இதயப்பூர்வமான பிரார்த்தனை

Print Friendly, PDF & Email
இதயப்பூர்வமான பிரார்த்தனை

The three Christian hermits simple prayers

பரபரப்பான உலகத்திலிருந்து தொலைதூரத்தில் இருந்த ஒரு தீவில் மூன்று கிறிஸ்தவத் துறவிகள் வசித்து வந்தனர். அவர்கள் பெரும்பான்மையான நேரத்தைக் கடவுளை நினைப்பதிலும் அவரைப் பற்றிப் பேசுவதிலும் அவர் புகழ் பாடுவதிலும் செலவழித்து வந்தனர். பைபிளில் கூறியுள்ள பரமண்டலத்திலிருக்கும் பரமபிதாவைப் பற்றியும், அவரது திருமகனாரைப் பற்றியும் புனிதமான ஆவிகளைப் பற்றியும் படிப்பதில் மிக்க ஆர்வமாக இருந்தனர். மிக எளிய மனத்தினராக இருந்த அவர்கள் கடவுளிடம் வேண்டிக் கொண்டு செய்த இயல்பானப் பிரார்த்தனை,” தெய்வமே! நாங்கள் மூன்று பேர் தாங்களும் அதே போல மூவரே, எங்கள் மீது கருணை காட்டுங்கள்” என்பதேயாகும்.

Bishop teaches number of prayers

இறைவன் அவர்களது சிறிய எளிய வேண்டுகோளினால் மகிழ்ந்து போனார். அதனால் அவர்களது அன்றாடத்தேவைகளை நன்கு கவனித்துச் செய்து வந்ததோடு, அவர்களுக்கு நேரக்கூடிய ஆபத்துகளில் இருந்தும் அவர்களைக் காப்பாற்றி வந்தார். அவர்களுக்கு பசி எடுத்த போதெல்லாம் பழங்களும் பாலும் மேசைமீது வைத்திருக்கக் கண்டனர். வெயில் மிகுதியாக காய்ந்தபோதும் மழை பெய்தபோதும், அவர்கள் தலைகளுக்கு மேல் ஒரு கூரை படர்ந்து இருக்கும். அங்கிருந்த கொடிய விலங்குகளும் அவர்களிடம் நட்புரிமையோடு பழகின. ஏனெனில் அந்தத் துறவிகள் யாரையுமே வெறுக்கவில்லை. மாறாக எல்லோரும் கடவுளின் படைப்பே என்று அன்பு கொண்டிருந்தனர்.

ஒரு நாள் கடலோரப் பகுதியிலிருந்த நகரத்தில், ஒரு மதகுரு இந்த மூன்று துறவிகளைப் பற்றியும், அவர்களுடைய எளிய பிரார்த்தனையைப் பற்றியும் கேள்விப் பட்டார். “பைபிளைக் குறித்தும், இறைவனது அறிவுரைகளைக் குறித்தும் அவர்கள் சரியாகப் புரிந்து கொண்டிருக்க மாட்டார்கள். நான் அங்கு போய் அவர்களுக்குச் சரியான முறையில் தினமும் இறைவனிடம் கூறப்பட வேண்டிய பிரார்த்தனையைக் கற்றுக் கொடுக்கிறேன்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.

அங்ஙனமே அந்த மதகுரு ஒரு படகில் ஏறி அந்தத் தீவை அடைந்தார். மூன்று துறவிகளிடம், கடவுளுடைய முழு அன்பையும் கருணையையும் பெறுவதற்கு அவர்களது அன்றாட வேண்டுகோள் மிகக் குறைந்த அளவாகவும் எளிமையாகவும் இருக்கிறது என்று கூறினார். அதனால், அவர்களுக்குக் கணக்கற்றத் துதிப்பாடல்களைக் கற்பித்தார். காலையிலும் மாலையிலும் ஓத வேண்டிய ஒரு நீண்ட துதியும் சொல்லித்தந்தார். அதற்குள் பொழுது சாய்ந்து இருட்டத் துவங்கி விட்டது. மதகுரு வேகமாகச் சென்று படகில் ஏறித் தீவைவிட்டு நகரத்திற்குப் பயணமானார்.

படகு கொஞ்ச தூரமே சென்றது. அப்போது மதகுரு, தீவிலிருந்து ஒரு ஒளிக்கற்றை கரிய கடல் நீரைத்தாண்டி, தம்மை நோக்கி வருவதைக் கண்ணுற்றார். ஒளியில் பளபளத்த அலைகளை அவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஒரு நூதனமான நிகழ்ச்சி நடந்தது.

Three hermits walking on the waves

அந்த மூன்று துறவிகளும் கைகளைக் கோர்த்துக்கொண்டு பளபளக்கும் நீரின்மீது அவரை நோக்கி ஓடிவந்தனர். படகை அடைந்தவுடன் “தந்தையே, தாங்கள் கற்றுக் கொடுத்த நீண்ட துதியில் சில வரிகளை நாங்கள் மறந்து விட்டோம். தயவு செய்து அதை மறுபடியும் கூறியருள வேண்டுகிறோம்” என்று கேட்டனர். தம் கண்களையே நம்ப இயலாதவராக, மதகுரு வியப்பினால் செயலற்று சிலையாக நின்றார். அவர், இறைவன் ஏசு நாதர்தான் கடல் அலைகள்மேல் நடப்பவர் என்று படித்திருந்தார். இப்போது அந்தத் துறவிகளும் அதேபோல் அற்புதம் நிகழ்த்தியதைக் கண்ணாரக் கண்டார். உண்மையில் இந்தத் துறவிகள் தூய்மையான ஆன்மாக்கள் தாம். இறைவன் அவர்களை ஆசிர்வதித்து தம்மோடு இணத்துக் கொண்டார். அவர்களுக்கு நான் என்ன கற்றுக் கொடுக்க முடியும்? என்று தமக்குள் கூறிக்கொண்டார் அவர்.

அதனால் அவர் தலையை ஆட்டி, அடக்கமாகப் பணிவன்புடன், “அன்பின் சகோதரர்களே! உங்கள் சிறிய துதியைக்கொண்டே இறைவனைத் தொடர்ந்து துதித்து வாருங்கள். அத்தகைய உங்களுடைய எளிய துதியை இறைவனும் மிகவும் விரும்புகிறார்.” என்றார். அந்தத் துறவிகளிடமிருந்து உண்மையானப் பிரார்த்தனை என்பது, உதட்டிலிருந்து வருவதல்ல. மனத்தின் ஆழத்திலிருந்து உருவாகும் ஒன்று என்று அந்த மதகுரு கற்றுக்கொண்டார்.

கேள்விகள்:
  1. மதகுரு செய்த தவறு என்ன?
  2. துறவிகளிடமிருந்து அவர் கற்ற பாடம் என்ன?
  3. நீ எப்போதும் இறைவனிடம் கூறும் ஒரு துதியை எழுது. அது உண்மையான துதி என்று நீ சொல்ல இயலுமா? விளக்க:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன