ஸ்ரீ கணேசரும் சிந்துராசுரனும்

Print Friendly, PDF & Email
“ஸ்ரீ கணேசரும், சிந்துராசுரனும்”- கதை

பிரம்மா படைத்த முதல் யுகம் சத்யயுகம். அப்பொழுது, சிந்துராசுரன் என்ற சக்தி வாய்ந்த அரக்கன்  வாழ்ந்து வந்தான். இடைவிடாமல் தவம் புரிந்த அவன், தவத்தால் கிடைத்த வல்லமையை, தீமையைப் பெருக்குவதிலும், நல்லவர்களை அழிப்பதிலும் பயன்படுத்தினான். காலப்போக்கில் மிகவும் சக்தி வாய்ந்தவனாகி, அவனை எவராலும் வெல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டது. சிந்துராசுரன், துறவிகளையும், முனிவர்களையும் சிறைப்பிடித்துச், சித்திரவதை செய்தான். பிரபஞ்சத்திலேயே தனக்கு மீறிய சக்தி யாருக்கும் இல்லை என்று பெருங்கர்வம் கொண்டான். இந்தக் கொடுமைகள் தாங்காமல், சாதுக்களும், முனிவர்களும் பகவான் நாராயணரிடம் சரணடைந்தனர். சிந்துராசுரனின் பிடியிலிருந்துத் தங்களை விடுவிக்குமாறு வேண்டினர். நாராயணன் அவர்களிடம்,  “சாதுக்கள் அச்சமுறத் தேவையில்லை. நான் அபயம் அளிகிறேன்”  என்று வாக்களித்தார்.

சிவன் பார்வதிக்குத் தமது அம்சமான ஒரு குழந்தைப் பிறந்து, சிந்துராசுரனை அழிக்கும் எனவும் நாராயணர் அருளினார். பார்வதி கருவுற்றிருந்த செய்தி சிந்துராசுரனுக்குத் தெரிந்தது. அவள் பெற்றெடுக்கும் பிள்ளை அவனைக்கொல்லும் எனவும் தெரிந்திருந்தான். எனவே அவன், ஒரு சிறு உருவெடுத்து, பார்வதியின் கருப்பையில் புகுந்து, உருவாகி வந்தக் குழந்தையின் தலையை நீக்கி விட்டு மறைந்தான். 9 மாதம் கழித்து பார்வதி ஒரு குழந்தையைப்பெற்றாள். அக்குழந்தை தலையற்று இருந்தது. எனினும் நாராயணன் அம்சம் என்பதால் உயிரோடு இருந்தது. குழந்தைப் பிறந்த பொழுது, தலையற்ற முண்டத்தைப் பார்த்துப் பார்வதித் திகைத்து அலறினாள். சிவ பெருமான் ஆறுதல் கூறி, கவலையுற வேண்டாம் என்று கூறினார். பின், தன் பூதங்களில் ஒருவரான வீரபத்திரரை அழைத்தார். நீ பூமிக்குச் சென்று, எந்த உயிர், தென் திசையில் கால் நீட்டி உறங்கிக் கொண்டிருக்கிறதோ, அதைக் கொண்டு வருவாயாக” எனக் கூறினார். வீர பத்திரர் எவ்வளவு தேடியும், தென் திசையில் கால் நீட்டி உறங்கும் ஒரு உயிரையும் காண முடியவில்லை.

தெற்குத்திசை, எமதர்மனின் உறைவிடம். அந்தத் திசையில் யாரும் கால் நீட்டிப் படுக்கமாட்டார்கள். இறுதியில் யானை ஒன்று தெற்குத் திசையில் கால் நீட்டிப் படுத்திருப்பதை வீரபத்திரர் கண்டார். வீரபத்திரர் சிவனிடம் சென்று, தெற்குத் திசையில் கால் நீட்டி உறங்கும் எந்த மனிதனையும் காண முடியவில்லை என்றும், யானை ஒன்றுதான் அங்ஙனம் உறங்குவதாகவும், அதன் தலையைக் கொண்டு வரலாமா  என்றும் கேட்டார். சிவபெருமானும் சம்மதித்தார். கொய்த யானைத் தலையுடன் வீரபத்திர் திரும்பினார். சிவபெருமான் தன் மகனுக்கு யானைத் தலையைப் பொருத்தினார்.

மனித உடம்புடன், யானைத் தலையும் கொண்ட தன் மகனை உலகம் கேலி செய்யுமே என்று பார்வதி தேவி மனம் வருந்தினார். அவரைப் பயப்பட வேண்டாம் என்று சிவன் கூறினார். “நான் இந்தக் குழந்தையை ஆசிர்வதிக்கிறேன். இவன் வித்யாபதி என்று வழங்கப்படுவான். இவன் கல்விமான்களுக்கு,  அறிவையும், விவேகத்தையும் வழங்குவான். இவன் விக்னஹர்தா (தடைகளை அகற்றுபவன் ) என்றும் அழைக்கப் படுவான். சமுதாய மற்றும் சமயச் சடங்குகள் நடத்துமுன், மக்கள் இவனை வணங்கி ஆரம்பிப்பர். வழிபாட்டில் இவனுக்கே முதலிடம் வழங்கப்படும். இவன் மிகவும் பிரபலமாவான்” என்றெல்லாம் கூறினார். பார்வதி தேவியும் அகம் மகிழ்ந்தார். பார்வதி மைந்தன், கணேசன் என்ற  திருநாமம்  சூட்டப்பெற்றார்.

கணேசன் வளர்ந்து, இளம்பிராயம் அடைந்தார். அவருடைய அவதார நோக்கம் நிறைவேறும் காலம் நெருங்கியது. நர்மதை ஆற்றங்கரையில் சிந்துராசுரனுக்கும் ஸ்ரீ கணேசனுக்கும் போர் நடைபெற்றது. இறுதியில் கணேசன் போரில் வென்றார். சிந்துராசுரன் பரசு என்ற ஆயுதத்தால் அழிக்கப்பட்டான். கணேசன் சிந்துராசுரனின் தலையைப் பரசு ஆயுதத்தால் கொய்த பொழுது சிந்துராசுரனின் உடலிலிருந்த ரத்தம் திடீரெனக் கொப்பளித்து கணேசனின் உடல் முழுவதும் தெளித்தது. ஆகவே தான், கணேசன் எப்பொழுதும் செம்மையாக உருவகிக்கப்படுகிறார். இன்றும், நர்மதையில் உள்ள சிவப்பு நிறக் கற்கள் கணேசனாகவே வழிபடப்படுகின்றன.

போர் நடந்த பின், நதிக்கரையில் அமர்வதற்குக் குளிர்ந்த இடத்தைக் கணேசன் தேடினார். கொத்துக் கொத்தாக குளிர்ந்த பசும்புல்லைக் கண்டார். அது அருகம்புல். அங்கு சற்று நேரம் இளைப்பாறினார். பின்பு அந்தப் புல்லை ஆசிர்வதித்தார். அந்தப் புல்லால் (அருகம்புல்லால்) என்னை யார் வழிபட்டாலும் நான் மகிழ்வேன் என்று அறிவித்தார். அதனால் தான் இன்றும் அருகம்புல்லால் கணேசனை வழிபடுகின்றோம். அனைத்து ஹிந்துக் குடும்பங்களிலும் இடையூறுகள் (அ) தடங்கல்களைப் போக்க, பிறந்த நாள் விழா, புதுமனைப் புகுவிழா, ஸ்ரீ சத்தியநாராயண விரத பூஜை ஆகியவைகளை ஆரம்பிக்கும் முன் விக்னஹர்தாவாகிய கணேசனை வழிபட்டு, பின்பு விழாவை ஆரம்பிக்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: