ஹனுமான் சஞ்சீவி மலையை கொண்டு வருதல்
ஹனுமான் சஞ்சீவி மலையை கொண்டு வருதல்
மேகநாதன், இராவணனின் மகன் ஆவான். அவன் வானரர்கள் நகரத்தினுள் முன்னேறி வருவத்தைக் கண்டு மிகவும் சினமடைந்தான். அவன் ஒரு புகழ்பெற்ற போர் வீரன். அதனால் வானரர்கள் அவனுடைய கணக்கற்ற அம்புகளைக் கண்டு சண்டை போடும் வலிமையை இழந்தனர். லட்சுமணனும் மேகநாதனும் போரிடும் போது, மேகநாதன், பிரம்மாவினால் அன்பளிப்பாகக் கிடைத்த மிகவும் வலிமை வாய்ந்த சக்தி ஆயுதத்தை லட்சுமணனின் மார்பை நோக்கிச் செலுத்தினான். அந்த ஆயுதம் லட்சுமணனைத் தாக்கவே லட்சுமணன் மயங்கி நிலத்தில் விழுந்தான். ஆனால் ஹனுமான் அவனை இராமரிடம் தூக்கிச் சென்றான். பிறகு ஹனுமான், இலங்கையின் மருத்துவன் சுஷேணனின் வீட்டிலிருந்து, அவனைத் தூக்கி வந்து இராமர் முன் நின்றான். சுஷேணன் குறிப்பிட்ட மூலிகை மருந்து சஞ்சீவி மலையில் தான் உள்ளது என்றும், லட்சுமணனை காப்பாற்ற அது தான் தேவை என்றான். அதனால் ஹனுமான் உடனே துரோண மலைத்தொடர்ச்சியின் எல்லையிலிருந்து சஞ்சீவி மலையை அடைந்து அந்த மூலிகையைத் தேடினான். அங்கிருந்த மலையில் பல் வேறு மூலிகைகள் இருந்ததால் ஹனுமானால் அந்த மூலிகையை அடையாளம் காண முடியவில்லை. அதனால் அந்த சஞ்சீவி மலையையே பெயர்த்து தன் உள்ளங்கையில் வைத்து ஆகாய மார்கமாகத் தூக்கி வந்தான்.
குருமார்கள் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டியது :
ஹனுமான் ஆற்றல் மிகுந்த உடல் வலிமையை மட்டுமல்லாது, ஞானமும், புத்தி கூர்மையும், துரிதமாக சந்தர்ப்பங்களை புரிந்துகொள்ளும் திறமையும் உள்ளவர். மருத்துவர் கூறி அனுப்பிய மூலிகையைத் தேடி சஞ்சீவி மலைகளில் அலைந்த போது மருத்துவர் குறிப்பிட்ட மூலிகை எது என்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆதலால், என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டு வெறுமனே அமர்ந்திருக்கவில்லை. துளி நேரமும் வீணாக்காமல் உடனடியாக மாற்று யோசனை செய்து சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்துக்கொண்டு லங்காவிற்கு விரைந்தார். ஏனென்றால் அந்த சமயம் ‘நேரம்’ தான் அதிக முக்கியத்துவமாக இருந்தது. இந்த சமயோஜித புத்தியினால் உரிய நேரத்திற்குள் லக்ஷ்மணனின் உயிரையும் காப்பாற்ற முடிந்தது. மேலும் கிடைத்தற்கரிய ஸ்ரீ ராமரின் ஆசிகளையும் பெற முடிந்தது. இதேபோல நமக்கும் ஏதேனும் சங்கடம் நேர்ந்தால் உடனடியாக முடிவு எடுப்பதற்கு தயங்காமலும், நேரத்தை வீணடிக்காமலும், கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டு மாற்று வழிகளைத் தேட வேண்டும்.
கற்றுக்கொள்ள வேண்டிய நீதி: வீணாக்கப்பட்ட நேரம் , வீணாக்கப்பட்ட வாழ்க்கைக்கு ஒப்பாகும்.
ஹனுமான் இலங்கையை அடைந்ததும் சுசேஷணன் அதிலிருந்து மூலிகையை எடுத்து மருந்து தயாரித்து லட்சுமணனுக்கு கொடுக்க லட்சுமணனும் மயக்கத்திலிருந்து விடுபட்டான். இராமர் மிகவும் சந்தோஷமாக லட்சுமணனைத் தழுவிக் கொண்டார். இராமர் சுஷேணனை ஆசீர்வதித்து அவனுடைய வழியில் எந்த அபாயம் நேரிட்டாலும், தான் அவனை பாதுகாப்பதாகக் கூறினார்.
குருமார்கள் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டியது, நல்ல செயல்களுக்கு எப்போதும் வெகுமதி கிடைக்கும். மேலும் நாம் செய்யும் ஒவ்வொரு நற் செயல்களும் சுவாமியை சந்தோஷப்படுத்தும்.
கற்றுக்கொள்ள வேண்டிய நீதி:
மானவ(மனித) சேவையே மாதவ சேவை / கடவுளை இன்புறச்செய்ய, மனிதனை இன்புறச்செய்.