சாலச்சிறந்ததை இறைவன் அறிவார்

Print Friendly, PDF & Email
சாலச்சிறந்ததை இறைவன் அறிவார்

சூரியன், சந்திரன், விண்மீண்களைக் கடவுள் படைத்தார். நாம் வசிக்கும் இவ்வழகிய பூமியையும் அவரே படைத்தருளினார். அவர்தாம் எல்லாம்வல்ல நம் தந்தையாவார். நாம் எல்லோரும் அவரது அன்பிற்குகந்த குழந்தைகள்.

அன்போடும், நம்பிக்கையோடும் நாம் அவரிடம் முறையிட்டால், அவர் மகிழ்ந்து நமக்கு வேண்டியன அருள்வார். வாய் திறவாது மௌனமாக நாம் வேண்டினாலும் அவர் காது கொடுத்துக் கேட்கிறார். ஆனால் நமது பிரார்த்தனை மனப்பூர்வமாக இருக்க வேண்டும். நம் கோரிக்கையும் நியாயத்திற்கும் நேர்மைக்கும் புறம்பாகாமல் இருக்க வேண்டும். அங்ஙனம் நம் வேண்டுகோள் அமையாது போனால், இறைவன் மனநிறைவோடு நமக்கு அருளமாட்டார். வேண்டியது கிடைத்து விடினும் நமக்கும் அதனால் அமைதி இராதுபோகும்.

மோஹூர் என்ற கிராமத்தில் சம்பு என்ற செருப்புத்தைக்கும் தொழிலாளி ஒருவன் வசித்து வந்தான். அவன், தான் புரியும் தொழிலில் நேர்மையானவன். கடவுளுக்கு அஞ்சி நடப்பவன். அதனால் சுற்றுவட்டாரம் முழுவதும் அவனைப் போற்றியது. நாள் முழுவதும் புதுப்புதுக் காலணிகள் தைப்பதிலும், பழையனவற்றைப் புதுப்பிப்பதிலும் அவன் ஈடுபட்டிருந்தான். அதில் வரும் வருவாய் அவன் தன் குடும்பத்தை நல்லமுறையில் காக்கப் போதுமானதாக இருந்தது.

ஒருநாள் மோஹூர் ஜமீன்தாரும் அடுத்துள்ள கிராமத்தினர் சிலரும் சம்புவின் சிறிய குடிசையைக் கடந்து சென்றனர். ஜமீன்தார் மிகவிலையுயர்ந்த பட்டாடைகளை அணிந்து கொண்டு உயர்ந்த குதிரை ஒன்றின் மீதமர்ந்து ஓர் அரசன் போல ஒய்யாரமாகச் செல்வதைச் சம்பு பார்த்தான். “ஆ! அதோ நம் ஜமீன்தார் போகிறாரே!” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் சம்பு. மேலும், “அவருக்கு இருபது கிராமங்கள் சொந்தமாக இருக்கின்றன. ஒரு தங்கச்சுரங்கத்தையே வாங்கக்கூடிய அளவுக்குச் செல்வம் அவரிடம் குவிந்துள்ளது. அவரது வாழ்க்கை இன்பமும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கிறது. நேர்மாறாக இதோ நானும் இருக்கிறேனே! இங்கு உட்கார்ந்து நாள் முழுவதும் தோலை வெட்டியும், காலணி தைத்தும், கடுமையான வேலை செய்து கொண்டு கிடக்கிறேன். கடவுள் ஏன் என்னிடம் கருணையற்றவராக இருக்கிறார்?” என்று பலவாறு எண்ணிக் கலங்கினான் அவன்.

இங்ஙனம் சம்பு கடவுளை நினைத்துத் தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்த போது அவனது கண்கள் அவனை அறியாமலேயே சுவரில் மாட்டியிருந்த, பண்டரிபுரத்தில் கோவில் கொண்டுள்ள, ஐயன் விட்டலின் படத்தைப் பார்த்தன. களங்கமற்ற மனத்துடன் அவன், தான் மிக விரும்பும் விட்டலின் படத்தைப் பார்த்து நேரில் பேசுவது போலப் பேசலானான்.

“எம்பெருமானே! தாங்கள் தாம் என்னுடைய எல்லாம் வல்ல தந்தையார். தாங்கள் என் அன்பிற்குகந்த தாயாரும் ஆகிறீர்கள். காலையிலிருந்து இரவு வரைக் கடுமையாக நான் பணியாற்றுவதைத் தாங்கள்கவனித்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். தங்களுக்கு என்மேல் இரக்கமே ஏற்படவில்லையா? வசிப்பதற்கு ஒரு பெரியவீடு ,உணவுப் பொருள் விளைய ஒரு துண்டுநிலம், எனக்கும் என் மனைவி குழந்தைகளுக்கும் ஏதாவது தேவையான நல்ல பொருள்கள் வாங்கப் போதுமான பணம் இவற்றை மட்டும் தாங்கள் எனக்குத் தந்து உதவினால் எத்துணை மகிழ்ந்து போற்றுவேன்!” என்று பலவாறு இறைவன் படத்திடம் மனம் விட்டுப் பேசினான் சம்பு.

சம்பு இங்கனம் புலம்பும்போது படத்திலிருந்த இறைவன் விட்டோபா புன்னகை புரிவது போலச் சம்புவிற்குத் தோன்றியது. “கட்டாயம் விட்டோபா என் வேண்டுகோளைக் கேட்டு விட்டார். ஆனால் அவர் ஏன் என்னைப் பார்த்துச் சிரிக்கிறார்? நான் ஒரு வேளை அதிகம் ஆசைப்பட்டுக் கேட்டேனா?” என்று தனக்குத்தானே வினவிக் கொண்டான்.

அன்று இரவு ஜமீன்தாரின் கனவில் விட்டோபா தோன்றி “மோஹூரில் இருக்கும் செருப்புத்தைக்கும் சம்பு என் பக்தன். அவனுக்கு நீ உதவ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவனுக்காக ஒரு பெரிய வீட்டைக் கட்டு. ஒரு பானை நிறையத் தங்க நாணயங்களை நிரப்பி அவனிடம் தா. இரண்டு ஏக்கர் நிலத்தை அவன் பெயருக்கு மாற்று. இவற்றுக்கு ப்பதிலாக நீ என் ஆசிகளை நிரம்பப் பெறுவாய்” என்று கூறி மறைந்தார்.

ஜமீன்தார் இறைவன் விட்டோபா கூறியபடியே நடக்கக் கட்டளை இட்டார். சம்புவால் தனக்கு வலியவாய்த்த நல் வினையை நம்பவே முடியவில்லை. அன்றே தோல்களோடும் காலணிகளோடும் மன்றாடுவதை நிறுத்திவிட்டான். அவனது குடும்பம் முழுவதுமே வயலில் இறங்கி நிலத்தை உழுதல், விதை நடுதல், நாற்றுப் பிடுங்குதல் என்று வேலை செய்தது. அவர்கள் விரும்பியதைக் கடவுள் அவர்களுக்கு நல்கிவிட்டார் என்று அவர்கள் பெரிதும் மகிழ்ந்தனர்.

ஆனால் சில நாட்களிலேயே சம்பு பலப்பல சிக்கல்களில் மாட்டிக் கொள்ளலானான். அவனது புதிய பெரிய வீட்டில் அதுவரை ஒதுங்கி இருந்த உறவினர்கள்,அண்மையிலிருந்தும் தூரத்திலிருந்தும் வந்து குவிந்தனர். நாள் தோறும் அவர்கள் தங்களுக்குள்ளாகவே ஏதாவது ஒரு காரணம் பற்றிச் சண்டையிடத் தொடங்கினர். சம்புவிற்குத் தங்கநாணயங்கள் அடங்கியபானையை உறவினர் கண்களில் படாமல் பாதுகாப்பாக வைக்க வீட்டில் ஒரு இடம் கிடைக்கவில்லை. அதை அவன் தன் வயலிலேயே ஒரு மூலையில் குழிதோண்டிப் புதைத்து வைத்தான். ஒரு வேளை அவன் புதைத்து வைத்ததைத் திருடன் எவனாவது அறிந்து களவாடிச் சென்றுவிடுவானோ என்ற கவலையில் சம்புவிற்கு இரவு நேரங்களில் தூக்கம் பிடிக்காமற் போய்விட்டது. இது போன்ற காரணங்களால் அவனுடைய மனஅமைதியும் அடியோடு பறி போய்விட்டது.

அந்த ஆண்டு பயிரும் சரியாக விளையவில்லை. அதனால் சம்புவின் குடும்பத்தினர் வயலிலிருந்து போதுமான உணவுப் பொருள் பெற இயலாது போயிற்று. இத்துணைத் துன்பங்களால் சம்பு அவனுடைய வாழ்வில் அமைதியையும், மகிழ்ச்சியையும் அடியோடு இழந்து நின்றான். நாளுக்குநாள் அவன் துயரம் மிகுந்தவனாய் இளைத்து வந்தான். ஆனால் துயரமான அனுபவங்களால் முன்னைவிட மெய்யறிவு பெற்று விளங்கினான் எனலாம்.

ஒருநாள் விட்டோபா படத்தின் முன் நின்றுகொண்டு “என் ஐயனே! நான் ஒரு வீடும் பொருளும் நிலமும் கேட்டபோது தாங்கள் ஏன் என்னைப் பார்த்து அப்படிச் சிரித்தீர்கள் என்று இப்போது நன்கு உணர்ந்து கொண்டேன். அந்தப் பொருள்கள் என் இன்பத்தைப் பலமடங்காகக் கூட்டவில்லை. உண்மையில் அவை என் மன அமைதி நிறைவான இதயம், ஆழ்ந்த உரக்கம், நலமார்ந்த உடல், மனமார்ந்த மகிழ்ச்சி அனைத்தையுமே என்னிடமிருந்து களவாடிச் சென்றுவிட்டன. என்னுடைய சுயநலத்தையும், பேராசையையும் மன்னித்து விடுங்கள் சுவாமி! மறுபடியும் என்னுடைய கடுமையான, ஆனால் நாணயமான பணியையே எனக்குத் தந்தருளுங்கள். பலப்பல சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் புதுக் காலணிகளைத் தைத்துக் கொடுத்தும், புதுப்பித்துக் கொடுத்தும், நான் பணிபுரியச் செய்யுங்கள். என் இதயத்தை அன்பினாலும், அளவு கடந்த பக்தியினாலும் நிரப்புங்கள். இனிமேல் நான் என் கடமையைச் செய்துகொண்டு மற்றவற்றைத் தங்கள் பொறுப்பில் விட்டுவிடுகிறேன். என் அன்பின் இறைவா! தங்கள் குழந்தைகளான எங்களுக்கு எது நல்லது என்று தாங்கள் தாம் நன்கு அறிவீர்கள்!” என்று வேண்டினான் சம்பு.

கேள்விகள்:
  1. இறைவனிடம் நாம் ஏன் அன்பு கொள்ள வேண்டும்?
  2. விரும்பிய வண்ணமே அருளிய போதும் சம்பு ஏன் மகிழ்ச்சியற்றுப் போனான்?
  3. கடவுள் உன்னை “என்ன வேண்டும் என்று விரும்புகிறாய்?” என்று கேட்டால், உன் விடை என்னவாக இருக்கும்?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன