தியானிக்க ஓர் தெய்வீக உருவம்

Print Friendly, PDF & Email

உருவ தியானம்

நின்ற கோலத்தில், அபயக் கரங்களுடன் தோற்றமளிக்கும் நம் அன்பு தெய்வம் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவை நாம் தியானிப்போம். நம் அன்புத் தெய்வத்தின் ஒளிவட்டம் போன்ற மிருதுவான சுருள்முடியை உற்று கவனியுங்கள். நீல வர்ண மேகங்களின் நடுவே தோன்றிடும் முழுநிலவைப் போல் முழுமையாக இருக்கும் அவருடைய அழகான திருமுகத்தைக் காணுங்கள். கவர்ந்திழுக்கும் நட்சத்திரங்கள் போன்ற அந்தக் கண்களின் பார்வை நேராக உங்கள் இதயத்துள் நுழைந்து, அதனைத் தொடுகின்றன. பாருங்கள்! அவர், நம்மைத் தனது அழகான புன்முறுவலுடன் வரவேற்கிறார். அவரது பலமான தோள்களைக் காணுங்கள். அவை அனைத்து உலகங்களின் சுமையையும் தாங்குகின்றன. அவருடைய பக்தர்களின் பாதையில் தோன்றும் அனைத்து தீமைகளையும் தடுத்து நிறுத்தும்படியாக உள்ளன. அவருடைய வலக்கரம் அபயம் அளிக்கின்றன. “அபயம்” என்றால் “பயப்படாதே” என்று பொருள். ஏனெனில், நம் பகவான், “யாமிருக்க பயமேன்!”, என்று கூறுகிறார். ஆம், அவர் நமக்கு எழுச்சியூட்ட, நம்மை வழிநடத்த, நம்மை பாதுகாக்க என்றென்றும் இருந்து கொண்டிருக்கிறார். “அவரே அனைவருக்கும் அடைக்கலமாக உள்ளார்! அவரே கருணைக் கடல் ஆவார்!”

கேளுங்கள்! பாபாவின் இனிமையான வழிகாட்டும் குரல் உங்கள் செவிகளில் ரீங்காரம் செய்வதை நீங்கள் கேட்க முடியும்! “தீயதை விட்டு விலகி நில்! நற்செயல்களைச் செய், தர்மத்தின் வழி நட! சத்தியம், பிரேமை, அனைத்து ஜீவராசிகளிடமும் அஹிம்சை, சகிப்புத்தன்மை, விடாமுயற்சி மற்றும் பொறுமை ஆகியத் தெய்வீக குணங்களே, அமைதி, மகிழ்ச்சி மற்றும் மங்களம் போன்றவற்றை அளித்துப் பேணும் ” என்று அவர் கூறுகிறார். அவரது திருப்பாதங்களை நன்றாகப் பற்றிக் கொள்ளுங்கள். அவரது கமலமலர் பாதங்களில் நம் சிரத்தை தாழ்த்தி வைத்து இவ்வாறு பிரார்த்திப்போம்.

பிரபஞ்சமனைத்திற்கும் தலைவரானவரே! உங்கள் பாதங்களைப்பிடித்துக் கொண்டிருக்கும் இந்தக் கரங்கள் எக்கணமும் தளர்ந்துவிடாதிருக்குமாறு பலத்தை அருளுங்கள்! உங்கள் சங்கல்பத்திற்கு வணங்கி நிற்கும் எங்கள் சிரங்கள், என்றென்றும் உலகியலான எந்தத் தீயதொன்றின் முன்னும் வணங்கி நிற்கக் கூடாது என்றும், உங்கள் திருப்பாதங்களின் மேல் வீழ்ந்த எம் கண்கள் அங்கேயே என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்றும் எமக்கு அருளுங்கள்!

பகவானே! எங்கள் காலியான இதயங்களில் குடியேறி, அதனை உங்கள் வசிப்பிடமாக மாற்றி, அதனை நோக்கிப் பாயும் எம் இரத்தம் அனைத்தும் தூயதாகட்டும்! அதன் பின், நான் காணும் அனைத்தும், நான் பேசும் அனைத்தும், நான் கேட்கும் அனைத்தும், நான் செய்வதனைத்தும் சத்தியம், சிவம், சுந்தரமாகவே இருக்கும்.

  • பகவானே! எங்கள் மனதிலும் எண்ணங்களிலும் இருந்திடுங்கள்,
  • பகவானே! எங்கள் கண்களிலும் காட்சிகளிலும் இருந்திடுங்கள்,
  • பகவானே! எங்கள் செவிகளிலும் கேட்பவற்றிலும் இருந்திடுங்கள்,
  • பகவானே! எங்கள் வாயிலும் பேச்சிலும் இருந்திடுங்கள்,
  • பகவானே! எங்கள் இதயத்திலும் விருப்பங்களிலும் இருந்திடுங்கள்,
  • பகவானே! எங்கள் உடலிலும் செயல்களிலும் இருந்திடுங்கள்.

உங்களை அனைத்திலும் நாங்கள் காணுமாறு உங்கள் உண்மையான தூய்மையான குழந்தைகளாக எம்மை மாற்றிடுங்கள். அப்பொழுது தான் இந்த உலகம் முழுவதும் உங்கள் மகிமை நிறைந்ததாக எமக்குத் தோன்றிடும். அதன் பின் எமக்கு எதிரிகள் இருக்கமாட்டார்கள். நாங்கள் யாரையும் கண்டு பொறாமை கொள்ளமாட்டோம். யாரும் எம்மைக் கண்டு பொறாமை கொள்ளமாட்டார்கள், ஏனெனில் அவர்கள் அவர்களல்ல; நீங்கள் தான்! நாங்களும் நாங்களல்ல நீங்கள் தான்! தெய்வமே! நீங்கள் எம்முடையவர்! நாங்களும் உங்களுடையவர் தாம்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: