பிரபஞ்சப் ப்ரேமை
பிரபஞ்சப் ப்ரேமை
தீர்க்க தரிசியான முகம்மது உலகத்துக்குத் தாம் நிறுவிய இஸ்லாம் மதத்தை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார். அவர் ஒரு அவதார புருஷர். வாய்மை, வழிபாடு, அமைதி, அனைவரிடமும் அன்பு இவற்றைப் பற்றிய மேலான செய்திகளை அவர் பரப்பி வந்தார். முகம்மது இஸ்லாம் மதத்தைப் பரப்பத் துணிந்தபோது, அவரைப் பலர் எதிர்த்து நின்றனர். சிலர் அறியாமையினால் அவரோடு ஒத்துப்போக முடியாதிருந்தனர். மற்றும் சிலர் நாளுக்கு நாள் மக்களுக்கிடையே மதிப்பிற்குரியவராக அவர் சிறப்பதைப் கண்டு பொறாமை கொண்டனர். பின்னும் பலர் மக்கள் மனங்களில் வெறுப்பை உண்டாக்க விரும்பியவர்களாய் அவரைப்பற்றிப் பலப்பல அவதூறுக் கதைகளை எழுப்பினர். மேலும் சிலரோ, அவரைத் தாக்கி அவருக்கு ஊறு விளைவிக்கவும் திட்டமிட்டனர். இது போன்ற எதிரிகளில் ஒரு அரேபிய மூதாட்டியும் இருந்தாள். முகம்மதின் தொண்டர்கள் நாளுக்கு நாள் மிகுவதைக் கண்டு வந்த அவளால் தனக்குள் எழுந்த கோபத்தையும் வெறுப்பையும் கட்டுப்படுத்தவே இயலாது போயிற்று. தினமும் முகம்மது அவள் வீட்டு வழியே மசூதிக்குச் செல்வதை அறிந்தாள். அவள் மனம் மகிழ்ந்தது.
தன் வெறுப்பைக்காட்ட அவளுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அன்றே அவள் தன் வீட்டுக் குப்பைக் கூளங்களைப் பெருக்கி ஒரு தட்டில் சேர்த்தாள். பிறகு தன் திட்டத்தைச் செயலாற்றத் தக்க தருணத்திற்குக் காத்திருந்தாள்.
மறுநாள் காலையில் வழக்கப்படி முகம்மது வந்தபோது வீட்டின் மாடித்தளத்திற்குச் சென்று அவர் தலையில் குப்பைக்கூளங்களை நிறைத்து வைத்திருந்த தட்டைக் கவிழ்த்தாள். ஆனால் முகம்மது அவளது செய்கையால் பாதிக்கப்பட்டவராகவே தெரியவில்லை. தலையை நிமிர்த்தியும் அவர் பார்க்கவில்லை. கொஞ்சங்கூடப் பதட்டம் அடையாமல் தம் தலை மீதும்,தோள்மீதும் விழுந்திருந்த குப்பைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டுத் தன் வழியே மசூதிக்குச் சென்று விட்டார்.ஆனால் அந்த மூதாட்டி அவர் பட்ட தொல்லையை நினைத்து வாய்விட்டுச் சிரித்தாள். “சரி, சரி! இதுதான் காலையில் என்னிடமிருந்து தினமும் அவர் பெறவேண்டிய வரவேற்பு!” என்று தனக்குள் மகிழ்ந்து போனாள். அவள் தினமும் காலையில் முகம்மதை அவமானப்படுத்தத் தன் குறும்புத்தனமான செயலைத் தொடர்ந்து செய்து வந்தாள். ஆனால் அவர் அதைக் குறித்து கவலையே படாமல் செல்வதையும் கவனித்தாள். உண்மையில் தனது குரூரமான செய்கையை அவர் பொருட்படுத்தாது சென்றது, அவளுக்கு நாளுக்கு நாள் எரிச்சலை ஊட்டிவந்தது.
ஒரு நாள் அவள் வீட்டைக் கடந்து செல்லும்போது மூன்று நாட்களாக குப்பைப் கூளங்கள் தன் தலையில் விழாததை முகம்மது நினைவு கூர்ந்தார். அதைக்குறித்து அவர் மகிழ்வதற்கு பதிலாக மிக்கக் கவலைப்பட்டார். “ஏன் குப்பைகள் இப்போது விழுவதில்லை? என் தொண்டர்கள் யாரேனும் இந்தக் குறும்புச் செயலை அறிந்து கொண்டார்களா? குப்பையைக் கொட்டியவருக்குத் தண்டனை ஏதும் தந்திருப்பார்களா? அங்ஙனம் நடந்திருக்காது என்று நம்புகிறேன். எப்படியிருந்த போதிலும் உள்ளே போய் அவருக்கு என்ன நேர்ந்தது என்று காரணத்தைக் கண்டுபிடிக்கிறேன் “ என்று தனக்குள் கூறிக் கொண்டார்.
பிறகு முகம்மது மாடி ஏறிச்சென்று கதவைத் தட்டினார். அது பாதி திறந்தே இருந்தது. “உள்ளே வாருங்கள்!” என்று ஒரு மெலிந்த குரல் அவரை அழைத்தது. அவர் உள்ளே நுழைந்ததும் வலியினால் முனகிக்கொண்டு ஒரு வயதான பெண்மணி படுத்திருப்பதைப் பார்த்தார். “அம்மா! உடல் நலம் மிகவும் கெட்டிருக்கிறதா? மருந்து ஏதேனும் அருந்தினீர்களா?” என்று பரிவோடு வினவினார். “வீட்டில் என்னைக் கவனிக்க வேறு ஒருவருமே இல்லை. மிக முயற்சி செய்தே நான் நடமாடவும் எனக்காக ஏதேனும் செய்து கொள்ளவும் முடிகிறது” என்று வருத்தத்தோடு கூறினாள் அந்த மூதாட்டி.மூன்று நாட்களாக மிகுந்து வரும் அவளது பிணியைப் பற்றிய விவரத்தை மேலும் கேட்டு அறிந்தார் முகம்மது. பின்னர், அவர் வெளியே சென்று சிறிது நேரம் கழித்துத் திரும்பினார். அவரது கையில் ஒரு புட்டி இருந்தது. “ஹகிமிடமிருந்து உங்களுக்காக இந்த மருந்தை வாங்கி வந்தேன். ஒரு நாளைக்கு மூன்று வேளை இதை அருந்துங்கள். விரைவில் நலமுறுவீர்கள்!” என்று ஒரு கிண்ணத்தில் அந்த வேளைக்கான மருந்தை ஊற்றித் தந்தார்.
அவரது அன்பார்ந்த செயலைக் கண்டதும், அவரது தூய்மையான உள்ளத்தை நினைத்துக் கண்களில் நீர் சோர விம்மினாள் அந்த மூதாட்டி. “எத்துணைப் பொறுமையான மனமும், கருணைமிக்க இதயமும், மன்னிக்கும் பண்பும் பெற்ற உயர்ந்த மனிதர் இவர்!” என்று எண்ணினாள். முகம்மதின் புறம் திரும்பித் தான் செய்து வந்த தீங்குக்காக மனம் நொந்தவளாய், விம்மி வெடித்து வந்த அழுகையோடு அவரது திருவடிகளில் பணிந்து விழுந்தாள் அவள்.
“உண்மையில் தாங்கள் ஓர் அவதாரம்தான். நான் தங்களுக்கு இழைத்துள்ள கொடுமைக்குக் கடவுள் என்னை மன்னிப்பாரா? அன்பு கூர்ந்து இறைவனை அறிந்துகொள்ள எனக்கு நேர்வழியைக் காட்டியருளுங்கள்,” என்று துயரத்தினால் சொற்கள் தடுமாறச் சொல்லி முடித்தாள். “உங்களைத் துன்புறுத்திக் கொள்ளாதீர்கள் அன்னையே! எல்லாம் வல்லவர், எல்லாம் அறிந்தவர், எங்கும் நிறைந்திருப்பவர் என்று கடவுளிடம் முழு நம்பிக்கை கொண்டு விட்டீர்களானால் அவர் உங்களைவிட்டு நெடுந்தொலைவில் இருக்க மாட்டார். உங்கள் அருகில் இருந்து அருள் புரிவார். ஆனால் வெறும் வழிபாடு மட்டும் அவரை நிறைவு செய்துவிடாது. எல்லோரிடமும் தன்னலமற்ற அன்பு இடைவிடாத கடவுட்சிந்தனையால் அந்த அன்பை மேன்மேலும் வளர்ப்பது, சேவை மனப்பான்மை, அதிலும் சுயநலமற்ற சேவை மனப்பான்மை இவையே கடவுளின் அன்பிற்குகந்தவர்களாக நம்மை உருவாக்குகின்றன” என்று முகம்மது அந்த மூதாட்டிக்கு அறிவுறித்தினார்.
கேள்விகள்:
- அரேபிய மூதாட்டி செய்த குற்றம் என்ன?
- முகம்மது அவளுக்கு என்ன பாடம் கற்பித்தார்?
- எப்படி நாம் கடவுளின் அன்பிற்குகந்தவர்களாக ஆக முடியும்?