நமோஸ்துதே என்பதின் உட்கருத்து

Print Friendly, PDF & Email
நமோஸ்துதே என்பதின் உட்கருத்து

பண்டைய பாரத கலாச்சாரம் மற்றும் ஆன்மீகமுறையின்படி, சம்பிரதாய முறையில் பிறருக்கு வணக்கம் தெரிவிக்கும் பொருட்டு அவரிடம் ‘நமோஸ்துதே’ அல்லது ‘நமஸ்தே’ என்று சொல்லும் பொழுது இரண்டு கரங்களையும் மார்பின் முன் சேர்த்து அவர்முன் தலை வணங்க வேண்டும்.

இவ்வாறு வணக்கம் தெரிவிப்பது, “நம் மனங்கள் ஒன்று சேரட்டும்” என்பதைக் குறிக்கிறது. தலை வணங்குதல், அன்பு, மரியாதை மற்றும் பணிவை உணர்த்துகிறது. என்னுள் இருக்கும் தெய்வீகமும், உம்முள் இருக்கும் தெய்வீகமும் அனைவரினுள்ளும் உள்ளது, எனும் கருத்தை வலியுறுத்துகிறது. இந்த வணக்கம், ஒருவர் நமக்கு இளையவராகவோ, நம் வயதினராகவோ, நமக்கு மூத்தவராகவோ, நம் நண்பராகவோ அல்லது ஏன் நமக்கு அந்நியராகவோ இருப்பினும் கூட அனைவருக்கும் பொருந்தும். இந்தப் பழக்கம் எப்படித் தோன்றிற்று? ஒரு சுவாரசியமான கதையை இப்பொழுது பார்க்கலாம். இமாலயத்தில் ஒரு மாமுனிவரும், அவரது சீடர்களும் ஒரு ஆசிரமத்தில் வசித்துக் கொண்டிருந்தனர். சீடர்கள் முனிவரது ஞானத்தைக் கண்டு மட்டுமல்லாது, அனைவரிடமும் அவர் காட்டும் அன்பு மற்றும் இரக்கத்தினாலும் அவரை மதித்து வந்தனர். தனது இரக்க குணத்தால் அவர் பெரும்பாலும் ஆன்மீகத்தில் பக்குவப்படாதவர்களைத் தன் சீடர்களாக ஏற்று வந்ததினால் சீடர்களுக்குள் அற்பமான கருத்து வேறுபாடுகள் மற்றும் சண்டைகள் இருந்து வந்தன. இது ஆசிரமத்தின் அமைதியைக் குலைத்தது.

ஒரு நாள், தான் மீண்டும் மீண்டும் அறிவுரைத்த பின்பும், அவர்களது பக்குவமற்ற நடத்தையைக் கண்டு மிகவும் கலக்கமுற்றார். ஆயினும் அவரது கருணை, யாரையும் அங்கிருந்து வெளியேற்றுவதைத் தடுத்தது. மாறாக, அவர் அதற்கான ஒரு தீர்வை வேண்டி, கடவுளிடம் உளமாரப் பிரார்த்தித்தார். பல நாட்கள் அவர் உண்ணா நோன்பிருந்தார்; நாட்களை தியானத்திலும் பிரார்த்தனையிலும் கழித்தார். சில நாட்களுக்குப் பிறகு, கடவுளின் தரிசனம் அவருக்குக் கிட்டியது. கடவுள் அவரிடம் ஏன் அவர் இவ்வாறு தன்னைத் தானே வருத்திக் கொள்கிறார் என்று வினவினார். அவர் அனைத்தையும் அவரிடம் விளக்கியுரைத்து, அவரை ஆசிரமத்திற்கு வந்து, சீடர்களின் மனதிலுள்ள பொறாமை மற்றும் கோபத்தை நீக்க வேண்டும் என்று கோரினார். கடவுள் அதற்கு இசைந்து, ஆசிரமத்திற்கு வந்து, எவருக்கும் தான் கடவுள் என்பது புலப்படாதவாறு, சீடர்களில் ஒருவராக மாறுவேடம் புனைந்து வருவதென்னும் ஒரு நிபந்தனையுடன், வருவதாகக் கூறினார்.

தனக்குக் கிட்டிய தரிசனத்தைப் பற்றியும், அவர்களுள் ஒருவராகக் கடவுள் வருவதாக அவர் எடுத்த முடிவைப்பற்றியும் முனிவர் தனது சீடர்களிடம் அறிவித்தார். சீடர்கள் மகிழ்ச்சியுற்றனர். ஆனால், எவருடைய உருவத்தில் கடவுள் வருவார் என்பதறியாதிருந்தனர். ஆகையால், பிறர் கடவுளின் மாறுவேடமாக இருக்கலாம் எனக் கருதி, அவர்கள் தமக்குள் மிகவும் மென்மையாகவும், பரிவுடனும் நடந்து கொள்ளத் தொடங்கினர்.

அவர்கள் இவ்வாறாக சில மாதங்கள் வாழ்ந்து வந்ததும், அவர்கள் இதயங்களிலும் ஆசிரமத்திலும் அமைதி நிறைந்தது. கடவுளின் ஆனந்தம் பொங்கும் சாந்நித்தியத்தை அவர்கள் தம் தூய மனதில் உணர்ந்தார்கள். ஒவ்வொருவரையும் கடவுள் என்றே நடத்தத் தொடங்கினர்! ஆசிரமம் முழுதும் நல்ல அதிர்வுகள் முழங்கத் தொடங்கின!
மாமுனியும் அவரது சீடர்களும் தமது அனுபவத்தைப் பிறருடன் பகிர்ந்து கொண்டு, அவர்களும் பிறரை மதித்து, பிறருள் உள்ள தெய்வீகத்தை மதித்து நடக்க ஊக்குவித்தனர். அப்பொழுதிலிருந்து, அனைவரும் ‘நமஸ்தே’ என்று கூப்பிய கரங்களோடு பிறருக்கு வணக்கம் தெரிவிக்கத் தொடங்கினர்.

பகவான் பாபா 2011, மார்ச் மாதம் 20-ஆம் தேதியன்று, செய்ததை நினைவிற்குக் கொண்டு வருதல் இத்தருவாயில் மிகவும் பொருத்தமாக இருக்கும். அவரது அச்செய்கை குல்வந்த் மண்டபத்தில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருந்தாலும், அதனை மீண்டும் நினைவிற்குக் கொண்டு வரும்போது ஏன் அவ்வாறு செய்தார் என்பது நமக்குப் புலப்படுகிறது. அவதாரத்தின் எந்த செய்கையும் பொருளற்றதல்ல; ஒவ்வொன்றும் பொருள் நிறைந்து, மானிடத்திற்கே முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

அந்த ஞாயிற்றுக்கிழமை, அதாவது மானிடம், பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்களின் அழகுத் திருவுருவைத் தரிசித்த கடைசி ஞாயிற்றுக்கிழமை. பஜனை முடிந்து, ஆரத்தியும் நடத்தப் பெற்றது. சாயி குல்வந்த் சபாமண்டபம் முழுதும், “ஸமஸ்த லோகா: ஸுகினோ பவந்து” எனும் பிரார்த்தனை முழங்கிக் கொண்டிருந்த அவ்வேளையில், ஸ்வாமி மெதுவாகத் தன் வலக் கரத்தை மேலே தூக்கினார். அந்தச்சில வினாடிகள் கூடவும், தனது கரத்தை மேலே தூக்கி வைத்திருப்பதற்காக தனது உடலின் சக்திக்கும் அப்பாற்பட்டு தன்னை வருத்திக் கொண்டிருந்தார். அவரது கரத்தில் சிறிது நடுக்கம் தெரிந்தது; அது நடுங்கிக் கொண்டிருந்தது. அவரது இடது கரமும் மிகுந்த பிரயத்தனத்துடன் மேலெழும்பியது. ஆனால், அவர் தன் இரு கரங்களாலும் எப்பொழுதும் ஆசீர்வதிக்கும்போது இருப்பதைப் போல் அவரது இடக்கரம் திறக்கப்படாமல், தூக்கப்படாமல் இருந்தது. இடக்கரம் மிகுந்த அவதியுடன் வலக்கரத்துடன் சேர்ந்தது. “ஓ, ஸ்வாமி தன் பலவீனமான வலக்கரத்தை, தன் இடக்கரத்தால் தாங்கிக் கொள்கிறார்”, என்று நினைத்தனர். ஆனால், இதன் பின், எதிர்பாராத, இதற்கு முன் நிகழாத ஒன்று நடந்தது.

ஸ்வாமியின் திறந்த கரங்கள் இரண்டையும் ஆசீர்வதிப்பதைப் போல் காண வேண்டும் என்று அனைவரும் நினைத்திருக்கும் பொழுது, தன் இரண்டு கரங்களையும் சேர்த்து நமஸ்தே என்று கூறுவதைப் போல் சேர்த்து வைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். ஆடவரின் பக்கம் இவ்வாறு செய்து, மெதுவாக தனது இடப்புறமாக மகளிரின் பக்கமும் இதனைச் செய்தார். ஸ்வாமியை திகைப்புடனும், குழப்பத்துடனும் அனைவரும் பார்த்துக் கொண்டிருந்த போதே, அவரது நாற்காலி நகர ஆரம்பித்தது. விரைவில் தனது காரில் ஏறி, வித்தியாசமாக எதுவுமே நடக்காததைப் போல் கிளம்பினார். அவதாரத்தின் பௌதிக உடல் நம்மை விட்டுச் சென்றதன் பின்பே, இந்நிகழ்ச்சியின் உட்பொருள் புரிகிறது. ஏனெனில், பொதுவாக பிறருக்கு மரியாதையுடன் வணக்கம் சொல்வதன் பொருட்டே நமஸ்தே சொல்லப்படுகிறது. இங்கே பகவான் நம்மைப் பார்த்து இவ்வாறு செய்தார்! நமது இதயத்திலும் மனதிலும் இந்த உபதேசம் நிரந்தரமாகப் பதிய வேண்டும் என்பதற்காகவே இதனைச் செய்தார் போலும்.

[Source:http://media.radiosai.org/journals/vol_11/01JUL13/Sai-Sadguru-the-preceptor-unparalleled-bhagawan-sri-sathya-sai-baba.htm]

பாபாவே கணேசர் என்பதைக் காட்டும் ஒரு நிகழ்ச்சி

ஸ்வாமி அம்ருதானந்தர், தனது குருவான திருவண்ணாமலை, ஸ்ரீ ரமண மஹரிஷி சமாதியடைந்த பிறகு பாபாவிடம் வந்தார். அம்ருதானந்தர் முதன்முறையாக பிரசாந்தி நிலையத்திற்கு வந்திருந்த பொழுது, பாபா அவரை, “அம்ருதம்” என்று அழைத்தார். அம்ருதானந்தர் இந்த அழைப்பில் இருந்த பழக்கப்பட்ட தோரணை மற்றும் அன்பினால் மிகவும் ஆச்சரியப்பட்டார். “நான் ரமண மஹரிஷியுடன் 17 வருடங்கள் இருந்திருக்கிறேன். அவர் மட்டுமே என்னை இவ்வாறு அழைத்திருக்கிறார். ஸ்வாமியின் குரலும், அவர் அழைத்த விதமும் அப்படியே மஹரிஷி அழைத்தது போலவேஇருந்தது!”, என்று அவர் கூறினார்.

பின்னர் பாபா, 85 வயதான ஸ்வாமி அம்ருதானந்தரிடம், அவருடைய ஏழாம் வயதில் 41 நாட்கள் செய்த கணபதி ஹோமத்தைப் பற்றிக் கேட்டார்! அந்த யாகத்தின் போது ஓதப்படும் நீண்ட மந்திரம், மற்றும் அதனை ஓதும் பொழுது ஒவ்வொரு முறையும் அவ்வேள்வித் தீயில் சமர்ப்பணம் செய்யப்பட்ட அனைத்து பொருட்கள், பற்றிய அனைத்து விவரங்களையும் ஸ்வாமி அம்ருதானந்தர் பகவான் பாபாவிடம் எடுத்துரைத்தார். பாபா அவரிடம் வெளியிட்ட மந்திரம், “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்” என்று துவங்கும். அவர் 41 நாட்களும் ஒரு நாளைக்கு ஆயிரம் முறை அந்த மந்திரத்தை ஜபித்ததாகவும், வேள்வித் தீயில் அவ்வளவு தேங்காய்களை இட்டதாகவும் பாபா அவரிடம் கூறினார். அந்த முதிர்ந்த சாதுவைக் கண்டு, “ஆனால் சாஸ்திரத்தின்படி அதற்கான பலன் என்ன?”, என்று பாபா வினவினார். பிழையில்லாமல் அந்த யாகத்தைச் செய்தால், ஹோம குண்டத்தில் பொன்னிறத்தில் பிரகாசமாக யானை முகக்கடவுளாக விளங்கும் கணபதியே தோன்றி, தன் துதிக்கையால் பூர்ணாஹுதியை ஏற்றுக் கொண்டு, தனது தரிசனத்தால் நீங்கா ஆனந்தத்தை அருள்வார் என்று கூறினார். அவருக்கு தரிசனம் கிடைத்ததா என்று அவரிடம் வினவினார். அதற்கு அவர், மந்திரங்களை பல முறை சொல்வதனால் மட்டுமே, ஒரு ஏழு வயது சிறுவனுக்கு தரிசனம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல என்று பதிலளித்தார். பாபா அவரைக் குறுக்கிட்டு, “இல்லை இல்லை. அந்த மந்திரம் மற்றும் அந்த யாகத்தின் பயனாகத் தான் நீ இப்பொழுது என்னிடம் வந்துள்ளாய். 78 ஆண்டுகளுக்குப் பிறகு, சாஸ்திரங்கள் குறிப்பிட்டுள்ள அந்தப் பலனை, இன்று நீ அடைவாய்”, என்று கூறினார்.

அவர் ஸ்வாமி அம்ருதானந்தரை தன்னை உற்று நோக்குமாறு கூறினார். அவர் அவ்வாறு செய்யும் பொழுது, சாஸ்திரங்கள் வர்ணிக்கும் பொன்னிறமான யானை முகக் கடவுள் கணபதியைக் கண்டார். இந்த தரிசனத்தைக் கண்டபின் அவர் ஆனந்தத்தில் திக்குமுக்காடி நான்கு நாட்கள் உணவு, நீர், தூக்கமின்றி இருந்தார்.

[Source: http://media.radiosai.org/journals/vol_09/01SEPT11/05_ganesh_chaturthi_1.htm]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன