ஹோலி

Print Friendly, PDF & Email
ஹோலி

ஹோலி வட இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான திருவிழா ஆகும். பங்குனி மாதம் பௌர்ணமி அன்று, ஹோலி கொண்டாடப்படுகிறது. வண்ணமிக்க வசந்தகாலம் துவங்குவதைக் கொண்டாடும் விழா ஹோலி. வ்ரஜ பூமி என்று சொல்லப்படும் ப்ருந்தாவனம், மதுரா, நந்தி கிராமம், பர்சானா ஆகிய இடங்களில் ஹோலி மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஹிரண்யகசிபு என்ற அரக்க அரசன் பிரம்மாவைக் குறித்து கடுந்தவம் செய்தான். பிரம்மா அவன் முன் தோன்றியபோது இரவிலோ, பகலிலோ, வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ, பூமியிலோ, ஆகாயத்திலோ, மனிதனாலோ, மிருகங்களாலோ, ஆயுதங்களாலோ தனக்கு சாவு ஏற்படக்கூடாது என்று வேண்டி வரம் பெற்றான். தன்னை யாராலும் கொல்ல முடியாது என்ற மமதையில் தேவர்களையும், ரிஷிகளையும், சாதுக்களையும் துன்புறுத்தினான். எல்லாவற்றுக்கும் மேலாக தன்னையே கடவுளாக வணங்க வேண்டுமென்று கட்டளையிட்டான்.

அவனுடைய சகோதரன் ஹிரண்யாட்ஷனை பகவான் விஷ்ணு வதம் செய்துவிட்டதால் அவர் மேல் மிகவும் கோபம் கொண்டு விஷ்ணுவை யாரும் வணங்கக்கூடாது என்று கூறினான். ஆனால் அவனது மகன் பிரஹலாதன் மிகச்சிறந்த விஷ்ணுபக்தனாக இருந்தான். எத்தனை முயன்றும் அவனால் பிரஹலாதனுடைய மனதை மாற்றமுடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஹிரண்யகசிபு பிரஹலாதனை, யானையை ஏவி மிதிக்கச் செய்தும், மலையிலிருந்து உருட்டியும் கொல்ல முயற்சி செய்தான். ஆனால் பகவான் மகாவிஷ்ணு பிரஹலாதனைக் காப்பாற்றி விட்டார். ஹிரண்யகசிபுவின் சகோதரி ஹோலிகா என்பவள் தீயினால் சுடப்படாத வரத்தைப் பெற்றிருந்தாள். அதனால் அவளுடைய மடியில் பிரஹலாதனை அமரவைத்து தீ மூட்டச் செய்தான். தீ எரிய ஆரம்பித்ததும் ஹோலிகா எரிந்து போனாள். பிரஹலாதன் பகவான் அருளால் எந்த தீங்கும் இன்றி தீயிலிருந்து மீண்டு வந்தான்.

அரக்கியான ஹோலிகா அழிந்து, பக்தனான பிரஹலாதன் காப்பாற்றப்பட்டதை மகிழ்ச்சியுடன் நினைவுகூரும் பண்டிகையே ஹோலி ஆகும்.

தவத்திலிருந்த சிவபெருமானின் தவம் கலைந்து அவர் பார்வதியைத் திருமணம் செய்து கொண்டால்தான் சுப்ரமண்யர் தோன்றி அரக்கன் சூரபத்மனை அழிக்க முடியும். இதற்காக தேவர்கள் மன்மதனை சிவன் மேல் அம்புகளை விட்டு, தவத்தைக் கலைக்கச் சொல்கிறார்கள். தவம் கலைந்து எழுந்த சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட அக்னி காமனை (மன்மதனை)ச் சுட்டெரித்து விடுகிறது. காமதகனத்தைக் குறிக்கும் விதமாகவும் சில இடங்களில் ஹோலி கொண்டாடப்படுகிறது.

கடுமையான குளிர்காலம் முடிந்து வசந்த காலம் துவங்கும்போது இயற்கை அன்னை பதிய பச்சைத் துளிர்களும், வண்ண மலர்களுமாய் ஜொலிக்கிறாள். இந்த மகிழ்ச்சியை மக்கள் வண்ணப்பொடிகள் தூவியும், ஆடியும், பாடியும் கொண்டாடுகிறார்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: