காற்று-2

Print Friendly, PDF & Email
காற்று-2

அன்பான குழந்தைகளே, நாம் ஒரு விளையாட்டுடன் தொடங்குவோம். உங்கள் மூக்கையும் வாயினையும் கைகளால் மூடி கொள்ளுங்கள். யார் அதிக நேரம் இவ்வாறு உட்கார்ந்திருப்பீர்கள்? (குழந்தைகளின் உணர்ச்சிகளை குரு கூர்ந்து நோக்க வேண்டும்) இப்போது, நீங்கள் கூறுங்கள். பஞ்சபூதங்களில் எந்த ஒன்று இல்லாமல் நம்மால் ஒரு கணங்கூட உயிர் வாழ இயலாது?

  • தாகத்துடன் இருக்கும்போது தண்ணீர் கிடைக்காவிடினும் சில நாட்கள் உயிருடன் இருக்கலாம். பசிக்கும் போது உணவில்லாவிடில் இன்னும் சிலநாட்கள் உயிரோடு இருக்கலாம். ஆனால்காற்று இல்லாமல் சில நொடி கூட நாம் உயிருடன் இருக்கவே இயலாது. இந்தக் காற்றைப் படைத்தது யார்?விஞ்ஞானியா? டாக்டரா? இஞ்சினீயரா?.
    இல்லையே! கடவுள் தான் படைத்தார்.
    நமக்காக, நம்மிடம் உள்ள அன்பின் காரணமாகப் படைத்தார்.
  • காற்றை பயன்படுத்த நாம் வரி கட்டுகிறோமா?
    மின்சக்திக்குக் கட்டணம் செலுத்துகிறோம். நகரங்களில் தண்ணீருக்குக் கட்டணம் செலுத்துகிறோம் ஆனால்காற்றுக்காக நாம் கட்டணம்/வரி ஏதும் செலுத்துவதில்லை. இறைவனால் கொடுக்கப்பட்ட பரிசுகளில் அது முழுவதும் இலவசமானது. இறைவனின் தெய்வீக அருளுக்காக நாம் அவரிடம் நன்றி செலுத்துவோம்.
பிரார்த்தனை

வாயுதேவனுக்குப் பிரார்த்தனை செலுத்துவோம்:
வாயுதேவனுக்குப் பிரார்த்தனை செலுத்துவோம்.
“நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரம்மாஸி,
த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரம்ம வதிஷ்யாமி
ருதம் வதிஷ்யாமி, சத்யம் வதிஷ்யாமி” (வேதப்பாடல்)
பொருள்:காற்றின் தேவதையே, ஒப்பற்ற பேருண்மையே (சத்யம்)
இறைவா, தங்களுக்கு வணக்கம் செலுத்துகிறோம்.
மிகுந்த வலிமையும் சீரானமூச்சும் தந்து எங்களுக்கு அருளாசி வழங்குவீராக.

கதை:

ஹனுமானுக்கு எவ்வாறு இவ்வளவு வலிமை வந்தது என்று தெரியுமா? அதற்கு முன் ஹனுமானின் தந்தை யார் என்று கூறுங்கள்? ஆம்! வாயுதேவன் தான் அவரது தந்தை. ஹனுமான் பிறந்ததுமே பசிமிகுதியால் உதயசூரியனைப் பழுத்த பழம் என்று நினைத்துத் தாவி அதனை விழுங்க முயன்றான். சூரியனை அவன் விழுங்க உலகம் முழுவதும் இருளில் மூழ்கியது. தேவர்கள் அனைவரும் ஹனுமானிடம் சூரியனை வெளியே விடும்படி வேண்டினர். ஆனால் ஹனுமான் அதை ஏற்றுக் கொள்ளவில்லை, இந்திரனுக்குக் கோபம் வந்து வஜ்ராயுதத்தால் குழந்தை ஹனுமானை அடிக்க அவனது தாடை உடைந்தது வாயுதேவனுக்குச் சினம் மிகுந்து ப்ரபஞ்சம் முழுவதிலும் தனது காற்றை இழுத்துக்கொண்டான். அப்போது என்ன ஆயிற்று தெரியுமா? அனைத்து ஜீவராசிகளும் எரியத் தொடங்கின. எல்லா இடங்களிலும் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியது. ப்ரம்மா, விஷ்ணு, மகேசுவரன் மற்ற தேவர்கள் எல்லோரும் வாயு தேவனிடம் சென்று படைப்பினைக் காப்பாற்றும்படி வேண்டிக் கொண்டனர். வாயுதேவன் அவர்களிடம் ஒவ்வொருவரும் தனது மகனுக்கு உரிய ஆற்றல்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அவ்வாறே அனைவரும் அவரவர்க்கு உரிய ஆற்றலை அனுமனுக்கு வழங்கினர். தெய்வீக சக்திகள் நிரம்பப் பெற்று அந்த குழந்தை வலிமை, புத்தி, உள்ளுணர்வு இவற்றில் சிறந்து விளங்கியது. எனவே அதுமுதல் அந்தக் குழந்தை ஹனுமான் என்று அழைக்கப்பட்டது.

கேள்விகள்:
  • வாயுதேவன் அசைவதை நிறுத்தியதும் என்ன நடந்தது?
  • காற்று இல்லாவிட்டால் என்ன நடக்கும் என்று உன்னால் கூற முடியுமா?
  • மீன்களோ நீர் வாழ் பிராணிகளோ உயிருடன் இருக்க முடியுமா?
  • மரங்கள் காற்றில்லாது வாழ முடியுமா?
வட்டவிளையாட்டு:

நிலம், நீர், நெருப்பு, காடு, பறவைகள், வெற்றிடம் என்ற பெயருள்ள ஆறு வட்டங்கள் வரைந்து கொள்ள வேண்டும்.
மெல்லிய இசை/பஜனைப் பாடலை இசைக்கச் செய்யவும்.
ஆறு குழந்தைகள் இசைக்குத் தக்கவாறு சுற்றி ஓடிக் கொண்டேயிருக்கும். இசை நின்றதும் குழந்தைகள் ஏதாவது ஒரு வட்டத்தில் நிற்க வேண்டும்.
அவர்கள் எந்த வட்டத்தில் நிற்கிறார்களோ, அதற்குத் தகுந்தவாறு கீழ்க்கண்ட செயல்களை அவர்கள் செய்ய வேண்டும்.

நிலம்- ஒரு நடனம் செய்யும் மனிதன்

நீர்- நீந்தும் மீன்

நெருப்பு – எரியும் நெருப்பு

காடு – (இலைகள்,கிளைகள்) ஆடும் மரம்

பறவைகள்- ஒரு பறக்கும் பறவை

வெற்றிடம் -சவம் சூன்யம் என்ற வட்டத்தில் உள்ள குழந்தை விளையாட்டிலிருந்து விலக வேண்டும்.

‘இசை நாற்காலி’ விளையாட்டு போல விளையாட வேண்டும். காற்றின் இயல்புகளை விளக்கும் வகையில் கீழ்க்கண்ட கேள்விகளை கேட்கவும்:

  • காற்றைக் காண இயலுமா?
    இல்லை. அது உருவமற்றது.
  • காற்றைச் சுவைக்க முடியுமா?
    இல்லை. அது சுவையற்றது.
  • காற்றை நுகர முடியுமா?
    இல்லை, அது, தான் செல்லும் வழியில் உள்ள பொருளின் அல்லது புகையின் மணத்தைச் சுமந்துவரும்.
  • காற்றின் சப்தம் உனக்குக் கேட்கிறதா?
    ஆம். அது காற்றின் வேகத்தைப் பொருத்தது.
  • காற்றைத் தொடமுடியுமா?
    அதன் மிருதுவான ஸ்பரிசத்தை நாம் உணர்கிறோம்.
  • உனது அனுபவம் எப்படிப்பட்டது?
    நாம் புத்துணர்வுடன் சக்திமிகுந்து மகிழ்ச்சியுடன் இருக்கிறோம்.
    காற்று “ஒலி, ஸ்பர்ஸம்” ஆகிய குணங்களைக் கொண்டது.
கதை

டாலி என்ற ஒரு சிறிய பறவை இருந்தது. தனது வலுவான சிறகுகளின் உதவியால் புதிய இடங்களைக் காணவும் இயற்கை அழகைக் காணவும் உலக முழுதும் சுற்றிச்செல்ல டாலி ஒரு திட்டம் வகுத்தது. அது அதிகாலையில் கிளம்பியது. புதிய காற்று வீசிக் கொண்டிருந்தது. பழங்கள், மலர்கள், மரங்கள் இயற்கையின் அழகு இவற்றை மகிழ்ச்சியுடனும் உல்லாசமாகவும் ரசித்துக் கொண்டு பாடிக் கொண்டே பறந்து சென்றது. வழியில் மரங்களிலிருந்து பழங்களைக் கொத்தித் தின்றது நதிகளிலிருந்து தூயநீரைப் பருகியது. கிளைகளில் சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டது. மறுபடி தன் பயணத்தைத் தொடர்ந்தது. பல மைல்கள் தூரம் அது கடந்து சென்றது. ஒரு சமயம் அதற்கு மூச்சுத் திணறியது. பலவீன உணர்ச்சியுடன் அது கீழேவரத் தொடங்கியது. அதன் கண்கள் எரியத் தொடங்கின. அழுக்குத் தண்ணீர் நிறைந்த ஓடையைக் கண்டது. வலி அதிகமாகவே வேறுவழியில்லாமல் அந்த அழுக்குத் தண்ணீரில் கண்களைக் கழுவியது. ஓய்வெடுத்துக் கொள்ள ஒரு மரத்தைத் தேடியது. வெகுநேரம் தேடி சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டபின் ஏன் இவ்வாறு நடந்தது என்று அதிசயமடைந்தது. நான் எங்கிருக்கிறேன்? எங்கு பார்த்தாலும் கட்டிடங்கள்! மரங்களே இல்லையே! ஒரு பெரிய தொழிற்சாலை கனத்த புகையை வெளியிட்டு கொண்டிருப்பதைக் கண்டது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையில் புகையை வெளியிட்டுக் கொண்டு நகர்ந்து செல்வதைக் கண்டு பீதியடைந்தது. கடவுள் கொடுத்த காற்றின் தூய தன்மையைக் கெடுக்கின்ற மனிதர்களின் அசுர குணத்தைக் கண்டு டாலி மிகவும் வெட்கப்பட்டது. உலகத்தைச் சுற்றிச் செல்லும் தன் திட்டத்தை கைவிட்டது. தனது கிராமத்துக்குச் சோகத்துடன் திரும்பியது. தனது நண்பர்களையெல்லாம் அழைத்தது. அவை தோப்புகளின் முக்கியத்துவம், எரிவாயுவை வெளியில் விடாது கட்டுப்படுத்துவது எப்படி, உடலுக்கும் எவ்வளவு முக்கியம் என்பவை பற்றியெல்லாம் பேசின. பல மரங்களிலிருந்து பல விதைகளைச் சேகரித்தன.
நகரத்துக்கு அனைத்தும் பறந்து சென்றன. நகரம் முழுவதும் அந்த விதைகளை பரவலாகக் கீழே போட்டன. தமது கடமையைச் செய்ததற்கு அவை மகிழ்ச்சி அடைந்தன. ஒரு வருடம் கழித்து டாலி மறுபடியும் நகரத்தைக் காணவந்தது. சுற்றிலும் பல மரங்களின் கிளைகளும் இலைகளும் குளிர்ந்த காற்றில் ஆடிக் கொண்டிருப்பதைக் கண்டது. கண்களில் எரிச்சல் ஏதுமில்லை. மூச்சு அடைக்கவில்லை. மகிழ்ச்சியுடன் ஆடிக் கொண்டே பாடியது.

‘காற்றே காற்றே புதிய காற்றே
காற்றே காற்றே நலந்தரும் காற்றே
காற்றே காற்றே தூயகாற்றே
கடவுள் சக்தியை உணர்த்தும் காற்றே’

வினாடிவினா

குழந்தைகள் காற்றின் இயல்பைப் புரிந்து கொண்டார்களா என்றறிய சில கேள்விகள் கேட்கலாம்.

  1. காற்று மாசுபடுவதால் என்ன ஏற்படுகிறது?(வெப்பம் அதிகமாகிறது)
  2. காற்று மாசுபடுவதன் காரணம் என்ன?(தொழிற்சாலை, வாகனங்கள் இவற்றிலிருந்து வெளியேறும் புகை, காடுகளை அழித்தல்.)
  3. காற்று மாசுபடுவதைத் தடுப்பது எவ்வாறு?(செடிகள் நடுதல். எரிவாயுக்கள் வெளிக்காற்றில் கலப்பதைக் கட்டுப்படுத்துதல்.)
  4. புதிய தூயகாற்றின் முக்கியத்துவம் என்ன?(வலிமை தருகிறது. புத்துணர்வு தருகிறது.)
தியானம்– மனக்கண் முன் கொண்டு வரும் சுற்றுலா:

இப்போது ஒரு சுற்றுலாவுக்குத் தயாராக இருங்கள். எங்கு செல்லலாம்?
பசுமையான புல்நிறைந்த பூங்காவிற்குச் செல்லலாம். சுற்றிலும் அழகிய மலர்கள் நறுமணத்தைப் பரப்பிக் கொண்டு இருக்கின்றன. புதிய காற்று குளிர்ந்த காற்று உடலைத் தொடுகிறது. நமக்குப் புத்துணர்ச்சி தருகிறது. செல்லலாம். வாருங்கள்.

கண்ணை மூடிக்கொள்ளுங்கள், நேரேஉட்காருங்கள்.
இது அதிகாலை என்று உணருங்கள்.
மூன்று முறை ஓம்காரம் சொல்லுவோம்: (சிறிதுநேரம் மௌனம்—குரு மிருதுவாக மெதுவாகப் பேச வேண்டும்.)

அன்பான குழந்தைகளே, மெதுவாக எழுந்திருங்கள். வரிசையாக நில்லுங்கள். சத்தமில்லாமல் ஒரு வரிசையை உருவாக்குங்கள். சூரியனைப் பாருங்கள். உதயசூரியன் எவ்வளவு அழகாக இருக்கிறது. எவ்வளவு குளிர்ச்சியான காற்று. இது உடல் முழுவதையும் தொடுகிறது. ஆ! எவ்வளவு அமைதி. ஒரு பஸ் வருகிறது. கொஞ்சம் காத்திருங்கள். ஓ! ஒரே புகை!! மூக்கை மூடிக் கொள்ளுங்கள். இந்தப் புகை நமது ஆரோக்கியத்துக்கு மிகவும் கெடுதல். சரி, இப்போது சாலையைக் கடக்கலாம். சாலையின் எதிர் புறத்தில் உள்ள அழகிய பூங்காவிற்குச் செல்லுவோம்.வரிசையாகப் பூங்காவினுள் செல்லுங்கள். எவ்வளவு இதமான காற்று! பூங்காவினுள் ஓடி விளையாடுங்கள் .(சிறிது நேரம்ஓய்வு). இப்போது உடலின் வெப்பத்தை உணர்கிறீர்கள். வேர்க்கிறது. இந்த மரத்தின் கீழ் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். இப்போது உங்களுக்கு எவ்வாறு இருக்கிறது? குளிர்ந்த காற்றை நீங்கள் மறுபடியும் அனுபவித்து மகிழ்கிறீர்கள். அது உங்கள் வியர்வையினை உறிஞ்சி விடுகிறது. மரங்களைப் பாருங்கள்! அவை எவ்வாறு காற்றின் அசைவுடன் இணைந்து மகிழ்ச்சியுடன் ஆடுகின்றன என்று பாருங்கள். ஆ! எத்தனை நறுமணம்! மலர்களின் நறுமணத்தைக் காற்று நமக்குக் கொண்டு வருகிறது. திரும்பிச் செல்லும் நேரம் வந்து விட்டது. செடிகள் மலர்கள் சூரியன் இவற்றிற்கு நன்றி கூறுங்கள். காற்றினுக்கு விசேடமாக நன்றி கூறுங்கள்! மெதுவாக நடந்து சாலையை கடப்போம். இப்போது நாம் வகுப்பறையின் வாயிற்படியில் நிற்கிறோம். உங்கள் காலணிகளைக் கழற்றுங்கள். மெதுவாக உள்ளே வாருங்கள். உஙகள் இடத்தில் உட்காருங்கள். மனம் உடலுக்கு ஓய்வு தாருங்கள். (சிறிது நேரம் மௌனம்)

இப்போது நாம் ஓம்சாந்தி: சாந்தி: சாந்தி: என்று கூறுவோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன