரியை உடலளவில் அல்லாது, மனத்தளவில் கொல்லக் கூடிய சொற்களைக் கூறினாள். அவளுள் இருந்த தாயுள்ளம் விழித்தெழுந்து, தன் பகைவனுக்கு எதிராக, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று தீர்மானித்தது. திரௌபதியின் உயர்ந்த அறிவே இறுதியில் வென்றது. தன் குழந்தையையிழந்து தவிக்கும், மற்றொரு அன்னையின் துயரத்தை கேட்கவவோ, அது போன்று நினைக்கவோ, அவள் இயலாதவளாக இருந்தாள்.

மிக முயன்று பீமனிடம் மெதுவாக பேசினாள். “பீமா! தயவு செய்து அவனைக் கொன்று விடாதே! அவனது அன்னை கிருபி, தன் கணவர் துரோணாச்சாரியாரது மறைவினால் இப்போது மிகவும் துன்புற்றிருக்கிறாள். அசுவத்தாமனைக் கொல்வதால் ஒரு குற்றமும் செய்யாத அவனுடைய தாயாரைத் தான் நீ மேலும் தண்டிக்கிறாய்., அவனையல்ல. இப்போது என் பேதை குழந்தைகளுக்காக என் இதயம் இரத்தக்களரியாகி இருப்பதுபோல நீ அவளுடைய நெஞ்சத்தையும் உன் செயலால் இரத்தம் வடிய வைக்காதே! ஒரு பேதை தாயுள்ளத்தை, மேலும் துன்புறுத்துவது அறிவாளித்தனமான செயலல்ல! அவனை வறண்ட பாலையாகி விட்ட அவனது உள்ளத்தோடு தவிக்க விட்டு விடு. தன் கீழ் செயல்களின் விளைவுகளைத் தானே அனுபவித்து, அவனே தன் பயங்கரமான பாவச் செயல்களுக்காக, வருந்தட்டும், “ என்று கூறினாள்.

மேலும், “உன்னுடைய ஆசிரியரது மகனான ஒருவனை, உன்னைக் கண்டு அஞ்சுபவனை, உன்னிடம் அடைக்கலம் புகுந்தவனை, தூங்கிக் கொண்டிருப்பவனை, குடி போதையில் தன்னையே மறந்து இருப்பவனை, கொல்வதற்கு உனக்கு உரிமை கிடையாது என்பதை உணர்ந்து கொள்.” என்று அறிவுறுத்தினாள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன