காந்திஜி
காந்திஜி
நான் முதன் முதலாக காந்திஜியை ஏப்ரல் 1938-ல் மாகன் வாடியில் (வார்தா) சந்தித்த போது நான் கருதி வந்தது எத்துணை தவறானது என்பதை உணர்ந்தேன். என் கருத்து தவறானது என்பதற்கு, நான் அங்கு அடைந்த ஏமாற்றத்தைக் குறிப்பிடவில்லை. காந்திஜியை நான் எப்படி கற்பனை செய்து எதிர்ப்பார்த்திருந்தேனோ அதற்கு நேர்மாறாக அவர் இருந்ததைக் கண்டுதான் அங்ஙனம் சொன்னேன்.
நான், மற்ற தலைவர்களைப் போல மகாத்மா காந்தி தனிப்பட்ட தன்மையினராக எப்போதும் மாறாத இறுக்கமான இயல்புகளுடன் இருப்பார் என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால், நான் பெரிதும் வியக்கும் வண்ணமாக, அவருடன் பழகிய சில நிமிடங்களுக்குள், அவரை ஒரு சிறந்த மனிதராக என்றும் பொழியும் நீர் ஊற்றென, ஒளிரும் அறிவுடன் கலகலப்பான நகைச்சுவை பேச்சுடன் இருந்த அவரை நான் கண்டு களித்தேன். ”நீ இங்கு எனக்காக என்ன பணியாற்ற விரும்புகிறாய்?” என்று காந்திஜி என்னைக் கேட்டார். ”நான் உங்கள் சேவையில் இருக்கிறேன்! அன்பு கூர்ந்து கட்டளையிடுங்கள்!” ”நீ அண்மையில் இங்கிலாந்திலிருந்து திரும்பியுள்ளாய் என்று நான் அறிவேன். இலக்கிய பணி புரிவாய் என்றும் தெரியும். ஆனால் நான் உனக்கு அந்த வேலையைத் தரமாட்டேன். நூல் நூற்கும் சக்கரத்தைப் பற்றி நீ ஆராய்ந்து அறிந்திருக்கிறாயா? இதோ என்னுடைய சக்கரம் பழுதடைந்து இருக்கிறது. அதை நீ கவனித்து சரி செய்ய முடியுமா?” ”எனக்கு சக்கரத்தைப் பற்றி ஏதுமே தெரியாதே என்று அஞ்சுகிறேன். அதனுடைய நுணுக்கங்களை நான் முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும்.” ”அப்போது நீ கற்ற கல்வியெல்லாம் வீணாகி விட்டதில்லையா? ஒரு ஹிந்துஸ்தானி பழமொழி கூறுவதுபோல, உன் படிப்பு “மணலைச் சலிப்பது” போல ஆகிவிட்டதே என்று காந்திஜி குறிப்பிட்டு மனம் நிறைந்து வாய்விட்டு சிரித்தார். ”அதை நான் ஒப்புக் கொள்கிறேன்,” என்று நானும் புன்னகைத்தேன். “அது சரி! நான் உனக்கு அத்தகைய வேலையே தருகிறேன். நீண்ட பள்ளமாக வெட்டப்படும் (மல அறைகள் அமைப்பதற்காக) நல்ல மணலாக சலிக்க வேண்டியிருக்கிறது. ஏன் நீ சகோதரி M.S.க்கு அந்த பணியில் உதவக் கூடாது” என்றார் பாபுஜி.
“அந்தப் பணியை நான் மகிழ்வுடன் ஏற்றுச் செய்கிறேன்,” என்று உடனடியாக விடை பகன்றேன். நான் தோட்டத்தில் பலபல வேலைகளைச் செய்துள்ளேன். அதனால் அந்தப் பணி எனக்குப் புதியதாக இருக்காது. ”மிகவும் சரி” என்று சிரித்தார் காந்திஜி. அதன் பிறகு சில மாதங்களுக்கு நான் அந்த பணியைச் செவ்வனே செய்து வந்தேன். சென்ற ஆண்டு காந்திஜி மிக்க அன்புடன் வார்தாவிலுள்ள என் சிறிய வீட்டில் இரண்டு முறை வந்து தங்கினார். அவர் முதல் முறையாக டிசம்பர் 1944-ல் வந்த போது அவர் இரவில் உறங்க மூன்று தலையணைகளைப் பயன் படுத்தினார். அடுத்த முறை அவர் பிப்ரவரி 1945-ல் வந்தபோது அவர் முழுமையாக தலையணைகளை ஒதுக்கி விட்டதை அறிந்து வியந்தேன். ”பாபுஜி ஏன் இப்போது தலையணைகளை உபயோகிப்பதில்லை” என்று தயங்கியவாறு கேட்டேன்.
“நான் ஒரு முறை ‘சவாசனம்’ அமைதியான உறக்கத்தை தூண்டுகிறது என்று படித்தேன். அதனால் நான் அந்த நிலையில் சோதனை செய்து பார்க்கிறேன்”, என்றார் காந்திஜி.
”பாபுஜி தங்கள் வாழ்க்கையில் இத்தகைய சோதனைகள் நிறைந்து இருக்கின்றன. வயதான காலத்தில் தாங்கள் மற்றவர்களை போல இத்தகைய சோதனைகளைச் செய்து பார்க்கக் கூடாது. தங்கள் உடல் நலம் இத்தகைய சோதனைகளைத் தாங்காத அளவு மென்மையாகவும் அருமையாகவும் இருக்கிறது”.
”ஓ, இல்லை, இல்லை, என் வாழ்க்கையே சோதனைதானே இத்தகைய என் சோதனைகள் என் மரணத்துடன்தான் முடிவுறும்” என்று சிரித்துக் கொண்டே கூறினார் காந்திஜி. சென்ற ஆண்டு காந்திஜி வங்காளத்திற்குச் சுற்றுப் பயணம் சென்ற போது மூன்றாம் வகுப்பில் இரண்டு நீளமான அறைகள், அவருக்காகவும், அவரைச் சேர்ந்தவர்களுக்காகவும் தனிமையாக ஒதுக்கப் பெற்றிருந்தது. அவர் வந்ததும் இரண்டு அறைகள் தேவையில்லை என்று அறிந்தார். அவரும் அவருடைய கூட்டத்தினரும் ஒரு அறையிலேயே வசதியாக பயணம் செய்யலாம். அதனால் அவர் உடனே கனுகாந்தியை அழைத்து, ஒரு அறையை ஒழித்துத் தந்துவிடும்படி கேட்டார். “ஆனால் இரண்டு அறைகளுமே நமக்காக ஒதுக்கப் பெற்றிருக்கின்றன பாபுஜி! அதற்கு தேவையான கட்டணமும் செலுத்தியாகி விட்டதே.” ’அதைப் பற்றி இப்போது ஒன்றும் தேவையில்லை. நாம் இப்போது வங்காளத்திற்கு ஏழை மக்களுக்கும், பட்டினியில் வாடும் இலட்சக் கணக்கானவர்களுக்கும் சேவை செய்யவே செல்கிறோம். வண்டியில் மிக மிக வசதியாகப் பயணம் செய்து மகிழ்வது நாம் செய்யப்போகும் சேவைக்குப் பொருத்தமாக இராது. மேலும் அடுத்துள்ள மூன்றாம் வகுப்பு அறைகளில், மக்கள் அடைப்பட்டு மூச்சு திணறுவதை நீ கவனிக்க வில்லையா? இது போன்ற சூழ்நிலைகளில் நமக்கு நிறைவான தேவைக்கு மேற்பட்ட இடத்தை உரிமை கொள்வது விரும்பத் தகாத செயலாகும். மூன்றாம் வகுப்பில் வசதிக்காக நிறைய இடத்தை இந்த நாட்களில் இது போன்று ஒதுக்கி வைத்துக் கொள்வது சட்டத்தை மீறுகிற கொடிய குற்றமும் கேலியாக நகைக்கத் தகுந்ததுமாகும்”, என்று காலத்தை அனுசரித்து கூறினார் காந்திஜி. மேற்கொண்டு ஒருவரும் வாயைத் திறக்கவில்லை. கூட்டத்தினர் அனைவரும் ஒரே அறையில் ஏறிக் கொண்டு மற்றொன்றை மற்ற பயணிகள் ஏறுவதற்காக காலி செய்துவிட்டனர். அதன் பிறகே, காந்திஜி, மனம் அமைதி பெற்றவராய் உறங்கினார்.