பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் தெய்வீகப் பேருரையிலிருந்து

Print Friendly, PDF & Email
பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் தெய்வீகப் பேருரையிலிருந்து

குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு:

குருர் தேவோ மஹேஸ்வர:

குரு: ஸாக்ஷாத் பரம் ப்ரம்ம

தஸ்மை ஸ்ரீ குரவே நம:

குருவே பிரம்மா, குருவே விஷ்ணு, குருவே மஹேஸ்வரர், குருவே அனைத்தும். அனைவரும் தெய்வீகத்தின் திருவுருவங்களே. நீ பார்க்கும் அனைத்தும் தெய்வீக பிரபஞ்ச வடிவமே .அறியாமை என்னும் இருளை அகற்றுபவரே குரு. கு + ரு = குரு. கு = குணாதீதா = குணங்களைக் கடந்தவர். ரு = ரூபவர்ஜிதா = உருவங்கள் அற்றவர்.

இது இறைவனுக்கு மட்டுமே பொருந்தும். ஆதலால் குரு பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளாக அழைக்கப்படுகிறார். கடவுள் மட்டுமே உண்மையான குரு (சத்குரு). ஏனையோர் அனைவரும் ஆசிரியர்களே. வாழ்க்கையின் குறிக்கோளைத் தெளிவுபடுத்துபவரே குரு. தன்னை ஆத்மா என்று அறிவதே வாழ்க்கையின் குறிக்கோள் ஆகும்.

[ஸ்ரீ சத்யசாயி பாபாவின் தெய்வீக உரை, 20-7-1997.]

குருவே பிரம்மன் (அ) நான்முகன். அவரே படைப்புக் கடவுள். அவரே படைப்பு. படைக்கப்பட்ட அனைத்தும் அவரே. பிரபஞ்சம் முழுவதும் பிரம்மனே வியாபித்திருக்கிறார். எவர் பிரபஞ்சமயமாய் இருக்கிறாரோ அவரே குரு.

குருவே விஷ்ணு. விஷ்ணு என்பவர் யார்? விஷ்ணு அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்திருக்கிறார். செய்பவரும் (கர்த்தா) அவரே. செய்யப்பட்டவையும் அவரே. பிரபஞ்சமே ஒரு செயல். அந்தச் செயலைச் செய்பவர் கடவுளே. காரணத்திற்கும் விளைவிற்கும் பின்னே இருப்பது பேருணர்வாகிய கடவுள். இந்தப் பிரபஞ்சம் முழுவதும் விஷ்ணு சொரூபம். விஷ்ணுவே குரு.

குருவே மஹேஸ்வரர். இந்தப் பிரபஞ்சத்தை ஆட்சி செய்பவர் அவரே. பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் சரியாக இயங்க அவரே கட்டளை பிறப்பிக்கிறார். எடுத்துக்காட்டாக சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் இரண்டும் இறைவன் கட்டளைப்படியே நிகழ்கின்றன. அது போன்றே பருவங்களும், இரவு பகல் சுழற்சியும் நிகழ்கின்றன. பிசகின்றி ஒழுங்குடன் அனைத்தும் செயல்பட அவரே காரணமாகிறார். போதிப்பதனால் மட்டுமே ஒருவர் குருவாகி விட முடியாது.

குரு என்பவர் சர்வத்திலும் வியாபித்திருப்பவர். சர்வ வல்லமை வாய்ந்தவர். சர்வமும் அறிந்தவர். அவரே கடவுள். குருபூர்ணிமை என்பது களங்கமற்ற பூரணச் சந்திரனாகும். நமது மனமே சந்திரன் ஆகும். மனம் பரிபூரணமாக இருக்கிறபொழுது அது ஒளி வீசுகிறது. குருபூர்ணிமை என்பது குருவை வலம் வந்து (பிரதட்சிணம்) காணிக்கை தருவதல்ல. உண்மையான காணிக்கை எது? அன்பை வழங்குவதே உண்மையான காணிக்கையாகும். இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறார் என்று அறிந்திருப்பதே பிரதட்சிணம். இவ்வாறு புரிந்து கொண்டால் அனுதினமும் குருபூர்ணிமையே . ஒரே ஒரு குரு மட்டுமே இருக்கிறார். அவர் கடவுள். அவர் மீது ஆழ்ந்த பக்தியைச் செலுத்து.

[ஸ்ரீ சத்யசாயி பாபாவின் தெய்வீக உரை, 14-7-1992.]

முக்குணமும் மும்மூர்த்தியும்

விஷ்ணு, மஹேஸ்வரர் உருவம் அற்றவர்கள். மும்மூர்த்தி என்பது முக்குணங்களைக் குறிக்கிறது. பிரம்மா என்பவர் படைப்புத் தொழிலைச் செய்யும் நான்கு தலைகள் கொண்டவர் என்று புராணங்கள் கூறுகின்றன. இயற்கையே பஞ்சபூத சக்திகள். இயற்கையே மும்மூர்த்திகள். இயற்கையை இரண்டு விதமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

1. படைப்போடு தொடர்புபடுத்தி, 2. அன்றாட வாழ்க்கை அனுபவத்தோடு தொடர்புபடுத்தி.

படைப்போடு தொடர்புபடுத்தி பஞ்சபூத சக்திகளைச் சொல்லும் பொழுது, ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் என்று வரிசைப்படுத்த வேண்டும். மும்மூர்த்திகளை, ஈஸ்வரன், விஷ்ணு, பிரம்மா, என்று வரிசைப்படுத்த வேண்டும். அன்றாட வாழ்க்கை அனுபவத்தோடு தொடர்புபடுத்தி பஞ்சபூத சக்திகளைச் சொல்லும் பொழுது, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், என்று தலைகீழாக வரிசைப்படுத்த வேண்டும். மும்மூர்த்திகளை பிரம்மா, விஷ்ணு, ஈஸ்வரன் என்று வரிசைப்படுத்த வேண்டும்.

ஈஸ்வர தத்துவம் எதைக் குறிப்பிடுகிறது? ஈஸ்வர ஸர்வ பூதானாம் ஹ்ருத்தேசே அர்ஜுனா திஷ்டதி (ஓ! அர்ஜுனா! ஈஸ்வரன் அனைத்து ஜீவராசிகளின் இதயத்தில் வசிக்கிறார்). ஈஸ்வரன் என்பதற்கு இதயத்தின் தலைவர் என்பது பொருள்.

இதயத்திலிருந்து தான் மனம் தோன்றுகிறது. மனமே விஷ்ணு தத்துவம். விஷ்ணு சர்வ வியாபி. மனோ மூலம் இதம் ஜகத் (பிரபஞ்சத்துக்கு ஆதாரமே மனம்தான்). ஆதலால் மனதின் தலைவர் விஷ்ணு.

மனதில் இருந்து தான் வாக்கு (பேச்சு) வருகிறது. வாக்கு தான் பிரம்ம தத்துவம். ஸப்த பிரஹ்ம்மமயி (ஒலியே பிரம்மன்) என்றும் பிரம்மாவுக்கு பிறிதொரு பெயரும் உண்டு.

ஈஸ்வரன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகள் இதயம், மனம், வாக்கு ஆகியவற்றைக் குறிக்கிறார்கள். இதயம், மனம், வாக்கு ஆகியவற்றின் இணைப்பே ஆத்மா. ஆகவே, இவர்கள் மூவரும் குருவின் மூன்று உருவங்களாகக் கருதப்படுகின்றனர்.

குணங்களும் பிரபஞ்சமும்

குணங்கள் மூன்று. அவை சத்துவ குணம், ரஜோ குணம், தமோ குணம். பிரபஞ்சம் முக்குணங்களால் ஆனது. முக்குணங்கள் உள்ளவரை ஒருவருக்கு அறியாமை என்னும் இருள் இருக்கும். குரு என்ன செய்கிறார்? அறியாமை என்னும் இருளை முழுமையாக அகற்றுகிறார். ஜீவராசிகளில் முக்குணங்களின் விகிதாச்சார வேறுபாட்டினால், அளவற்ற வேற்றுமைகள் பிரபஞ்சத்தில் உள்ளன.

மும்மூர்த்திகளும் அவர்களது வண்ணங்களும்

குணங்களுக்கு வண்ணங்கள் உண்டு. சத்துவ குணம்– வெண்மை. ரஜோ குணம் – சிவப்பு. தமோ குணம்– கருப்பு .

ஈஸ்வரனின் குணம் சத்துவம். சத்துவ குணம் மாயைக்கு அப்பாற்பட்டது. யோக நித்திரை(அறிதுயில்)யில், சித் சக்தியை (தான் ஆத்மா ஏன்ற பூரண அறிவை)ப் பெற்று சுத்த ஆன்மாவாக ஈஸ்வரன் திகழ்கின்றார். ஆகவே சத்துவ குணம் கொண்ட ஈஸ்வர தத்துவம் வெண்மை நிறத்தைக் குறிக்கிறது.

விஷ்ணுவின் குணம் ரஜோ குணம். சங்கு, சக்கரம், கதை, தாமரை, தாங்கியவராக அவர் உருவகப்படுத்தப்படுகிறார். அலங்கார சொரூபன் என்றும் வர்ணிக்கப்படுகின்றார். விஸ்வாம்பரர் என்னும் நாமத்தைத் தாங்கியுள்ளார். பிரபஞ்சத்தைக் காப்பதும், ஆட்சி செய்வதும் அவரே. ராஜாவுக்குத் தேவை ரஜோ குணம். ஆகவே ரஜோ குணம் கொண்ட விஷ்ணு தத்துவம் செம்மை நிறத்தைக் குறிக்கிறது.

பிரம்மனின் குணம் தமோ குணம். தமோ குணமே அக்ஞானம் என்னும் இருள், என்னுடையது என்ற மமகாரம், அபிமானம் ஆகியவற்றை இது குறிக்கிறது. ‘நான்’, ‘என்னுடைய’ என்ற எண்ணமின்றி படைப்பு நடக்காது. நான் என்னுடைய என்பன தமோ குணத்தின் பண்புகள். தமோ குணம் கொண்ட பிரம்ம தத்துவம் கருமை நிறத்தைக் குறிக்கிறது.

உலக மாந்தர்களும் முக்குண வடிவங்களே. வித்தியாசமான விகிதாச்சாரத்தில் அவர்களிடம் முக்குணங்கள் அமைந்துள்ளன. ஆகவே ஒருவர் போல மற்றவர் இருப்பதில்லை.

[ஸ்ரீ சத்யசாயி பாபாவின் தெய்வீக உரை, குரு பூர்ணிமா அன்று, நாள் -29-07-1988]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: