இறை அருள்
இறை அருள்
வெகு நாட்களுக்கு முன்பு பாரீஸ் நகரத்தில் ஒரு செப்பிடு வித்தைக்காரன் இருந்தான். அவன் பெயர் பிரான்சிஸ். அவனுடைய தந்திர வேலைகள், மந்திர வேலைகள், செப்பிடு வித்தைகள் குழந்தைகளை மட்டுமின்றி பெரியவர்களையும் கவர்ந்து மகிழ்வித்தன.
தன்னுடைய நிகழ்ச்சிகளை முடித்தவுடன், பிரான்சிஸ் தன் தொப்பியை எடுத்துக் கொண்டு கூட்டத்தினரிடையே சுற்றி வருவான். அதில் காசுகளைப் போடுவர். கணிசமான தொகை சேர்ந்து விடும் அவனுக்கு. அன்று மாலை, அவன் கன்னிமேரி அம்மையார் கோவிலுக்குச் சென்று அன்றாட உணவிற்குத் தேவையான பொருள் கிடைத்ததற்காக நன்றி செலுத்தி வணங்குவான்.
ஒரு நாள் மாலை அந்த கோவிலில், சில துறவிகள் முழங்காலிட்டு அமர்ந்து கொண்டு உரத்த குரலில் கன்னிமேரியைப் புகழ்ந்து சில துதிப்பாடல்களை ஓதுவதைக் கண்ணுற்றான் அவன். அந்த புனிதமான காட்சி அவனது எளிய, தூய்மையான உள்ளத்தில் அன்னை மேரியிடம் அன்பு வெள்ளத்தை ஊற்றாகப் பெருக்கியது. அவன் தலையை நிமிர்த்தி அன்னை மேரியைப் பார்த்து, “மேரி அன்னையே ! எனக்கு இத்தகையப் பிரார்த்தனைத் துதிகள் ஏதுமே தெரியாதே! நான் தங்களை எங்ஙனம் மகிழ்விப்பேன்?” என்று வருத்தமான குரலில் கேட்டான்.
அவனுடைய உண்மையான பக்தியும் தூய்மையான உள்ளமும் அவனுக்கு விரைவில் ஒரு வழிகாட்டின. கோவிலை விட்டு சந்நியாசிகள் வெளியேறும் வரை அவன் பொறுமையாகக் காத்திருந்தான். அங்கிருந்த ஓசையெல்லாம், அடங்கிய பிறகு, மெதுவாக கோவிலுள் நுழைந்து, ஒருவரும் இடையில் புகுந்து தனக்குத் தொல்லை தராதவாறு அதன் பெரிய கதவுகளை மெதுவாக மூடிவிட்டான்.
பின்னர் தன்னுடைய நீண்ட பையிலிருந்து கத்திகள், கண்ணாடித் தட்டுகள் ஈயக்குண்டுகள் இன்னும் பலவற்றை வெளியில் எடுத்துப் பரப்பி நிதானமாகத் தனக்கு விருப்பமான செயலான செப்பிடு வித்தைகளைத் துவக்கினான்.ஒவ்வொரு வித்தை செய்து முடித்ததும் அவன், “மேரி அன்னையே! இந்த செப்பிடு வித்தை உங்களை இன்புறுத்தியதா?” என்று உற்சாகமாக உரத்த குரலில் மகிழ்ந்துகேட்டான் அவனது ஆரவாரக் கூச்சல், அந்தக் கோவிலின் அருகிலேயே குடியிருந்த ஒரு துறவியின் காதுகளில் விழுந்தது. என்ன, புதுப்புது சத்தமாகக் கேட்கிறதே! என்று வியந்தவராய்க் கோவிலுக்கு ஓடி வந்தார் அவர். கதவுகள் மூடியிருந்தன.அதனால் பெரிய சாவித்துவாரத்தின் வழியாகக் கூர்ந்து உள்ளே நோக்கினார். அங்ஙனம் பார்த்த அவர் அங்கு என்ன கண்டார்? பிரான்சிஸ் தலைகீழாக நின்று கொண்டு மேலே இருந்த பாதங்களால் இரண்டு பெரிய ஈயக் குண்டுகளை ஒன்று மாற்றி ஒன்றாகத் தட்டி வீசி எறிந்து, அவை கீழே விழ விழ மாறிமாறி தட்டிப் பந்தாடிக் கொண்டு இருந்தான். கூடவே, “மேரி அன்னையே! இது எப்படி இருக்கிறது? இதை நீங்கள் மிகவும் விரும்புகிறீர்களா?” என்று மகிழ்ச்சியோடு உரத்த குரலில் அன்னை மேரியைக் கேட்டுக்கொண்டும் இருந்தான்.
அப்போது எதிர்பாராத வகையில் ஒரு விபத்து நேர்ந்து விட்டது. அந்த ஈயக் குண்டுகளில் ஒன்று, பாதங்களிலிருந்து குறி தவறி கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் எகிறித் தலைகீழாக நின்றிருந்த அவனது நெற்றியை வலிமையோடு தாக்கி விட்டது. அடுத்த கணமே அவன் நினைவிழந்து விழுந்து விட்டான்.
இவையனைத்தையும் சாவித்துவாரம் வழியே பார்த்துக் கொண்டே இருந்த துறவி செய்வதறியாது செயலற்று நின்றார். பிரான்சிஸ் கீழே விழுந்த உடனே ஓர் ஒளி வெள்ளம் உள்ளே மேடையில் தோன்றியது. அந்த ஒளியிலிருந்து கன்னி மேரி வெளிவந்து மெதுவாகப் படிகளில் இறங்கி வந்தாள். பிரான்சிஸ் அருகே வந்து மண்டியிட்டு அமர்ந்தாள். அவளுடைய நீண்டு தொங்கிய பட்டு அங்கியின் ஓரத்தினால் அவனுடைய நெற்றியில் பொடித்திருந்த வியர்வையைத் துடைத்தாள். அன்னை மேரியைக் கண்ட பரவச உணர்வில் கதவுகளைத் திறந்து கொண்டு துறவி உள்ளே ஓடிவந்த மறு நொடியே அவள் மறைந்துவிட்டாள்.
“உள்ளத் தூய்மை பெற்றவர்களே இறைவனால் ஆசிர்வதிக்கப் பெறுகிறார்கள். ஏனெனில், அவர்கள் கடவுளின் கருணையை முழுமையாகப் பெற்றவர்களாவர்” என்று நினைத்துக் கொண்டார் அத்துறவி.
கேள்விகள்:
- துறவி பிரான்ஸிஸிடம் என்ன கற்றுக்கொண்டார்?
- உள்ளத்தூய்மையைப் பற்றி உன் சொந்தச் சொற்களில் விளக்கு.
- கடவுளை மகிழ்வுறுத்த நீ விரும்புகிறாய். அதற்காக நீ என்ன செய்வாய்?