நல்ல அண்டை வீட்டான்

Print Friendly, PDF & Email
நல்ல அண்டை வீட்டான்

நம் உடலில் தோலின் நிறம் உலகின் பல பாகங்களில் வசிப்ப வர்களுக்கு நம்மிடம் இருந்து மாறுபட்டிருப்பதைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். சில இடங்களில் கருப்பாகவும், பழுப்பாகவும், நிறம் அமைந்திருக்கிறது. மற்ற இடங்களில் வெள்ளை நிறமாக இருக்கிறது. அவரவர்கள் பிறந்த போதே அங்ஙனம் பிறந்தனர். இடையில் ஏற்படும் மாறுதல் அல்ல அது.

மற்றவரைவிட தனிப்பட்ட மாறுபாடு கொண்ட நிறமுள்ள தோலை நீ பெற்றிருந்தால் அவர்களைவிட மேலானவனாகி விடுவாயா? வெள்ளை நிறமுள்ள ஒருவன் கருமை நிறமுள்ளவனை விட உயர்ந்தவன் என்று நினைக்க முடியுமா? இதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?

பேரறிவாளராகிய, பெரும் போதனையாளராகிய, ஏசு கிறிஸ்துவின் அறிவுரைகளைக் கேட்டால், நாம் எல்லோரிடமும் சமமாக அன்பு பூண்டிருக்க வேண்டும் என்று உறுதி கொள்வோம். எந்த நாட்டிலிருந்து ஒருவன் வந்துள்ளான் என்பதிலோ, அவனுடைய நிறம் என்ன என்பதிலோ, “அன்பு” என்பது ஒரு வேறுபாடும் கொள்வதில்லை. எல்லா வகையினரான மனிதர்களையும் நாம் அன்போடு பார்க்க வேண்டும். இதையே ஏசு போதித்தார்.

ஒரு நாள், யூதன் ஒருவன் ஏசுவிடம் வந்து சிக்கலான கேள்வி ஒன்றைக் கேட்டான். ஏசுவுக்கு அதன் விடை தெரியாது என்று அவன் எண்ணியிருந்தான். அவன் கேட்டது, “நான் என்றென்றும் வாழ்ந்திருக்க என்ன செய்ய வேண்டும்?” என்பதேயாகும். அந்த பெரிய ஆசிரியருக்கு இது மிக எளிதான கேள்வி! ஆனால் தாமே அதற்கு விடை கூறிவிடாமல், அவரும் அவனை ஒரு எதிர்க்கேள்வி கேட்டார். “கடவுளுடைய கட்டளை, நாம் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறது” என்றார்.

அவன் அதற்கு, ”கடவுளுடைய சட்டம், மனப்பூர்வமாக நீ உன் தெய்வமான ஜெகோவாவை நேசிக்க வேண்டும். உன் அண்டை வீட்டானை உன்னை நேசிப்பது போலவே நேசிக்க வேண்டும் என்று கூறுகிறது.” என்று பழமொழி சொன்னான்.

“நீ சரியாக விடைச் சொல்லி விட்டாய். இதை செயல் படுத்தி வா! நீ நிலையான வாழ்வுப் பெறுவாய்” என்றார் ஏசு.

ஆனால் அந்த மனிதனோ யாரிடமும் அன்பு செலுத்த விரும்பவில்லை. அதனால் எப்படியாவது அதிலிருந்து தப்புவதற்கு முயன்றான். ஏசுவிடம், “உண்மையில் என் அடுத்தவன் என்பவன் யார்?” என்று கேட்டான். அதற்கு விடை என்னவாக இருக்கும்? உண்மையில் அண்டை வீட்டான் என்பது யார்? “உன் அடுத்த வீட்டார் என்பது உன் நண்பர்களே” என்று ஏசு சொல்லி விடுவார் என்று அவன் விரும்பினான் போலும். அப்படியானால் திரளாக உள்ள மற்றவர்களைப் பற்றி என்ன நினைப்பது? அவர்களும் அடுத்துள்ளவர்கள்தாமே! அவனுடைய கேள்விக்கு ஏசு ஒரு சிறுகதைச் சொன்னார். அது ஒரு யூதனையும் ஒரு சமாரிட்டனைப் பற்றியும் ஆன கதையாகும். அது பின்வருமாறு நிகழ்ந்தது. ஒரு மனிதன் ஜெருசலம் நகரத்திலிருந்து ஜெரிக்கோ நகரத்துக்குப் போய்க் கொண்டிருந்தான். அவன் ஒரு யூதன். அவன் அங்ஙனம் போய்க் கொண்டிருந்த போது திருடர்கள் திடீரென அவன் மேல் பாய்ந்தனர். அவனைக் கீழே தள்ளி விட்டு அவனது பணத்தையும், உடைகளையும் பறித்துக் கொண்டனர். அவனை அடித்த தில் அவனுக்குப் பாதி உயிர் போய் விட்டது எனலாம். அப்படியே அவனைச் சாலை ஓரத்தில் போட்டுவிட்டு களவாடிய பொருட்களுடன் சென்று விட்டனர். சாலையின் மறுபுறம் ஒரு பாதிரியார் சென்றார். அவர் அவனைக் கண்டும் காணாதது போல நிற்காமல் போய் விட்டார். அவனுக்காக அவர் ஓர் உதவியும் செய்யவில்லை. மற்றொருவர் இறையுணர்விலும் ஆன்மீகத்திலும் மிகவும் ஈடுபட்டவர், அந்த சாலை வழியே வந்தார். அர் லெவிட் இனத்தைச் சேர்ந்தவர். ஜெருசலம் கோவிலில் பணியாற்றுபவர். அவராவது அடிப்பட்டவனுக்கு உதவ நின்றாரா? இல்லை! பாதிரியார் செய்ததைப் போலவே அவரும் செய்து விட்டார். துன்புருகிறவனுக்கு ஓர் உதவியும் செய்ய அவர் முன் வரவில்லை. அவர் செய்தது சரியான செயல் என்று எப்படி கூறுவது? இறுதியாக ஒரு சமாரிட்டன் சாலை வழியே வந்தான். கடுமையாகத் தாக்கப்பட்டு படுத்துக் கிடந்த யூதனை அவன் பார்த்தான். பெரும்பாலும் சமாரிட்டன்களும் யூதர்களும் ஒருவரையொருவர் விரும்புவதில்லை. அதனால் இப்போது வந்த சமாரிட்டனும் ஓர் உதவியும் செய்யாமல் அவனை அப்படியே விட்டுச் சென்று விடுவானா? தனக்குள், ”நான் ஏன் ஒரு யூதனுக்கு உதவி புரிய வேண்டும்? நான் அடிப்பட்டுக் கிடந்திருந்தால் அவன் எனக்கு உதவுவானா?” என்று சொல்லிக் கொள்வானா?

நல்லது, இந்த சமாரிட்டன் அப்படிப்பட்டவன் அல்ல. சாலை ஓரத்தில் கிடந்தவனைச் சென்று பார்த்தான்.அவனுக்காக மிகவும் பரிதாபப்பட்டான். அந்த நிலையில் அப்படியே அவனை ஒதுக்கிச் சென்று அனாதைப் போல சாவதற்கு விட மாட்டான் அவன்.

Samaritan caring the wounded Jew

அதனால் சமாரிட்டன் தன் ஒட்டகத்தின் மீதிருந்து இறங்கினான். அந்த மனிதனை அணுகினான். அவனுடைய புண்களைத் துடைத்து விட்டான். அவற்றின் மேல் எண்ணையும் திராட்க்ஷை சாறும் விட்டான். அவை புண் விரைவில் நலமுற உதவுவன. அந்தப் புண் களுக்குத் துணியைக் கிழித்துக் கட்டுகள் போட்டான். பின்னர் அவனை மெதுவாகத் தூக்கி வந்து, ஒட்டகத்தின் மீது அமர்த்தினான். மெதுவாக இருவரும் பயணம் சென்றனர். ஒரு சிறு உணவு விடுதியின் முன் வந்து நின்றனர். அங்கு ஓர் அறை எடுத்து, அந்த யூதனை அதில் தங்க வைத்தான். தானும் உடன் தங்கி அவனை அன்போடு கவனித்துக் கொண்டான். ஏசு தன்னிடம் கேள்வி கேட்டு, இதுவரை நின்று தன்னிடம் பேசிக் கொண்டிருந்தவனிடம், “சாலை வழியே சென்ற மூன்று பேரில் யார் நல்ல அண்டை வீட்டுக்காரன் என்று நீ நினைக்கிறாய் என்று கேட்டார். அதற்கான விடை என்னவாக இருக்கும்? அந்த பாதிரியாரா? அடுத்து வந்த லெவிட்டா ? இறுதியாக வந்த சமாரிட்டனா? அந்த மனிதன் உடனே, “சமாரிட்டன் தான் நல்ல அடுத்துள்ளவன். அடிப்பட்டவனுக்காக அங்கு நின்று உதவி, பரிவோடு கவனித்துப் பாதுகாத்தான்” என்று கூறினான். “நீ கூறியது மிகவும் சரியே. அதனால் போய் அதே போல நீயும் செய்து வா, ”என்று கூறினார். ஏசு—LUKE 10 ; 25—37 இது ஒரு அருமையான கதையல்லவா? நம்மை அடுத்துள்ளவர் யார் என்று தெளிவாக இந்த கதை நமக்கு உணர்த்துகிறது. நம்மை அடுத்துள்ளவர் என்பது நம்முடைய நண்பர்கள் மட்டும் அல்ல. நம் நாட்டைச் சேர்ந்தவர் மட்டுமல்ல எல்லா வகையான உலக மக்கள் அனைவருமே நம்மைச் சார்ந்துள்ளவர்கள் தாம்.

அதனால், யாராவது அப்படிப்பட்டவர்களைக் கண்டால் நீ என்ன செய்ய வேண்டும்? அவன் எப்படிப்பட்டவனாக, எந்த நாட்டைச் சேர்ந்தவனாக இருந்த போதிலும், அவனது நிறம் எங்ஙனம் உன்னுடையதிலிருந்து மாறுபட்டதாக இருந்த போதிலும் அவன் உன்னைச் சார்ந்துள்ளவனாகவே, உன் உதவி தேவைப் படுபவனாக இப்போது உள்ளான் என்று நினைவில் வைத்து அவனுக்கு உதவத் தயங்காதே. நீ உதவி புரிய இயலாத சிறுவனாக இருந்தால், என்னையோ, ஒரு காவல் துறையினனையோ, ஒரு பள்ளி ஆசிரியரையோ உதவிக்குக் கூப்பிட்டுக் கொள். சமாரிட்டன் செய்த உதவிப் போல அது அமையும்.

அந்த சிறந்த போதகர், அனைவரிடமும் அன்போடு நடக்கும்படி நம்மைப் பணித்துள்ளார். யாராய் இருந்த போதிலும் அவனுக்கு உதவ வேண்டும் என்று அவர் நம்மை விரும்புகிறார். அதற்காகவே அவர், நல்ல அடுத்துள்ளவனைப் பற்றிய கதையையும் எடுத்துக் காட்டிக் கூறியிருக்கிறார்.

கேள்விகள்:
  1. யூதர்கள் கேட்ட கேள்விகள் என்ன?
  2. கடவுளின் சட்டம் என்ன?
  3. பயணம் சென்ற யூதனுக்கு என்ன நேர்ந்தது?
  4. அந்த பாதிரியார் சரியாக நடந்து கொண்டாரா? லெவிட் செய்தது சரியான செயலா?
  5. யார் நல்ல நம்மைச் சார்ந்த நண்பன்?
  6. ஏன் அவன் நல்ல அடுத்துள்ளவன் என்று அழைக்கப் பெற்றான்?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன