ஹரி (4) ஸ்மரண – மேலும் படிக்க

Print Friendly, PDF & Email
ஹரி ஹரி ஹரி ஹரி ஸ்மரண கரோ – மேலும் படிக்க
ஹரி

ஹரி என்றால் நீக்குபவர் அல்லது அழிப்பவர் என்று பொருள் என்று பாபா கூறுகிறார்.. ஏனெனில், அவர் தான் நமது ஆன்மீகக் கட்டுப்பாடு மற்றும் சாதனைகளின் வழியில் உள்ளத் தடங்கல்களைக் களைந்தெறிகிறார். ஹரி என்ற சொல்லுக்கு பச்சை வண்ண மேனியுடையவர் என்றும் ஒரு பொருள் உண்டு. ஏனெனில், அதன் மூலச் சொல்லான “ஹரா” என்றால் பச்சை என்று அர்த்தம். கிருஷ்ணர் மகாபாரதத்தில், “ என்னுடைய இந்த மேன்மையானப் பசுமை நிறத்தினால்தான் நான் “ஹரி” என அழைக்கப்படுகிறேன்” என்று கூறினார். இதன் உள்ளர்த்தம் என்னவென்றால், “ பசுமைக் காட்சி நம் மனதிற்கு அமைதியைக் கொடுக்கிறது “ என்று பொருள். அதே போல், பச்சை வண்ணனாகிய ஹரியை நினைத்தால் நம் ஆத்மா அமைதி அடையும்.

முரளி

முரளி என்பது பகவான் கிருஷ்ணர் இசைக்கும் புல்லாங்குழலைக் குறிக்கிறது. அந்த முரளி அல்லது மூங்கிலாலானப் புல்லாங்குழலை பகவான் கிருஷ்ணர் தன் உதடுகளில் வைத்து இசைக்கும்போழுதுக் கோபிகைகள், கோபாலர்கள், பசுக்கள், மரஞ்செடிகள் மற்றும் இவ்வுலகில் உள்ள அனைத்துயிர்களையும் மெய் மறக்க வைக்கும் ஒரு தெய்வீக ஒலி வெளி வருகிறது. பகவானின் செவ்விதழ்களில் அமர்ந்து இப்படி ஒரு ஆனந்தமான ஒலி எழுப்பிய அந்தப் புல்லாங்குழல் பெற்ற சிறப்புத் தகுதி தான் என்ன?. புல்லாங்குழல் , வெறுமையாகவும், நேராகவும், எளிமையாகவும் இருக்கிறது என்று பாபா கூறுகிறார். அதாவது, புல்லாங்குழல் , அஹங்காரமற்ற வெறுமை, வளைவுநெளிவில்லாத நேர்மை, பகட்டில்லாத எளிமை ஆகியவற்றைக் கொண்டது ஆகையால், பகவான் நம்மை, அந்தப் புல்லாங்குழல் போல் எளிமையாகவும், அழகாகவும், அகங்காரமற்றும் இருக்கவேண்டுமென்று அவரைப் பிரார்த்தனை செய்யச் சொல்கிறார். நம் அகங்காரத்தை வேரோடு அழிக்கச் சொல்கிறார்.

மாதவா

மாதவா என்னும் சொல் “ மா” மற்றும் “தவா” என்ற சொற்களிலிருந்து வருகிறது. “மா” எனும் சொல், சகல ஐஸ்வர்யங்களும் அளிக்கும் தேவி லக்ஷ்மியைக் குறிக்கிறது. “தவா” என்றால் பதி என்று பொருள். பகவான் கிருஷ்ணர், லக்ஷ்மி தேவியின் பதியாகிய பகவான் விஷ்ணுவின் அவதாரம் ஆவார். அதனால்தான் நம் புராணங்களின்படி அவருக்கு மாதவா என்ற நாமம் வந்தது. இதன் உள்ளர்த்தம் என்னவென்றால், இங்கு ‘ லக்ஷ்மி தேவி ‘ என்று நாம் குறிப்பிடுவது பகவானிடமிருந்து என்றும் பிரிக்க இயலாத இயற்கை அல்லது ‘ ப்ரக்ருதி ‘ யைத்தான். ஆகவே, இந்த இயற்கையின் அதிபதியும், உலகப் படைப்புகளின் ஆதாரமும் ஆகிய பகவானை மாதவா என்றழைக்கிறோம்.

முரஹரா

“முரஹரா” என்றால் “முர” என்ற அசுரனை வதம் செய்தவர் என்று பொருள். ஸம்ஸ்க்ருதத்தில் “முர” என்றால் மூடுவது எனப் பொருள். நாம் அனைவரும் நம் அறியாமை என்னும் இருளால் மூடப்பட்டுள்ளோம். நாம் என்பது நம் உடல்தான் என்று நினைக்கிறோம். ஆனால், நாம் இந்த உடலுக்கும் மேலான ஒன்றாக உள்ளோம். உண்மையில் நாம் என்பது நம் ஆத்மாவைக் குறிக்கும். எனவே, அசுரன் முரா என்று இங்கு குறிப்பிடப்படுவது நம் அறியாமையைக் குறிக்கும் . பகவான் கிருஷ்ணர் நம் அறியாமை இருளை நீக்கி நமக்கு விழிப்பூட்டுவதால் அவரை முரஹரன் என்றழைக்கிறோம்.

கிரிதாரி

“கிரி” என்றால் மலை, “தாரி” என்றால் அதைத் தாங்கிப் பிடிப்பவன். பகவான் மலையைத் தாங்கி பிடிப்பது இரண்டு முறை நடந்திருக்கிறது. ஒன்று, மந்தர மலையை மத்தாக்கி பாற்கடலைக் கடைந்தபொழுது ஒரு ஆமை உருவெடுத்து அந்த மலையைத் தாங்கி பிடித்தார். இந்த லீலையால் அவர் நமக்கு உணர்த்தும் பாடம் என்னவென்றால், ஆன்மீக சாதனையில் ஈடுபட்டிருக்கும் ஒருவன் பக்தி நிரம்பிய தம் இதயக் கடலைக் கடைந்தால், அப்பொழுது மந்தர மலையைத் தாங்கியது போல் அவனுடைய உள்ளத்தையும் தாங்கிப் பிடிப்பார்.

“மனமும் இதயமும் கடையப் படும்போது இறைவன் நமக்குத் துணையிருப்பார். இவை எப்படி கடையப்படுகின்றன? ஸ்ரவணம் மற்றும் மனனம் வாயிலாக. அதாவது, கற்றல் மற்றும் பிரதிபலித்தல். இறுதியில் நாம் பெறுவது அழியாத்தன்மை அளிக்கும் அமிர்தம். மற்றொரு முறை, பகவான் கோவர்த்தன மலையைத் தூக்கிக் குடைப் பிடித்தார். கோகுலத்தில் மக்களனைவரும் மழைக் கொடுக்கும் கடவுளாகிய இந்திரனை வழிபடும் வழக்கம் கொண்டிருந்தனர். குழந்தைக் கிருஷ்ணன் ஒருமுறை இந்திரனுக்குப் பூஜை செய்வதை நிறுத்திவிட்டு அதற்குப் பதில் கோவர்த்தன மலைக்குப் பூஜை செய்யுமாறு நந்த கோபரை வற்புறுத்தினார்.. கோபமடைந்த இந்திரன் அந்தக் கிராமத்தில் பெரும் மழை பெய்ய வைத்தான். கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன மலையைத் தூக்கிக் குடை போல் பிடித்து கிராம மக்கள் அனைவரையும் அக்குடைக்குள் வந்து அடைக்கலம் புகுமாறு அழைத்தான். தொடர்ந்து 7 நாட்கள் இவ்வாறு குடைப் பிடித்தான். பகவான் மலையைத் தாங்கிக்கொண்டிருப்பது, அவர் நம் வாழ்வின் பாரங்களை எல்லாம் தாங்குபவர் என்பதைக் குறிக்கிறது. அவர் சொல் கேட்டு, அவரிடம் சரணடைந்து, அவருக்குக் கீழ்ப்படிந்து நடப்போமேயானால், அவர் நம் பாரம் சுமப்பார். நம் உள்ளத்தை ஆட்கொண்டவனும், மலைபோல் உள்ள தடைகளை எல்லாம் எளிதில் களைபவனும் மதுராவின் இறைவனுமாகிய கிருஷ்ணனை எப்பொழுதும் அடியவர்களுக்காகவே இருப்பவனை நாம் இங்கு ஆராதிப்போம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: