படைப்பில் உள்ள நிரந்தர மேம்பாடுகள்
படைப்பில் உள்ள நிரந்தர மேம்பாடுகள்
படைப்பில் உள்ள நிரந்தர மேம்பாடுகள் (eternal values) ஒவ்வொரு ஜீவராசியும் வாழ்க்கையை வெளிப்படுத்தி பல்வகைப் பெருக்கத்தின் மூலம் இயற்கையை அனுபவிக்க விரும்புகிறது. நாகரிகங்களும் கலாசாரங்களும் ஆக்க முயற்சிகள் மூலம் முன்னேற்றமடைந்து, வளம் பெற்றுள்ளன. ஒவ்வொரு ஜீவனும் தனக்குள் மறைந்திருக்கும் திறமையை நன்கு வெளிப்படுத்தும் முயற்சியிலேயே செயல்படுகிறது. மண்ணுக்குள் புதைந்திருக்கும் வித்து, சூரிய வெளிச்சத்தை நாடி மேற்புறம் தள்ளி முன்னேறுகிறது. ஒரு கோழிக் குஞ்சு வெளி உலகை அனுபவிக்க முட்டை ஓட்டினை உடைத்து வெளி வருகிறது. தவழும் குழந்தை, எத்தனை முறைகள் விழுந்தாலும் தளராது நிற்க முயற்சி செய்து, முழுமை பெற வேண்டும் என்ற தன் ஆர்வத்தை வெளிப்படுத்திக் கொள்கிறது. ஐம்புலன்களின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கிச் செயல்படும் போது, படைப்பில் உள்ள பல்வகை அளவற்ற மகிழ்ச்சி, ஆனந்தம் இவற்றைத்தருகிறது. ஐம்புலன்களின் கட்டுப்பாடுகளும், சத்யம், தர்மம், சாந்தி, பிரேமை, அஹிம்சை ஆகிய இந்த நிரந்தர மேம்பாடுகளால் உருவாக்கப்படுகின்றன.
படைப்பினை நாம் அனுபவித்து மகிழ வேண்டுமென்பதற்காகவே பஞ்ச பூதங்களுக்கும் ஐந்து குணங்களும் (இயல்புகள்) தரப்பட்டுள்ளன. ஏழு நிறங்கள் இல்லாவிடில், வெண்மையான ஒளியில் நாம் மகிழ்ச்சி பெற இயலாது. நறுமணங்கள், சுவைகள் இவற்றில் வேறுபாடுகள் இல்லாவிடில், படைக்கப்பட்ட பொருள்களில் நாம் ஆனந்தத்தை பெற இயலாது. இவை யெல்லாம் இறைவனது அன்பின் வெளிப்பாடான பரிசு. நமது புலன்களை மிதமாகப் பயன் படுத்தும் போது, நறுமணங்களில் பல்வகைகளை நுகரலாம்; பல்வேறு ஒலிகளைக் கேட்க லாம்; பலவகையான உணவுப் பண்டங்களை ருசி பார்க்கலாம். இயற்கை வண்ணங்களின் மகிமையில் நாம் ஆனந்தம் கொள்ளலாம்.
இயற்கை நாம் பின்பற்றுவதற்குக் கணக்கற்ற இலட்சியங்களும் கதாபாத்திரங்களும் கொடுத்துள்ளது. உதாரணமாக, ஒரு மரம் – தண்ணீர், சூரிய வெளிச்சம், காற்று இவற்றி லிருந்து போஷாக்குப் பெறுகிறது. அதே சமயம், அதுவும் கோடிக்கணக்கான நுண்ணுயிர் களுக்கு – பறவைகள், விலங்குகள், அனைத்துக்கும் இலையுணவு, பழங்கள், பிராணவாயு, மரப்பட்டை, கட்டை எனப் போஷாக்குத் தருகிறது.
சூரியன் உயிர் வாழ அவசியமான தனது கிரணங்களை வெளிப்படுத்த மறுத்தால், அது அழிவில் கொண்டு செலுத்தும். தேன் கூட்டுடன் தனது தேனைப் பகிர்ந்து கொள்ளாத தேனீயை மூடத் தேனீ என்று கூற வேண்டும். எரிந்து கதகதப்பைக் கொடுக்க மறுக்கும் நெருப்பு, துன்ப மிகுந்த நெருப்பு என்று தான் கூற வேண்டும். நமது கடமையைச் செய்ய மறுக்கும் போதெல்லாம் அது ஊனமாக மாறி நாம் பிறகு துன்பப்படுகிறோம். நமது கடமையை நன்றியுணர்வுடனும் அன்புடனும் செய்யாது விலகினால், நாம் தான் நஷ்டமடைகிறோம். தியாகம், கருணை, அன்பு இவற்றைச் செயற்படுத்துவதன் மூலம் நம்மைச் சுற்றி ஒருமையை (harmony) நிலை நிறுத்துகிறோம்.
படைப்பிலிருந்து மகிழ்ச்சி பெறுவதற்கு இறைவன் நமக்கு கணக்கற்ற வழிகள் தந்திருக்கிறார். ஆனால் அவற்றை நாம் பகிர்ந்து அனுபவித்து மகிழ வேண்டும். உனக்கென்று ஒரு பங்கு உண்டு. அதைப் பெற உனக்கு எப்போதும் உரிமை உண்டு.
– ஸ்ரீ சத்ய சாயி (22-5-2000)
உயிரற்ற படைப்புகளை நோக்கினால், தண்ணீர் சுழற்சி (Water Cycle) நமக்குச்சிறந்த உதாரணமாக அமைகிறது. ஒவ்வொரு கோடைப்பருவத்திலும் கடல் தண்ணீர் கோடிக்கணக்கான டன்கள் ஆவியாக மாறுகிறது. காற்று அதன் மேகங்களைப் பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தள்ளிச் செல்கிறது. வறண்ட நிலையின் மேல் மழையும் பனிக்கட்டியும் பொழிகின்றன. அத்தண்ணீர், ஓடைகள் வழியாகவும், ஆறுகள் வழியாகவும் கடலில் சங்கமமாகிறது. இத்தகைய ஆறுகளின் கரைகளில் பல நாகரிகங்கள் செழித்து வளர்ந்துள்ளன. இவ்வாறு தாவர உலகில் ஒரு பரஸ்பர சார்பு இருக்கிறது. இயற்கையின் செயற்பாட்டில் சார்பும் ஒருமைத்தன்மையும் காணப்படுகினறன. இக்கால விஞ்ஞானம் கூட தனிப்பட்ட அறிவுணர்வுக்கும், பிரபஞ்ச அறிவுணர்வுக்கும் உள்ள தொடர்பு பற்றி ஓரளவு கூறுகிறது.
”நான்என்னையே நேசிக்க வேண்டும் என்பதற்காக, என்னை என்னிடமிருந்து பிரித்துக் கொண்டேன்” என்று பாபா கூறுகிறார். படைப்பின் இந்தப் பேருண்மையின் அன்பு தான் அடிப்படை ஆற்றல். அதுவே பஞ்சபூதங்களையும் ஒன்றிணைக்கிறது. அதுவே அணுக்கள் அனைத்தையும் சேர்த்து வைத்துப் பின் அதுவே கிரகங்களை அதனதன் விண்வெளி வழியில் சுற்ற வைக்கிறது. அதுவே ஒவ்வொருவருக்கும் இந்னொருவருக்கும் இடையில் உள்ள கவர்ச்சியாகவும் இருக்கிறது.
இந்தக் கருத்தின்படி படைப்பு முழுவதும் அன்பின் தெய்வீக ஆற்றலில் தோய்ந்து இருக்கிறது. அதுவே படைப்பில் உள்ள எல்லாப் பொருட்களையும் இயல்புகளையும் இணைத்து ஒன்றாக்குகிறது. அவை முழுமையான நெறிமுறையினை– தர்மத்தைப் பின்பற்றுகின்றன. ஆகவே தான் இயற்கையில் எப்போதும் அமைதி நிலவுகிறது. இயல்பான கட்டுப்பாட்டினால் ஏற்படும் அமைதியைப் படைப்பில் உணரும் போது அங்கு அகிம்சை நிலவுகிறது.
இயற்கைக்கு எந்த விதத்திலும் தொந்தரவு கொடுக்காமல் இருந்தால்,அது ஒழுங்கமைப்பு, இசைவு, அமைதி இவற்றிற்குச் சிறந்த உதாரணமாகச் செயல்படும். நாம் தாவரப்பாதுகாப்பு, விலங்குப் பாதுகாப்பு இவற்றிற்கு பெரும் நிலப்பரப்பை ஒதுக்கி வைத்தால், அங்கு இயற்கை ஒப்பற்ற எழிலுடனும், இயல்பான வளத்துடனும் இருப்பதைக் காணலாம். இயற்கைச் செல்வங்களுக்கு ஒரு உள் அமைதி, இசைவு, அழகு இருப்பதைக் காணலாம். மலைகளும், நதிகளும், விலங்குகளும், தாவரங்களும் ஒன்றையொன்று பாதுகாத்துப் போஷிக்கின்றன. மாமிச பட்சணிகள் கூட, பசி வேளை தவிர மற்ற நேரங்களில் மற்றவைகளைக் கொல்வதில்லை. இவ்வாறு உயிர்கள் நிறைந்த, உயிரற்ற உலகம் அதற்குரிய தர்மத்தின் வழியில் தான் செயல்படுகிறது.
இன்னும் விளக்கமாகக் கூறினால், இயற்கையில் உள்ள பஞ்சபூதங்களும் தொந்தரவு செய்யப்படாத போது படைப்பின் மூலம் தாம் பெற்ற இயல்புகளை முழுமையாக வெளிப்படுத்தி, முழு இசைவுடனும் சம நிலையுடனும் இருக்கின்றன. இயற்கை தனது இயல்பினில் ஐந்து மேம்பாடுகளைக் கடைப்பிடித்து பல வகைகளிலுள்ள ஒருமைத் தன்மையை வெளிப்படுத்தித் தன் இயல்பான மகிமையுடன் இருக்கிறது.
- அன்பே படைப்பின் அடித்தளம்.
- படைப்பு முழுவதிலுமே மேம்பாடுகள் மறைந்திருக்கின்றன.
- இயற்கையின் வளங்களை அனுபவித்து மகிழவே நமக்குப் புலன்களும், அவற்றிற்குரிய இயல்புகளும் தரப்பட்டிருக்கின்றன.
- மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெற வேண்டுமென்றால், புலன்களை மிதமாகப் பயன் படுத்த வேண்டும்.
- இயற்கையில் உள்ள பஞ்ச பூதங்களின் சமநிலை உலக முழுவதிலும் அமைதியைத் தருகிறது.