விருந்தினருக்கு நமது கடமை

Print Friendly, PDF & Email
விருந்தினருக்கு நமது கடமை

“அதிதி தேவோ பவ”, என்று நமது மறை நூல்கள் கூறுகின்றன. இந்துப் புராணங்களிலும் கர்ண பரம்பரைக்கதைகளிலும் எவ்வாறு விருந்தினரின் பசியைப் போக்கி அவர்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக வீட்டுக்காரர் மிகுந்த பஞ்சம் நிலவிய காலத்தில் தமக்கு உரிய உணவை அளித்துப் பட்டினியால் உயிரிழந்ததாகப் பல சம்பவங்கள் உள்ளன. மகாபாரதத்தில் இவ்வாறே, குருச்சேத்திரத்தில் ரந்திதேவன் என்ற அந்தணனும் அவனது குடும்பத்தினரும் இவ்வாறே உயிரிழக்க அவர் அளித்த உணவின் மீதியில் புரண்ட ஒரு கீரிப் பிள்ளையின் உடல்பொன்னிறமாக மாறியது. அதே கீரி தருமபுத்திரரது ராஜ சூயயாகத்தில் கண்ணுற்ற எச்சில் இலைகளில் புரண்டபோது உடலின்மீதியுள்ள பகுதியில் எந்த மாற்றமும் நிகழவில்லை.

இவ்வாறே வாமனர் மகாபலியை நாடிச் சென்று மூன்றடி நிலம் கேட்டு, அதனை அளித்து, ,வாமனர் அதனைநிறைவேற்றிக் கொள்ளும் தருணத்தில் மகாபலி தன் வாக்கினைக் காப்பாற்றித் தன்னையே அளிக்கச் சித்தமாக இருந்தான்.

கர்ணனும் தனது கொடை வள்ளல் தன்மையினால் தான் அழியாப் புகழ் பெற்றான். தன் உயிரைக் காக்கவல்ல கவசக் குண்டலங்களையே தானமாகக் கேட்ட போது சிறிதும் மனம் கலங்காமல் வழங்கினான்.

விக்டர்ஹ்யூகோ எழுதிய புகழ்பெற்ற Les Miserables என்ற நவீனத்தில், சிறையினின்றும் விடுதலை பெற்ற ஜீன்வால்ஜீன் என்ற கைதி வீடு வீடாக அலைந்து கைதியாக இருந்தவன் என்றகாரணத்தால் யாரும் ஏற்றுக்கொள்ளாது, பட்டினியால் வருந்தினான். கடைசியில், தன்னை ஏற்றுக்கொண்டு இடமளிப்பார் என்ற நம்பிக்கை சிறிதும் இல்லாமலேயே பிஷப்பின் வீட்டுக் கதவைத் தட்டினான். ஆனால் பிஷப் கதவைத் திறந்து அவனைக் கண்டதும் முகமலர்ந்து, “உள்ளே வா, சகோதரா, இது உன்னுடைய வீடு தான்” என்று கூறிய போது மிகவும் ஆச்சரியமடைந்தான். எல்லோரும் வெறுத்த அந்தக் கைதியினை வெள்ளித் தட்டுகளில் உணவு வகைகள் கொண்டுவந்து விருந்தளிதார். ஆசை முன்னுந்த, பழக்கதோஷம் காரணமாக, ஜீன்வால்ஜீன் வெள்ளித் தட்டுகளைத் திருடிக்கொண்டு வெளியே ஓடினான். மறுநாள் போலீஸார் கையும் களவுமாக அவனைப் பிடித்து, தட்டுகளுடன் கூட அவனையும் பிஷப்பின் முன் நிறுத்தியபோது, பிஷப் “நான்தான் இந்தத் தட்டுகளை அவனுக்கு அன்பளிப்பாக வழங்கினேன். கூட மெழுகுவர்த்தி பொருத்தும் வெள்ளிக் குமிழ்களையும் அளித்திருந்தேன் அவன் மறந்து விட்டான்” என்று கூறி அவற்றையும் அவனுக்கு அளித்தார்.

ஈஸாவாஸ்ய உபநிடதத்தில் கற்பிக்கப்பட்ட உபதேசந்தான் பிஷப்பின் சொற்களில் எதிரொலிக்கின்றது. பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொன்றும் இறைவனுக்கே சொந்தமானதாகும். யாருக்கும் எதற்கும் தனியான உரிமையில்லை. அனைத்தும் எல்லோருக்கும் சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டியவையாகும். அவையெல்லாம் இறைவனின் அன்பளிப்பாகும்.

குடும்ப வாழ்க்கையிலும், நாம் எல்லோரும் இத்தகைய மனோபாவங்களுடன் பெற்றோருடனும், மற்ற உறவினருடனும்,வேலையாட்களுடனும், விருந்தினருடனும் நடந்து பழகி வந்தால், வீடு மகிழ்ச்சி நிரம்பியதாகும். பிரபஞ்சப் பொது நோக்கினை வளர்ப்பதற்கு உதவி செய்கின்ற முதற் பயிற்சிக் கூடம் இல்லமேயாகும். முகமலர்ச்சியும் நேசமும் கொண்ட சமத்துவப் பாங்கினை வீட்டினில் வளர்த்துக்கொள்ள வேண்டும். வெளியிலும் அந்தப் பாங்கினைக் கொணர்ந்து அத்துடனேயே மற்றவருடன் பழகவேண்டும். எல்லா நடவடிக்கைகளிலும் இத்தகைய பாங்கினைக் கொணர்தல் வேண்டும். எத்தகைய வேறுபாடு இருப்பினும்,பரிவினையும் அன்பினையும் எல்லோரிடமும் வெளிக் காட்ட வேண்டும்.

ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தனிப்பட்ட மன நிலையுண்டு, ஒவ்வொருவருக்கும் சரியோ, தவறோ தனிப்பட்ட கருத்துக்கள்உண்டு. மற்றவரின் எல்லாக் கருத்துகளையும் நம்மால் முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலாது. ஆயினும் மனோ வேகமில்லாமல்,விருப்பு வெறுப்பில்லாது, மற்றவர்கண்ணோட்டங்களை ஆராய்ந்து, அவற்றைப் புரிந்து கொண்டு,அவர்களது கருத்து சரியெனவும், நம்முடைய கருத்து தவறெனவும் தோன்றும்போது, அவரது கருத்தினை ஏற்றுக்கொள்ள மனச் சம்மதம் கொள்ள வேண்டும். இதில் வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை. தவறுவது மனித இயல்பாகும். வாழ்க்கை முழுவதுமே கற்றுக்கொள்வதும், திருத்திக் கொள்வதுமான முயற்சியின் தொடர்ச்சியாகும். “தவற்றினுக்கஞ்சாது செயல் புரியமனிதனுக்கு அனுமதியுண்டு; அதனை மன்னிப்பது கடவுளின் கடமையாகும்” என்று கூறப்படுகிறது. எந்த மனிதனும் முழுநிறைவானவன் அல்லன், இறைவன் மட்டுமே முழு நிறைவானவர்.

இதனை புரிந்துக் கொண்டு, நமக்குப் பிடித்த கருத்துப் போக்கினில் பிடிவாதமும் கொள்கைப் பிடிப்பும் கொள்வதை விடுத்தல் வேண்டும். ஆகவே குடும்பத்தினரிடமும், மற்றவரிடமும் நமக்கு எத்தகைய மனவேறுபாடு இருந்தாலும், அது அவர்களிடம் நமக்குள்ள அடிப்படையான நேசப் பிணைப்பினைத் தகர்க்கலாகாது. இதற்கு ஸ்ரீ சத்ய சாயிபாபா, சிவபிரானின் குடும்பத்தை முன்னுதாரணமாகக் கூறுவார். சிவபிரானும் பார்வதியன்னையும் தம் திருமக்களான கணேசருடனும், சுப்ரமணியனுடனும், ஜன்மப் பகை கொண்டுள்ள விலங்குகளும், பறவைகளும் புடைசூழ அமர்ந்திருக்கின்றனர். சிங்கம் ஒருபுறம், நந்தி மற்றோருபுறம்; மயில் ஒருபுறம், பாம்பு மற்றொரு புறம்; பாம்பு ஒருபுறம், எலி இன்னொரு புறம். ஒவ்வொரு விலங்கும், பறவையும் ஒவ்வொரு தெய்வத்தின் வாகனம் என்பதால் சண்டையிடாமல் ஒன்று கூடி வாழ்கின்றன. இந்தக் கடவுட் குடும்பம் மிகுந்த நேசத்துடனும், இசைவுடனும் வாழ்வதற்கான முன்னுதாரணமாகும்.

வஞ்சினத்தையும், வெகுளியினையும் தடுப்பதையும், நாம் எதிரிகள்என்று நினைக்கும் மக்களிடம்கூட பயனுள்ள நேசத்தைவளர்ப்பதையும் நாம் கற்றுப் பயில வேண்டும்; எப்போதும் இவற்றைப் பயில வேண்டும்.

ஸ்ரீசத்யசாயிபாபா கூறுவார். தனியாகக் காட்டில் வாழும் போது, உன்னைத் தவிர வேறு யாரும் இல்லாத போது,கோபத்தை வெளிக்காட்டும் சூழ்நிலை ஒன்றும் இருப்பதில்லை. அப்போது கோபத்தை அடக்கியதாகக் கூறினால் அது பொருளற்ற சொல்லாகும். பல மக்களுக்கிடையில் உலகச் சூழ்நிலையில் வாழும் போது, சண்டைகள் உதயமாகவும் உனது நிதானத்தை இழப்பதற்கும் பல காரணங்கள் உண்டு. அப்போது உன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, கோபம் கொள்ளாமல் இருந்தால், நீ உயர்ந்தவனாகமாறுகிறாய். இவ்வாறு குடும்பத்தில் வாழும் போதும், சமூகத்தில் வாழும் போதும் நமது சில்லறை உணர்ச்சிகளையும், வெறுப்புகளையும், பொறாமை போன்றவற்றையும் கரையச்செய்து அவற்றிற்கு மாறான நற்பண்புகளைப் பயில வேண்டும்.நமக்குக் கோபம் வரும் போதெல்லாம் ஒரு கோப்பபைக் குளிர்ந்த நீரருந்தி கூடவே இறைவனின் திருநாமத்தையும் உச்சரிக்க வேண்டும் என்று பாபா கூறுவார். கடவுளைநினைத்தாலே நமது கோபம் குளிர்ந்து, நமக்குச் சமநிலை திரும்ப வரும். நாம் எல்லோரும் ஒரே இறைவனின் புதல்வர். ஆதலின் ஆன்மீகச் சோதரரும் ஆவோம் என்பதையும், நமது ஆளுமைத் தன்மையின் சூட்சும நிலையில் நாம் எல்லோரும் ஒருவரே என்பதனையும், தனியாக ‘நான்’, ‘நீ’ ‘அவன்’ என்பது இல்லை. உண்மையில் உன்னிலும் வேறானவர் யாருமே இல்லை, என்பதனையும் அறிந்துக் கொண்டு அதன் பின்னணியில் எல்லோரிடமும் நேசத்தினையும் பரிவையும் வளர்த்து இதயத்தைப் பண்படுத்தல் வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன