இஸ்லாம்
இஸ்லாம்
இஸ்லாம் என்பது முகம்மது நபியால் (கி.பி. 570-632) தோற்றுவிக்கப்பட்டது. இஸ்லாம் என்ற அரபுச் சொல்லுக்கு சரணடைதல் (அ) பணிதல் என்று பொருள்.
முகம்மது நபியின் வாழ்க்கை
முகம்மது மெக்காவில் பிறந்த பொழுது அரேபியாவில் அமைதி இல்லாத சூழ்நிலை நிலவியது. அதன் குடிமக்கள் நாடோடிகளாகத் திரிபவர்கள். உருவ வணக்கம் செய்பவர்கள். அதாவது நட்சத்திரங்கள் மற்றும் கற்களை வணங்குபவர்கள். அரபு மக்கள் மத்தியில் பலவிதமான மதத் தொழுகைகளில் எந்த ஒற்றுமையும் இல்லாமல் இருந்தது. அங்கு ஒழுக்க மேம்பாடு அவசியமாக இருந்தது. இத்தருணத்தில் முகம்மது அங்கு தோன்றினார். கி.பி.570ஆம் ஆண்டு மெக்காவில் குரேஷ் என்ற குலத்தில் முகம்மது பிறந்தார். தந்தை அப்துல்லா பின் அப்துல் முத்தாலிப். தாய் ஆமீனா. தந்தையின் மரணத்திற்குப் பின் இவர் பிறந்தார். அவர் குழந்தையாக இருந்தபொழுது அவருடைய தாயார் ஆமீனாவும் இறந்தார். முகம்மது முதலில் அவருடைய தாத்தாவினாலும், பின்பு அவருடைய மாமா அபு தாலிப் என்பவராலும் வளர்க்கப்பட்டார்.
அவருடைய இருபத்தி ஐந்தாவது வயதில் கதீஜா என்ற பணக்கார விதவையின் ஒட்டகங்களைப் பார்த்துக் கொள்ளும் வேலையாளாகச் சேர்ந்தார். அவருடைய திறமையையும், நேர்மையையும் கண்ட கதீஜா அவரைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டார். அவள் முகம்மதைவிட பதினைந்து வயது மூத்தவள். இந்தத் திருமணத்தால் முகம்மது பதவியும், அந்தஸ்தும் நிறைந்த செல்வந்தரானார். ஆனால், திருமணத்திற்குப்பின் அவர் வியாபாரத்தில் கவனம் செலுத்தவில்லை. அவர் அடிக்கடி மலைகளிலுள்ள குகைகளில் தனியாக பிரார்த்தனை மற்றும் தியானம் செய்யத் தொடங்கினார்.
கி.பி.610 ஆம் வருடத்தில் ரம்ஜான் மாதத்தில் ஒருநாள் இரவு மெய் மறந்த நிலையில் இருந்தபொழுது கேபிரியல் என்ற தேவதூதர் சொன்னார்: உன்னுடைய கடவுளின் பெயரைத் திரும்பத் திரும்பச் சொல். அந்தக் கடவுள் உறைந்த இரத்தத்தில் இருந்து மனிதனைச் சிருஷ்டித்தார். உன்னுடைய கடவுள் வள்ளல் என்று பறைசாற்று. அவர்தான் மனிதனை உண்டாக்கி அவனுக்கு தெரியாதவற்றைக் கற்றுக் கொடுத்தார்.
முகம்மது மக்களை அநீதிகளில் இருந்தும் மூடநம்பிக்கைகளில் இருந்தும் வெளிக்கொணர்ந்து முன்னேறச் செய்வதற்கான செய்திகளைப் பரப்பினார். அவர் மெக்காவில் உள்ள மக்களால் குற்றம் சாட்டப்பட்டு மிகுந்த துன்பத்தையும் பொருட்படுத்தாது தனது பணிகளை விடாமல் தொடர்ந்தார். அவர் மெக்காவில் இருந்து மெதீனா ஓடினார். இந்த நிகழ்ச்சி ஹிஜிரா என்று அழைக்கப்படுகிறது. அங்கு அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அவர்கள் அவரது மதத்தையும் ஏற்றுக்கொண்டனர். முகம்மது அங்கு அரசராக ஏற்றுக்கொள்ளப்பட்டு புகழுடன் வாழ்ந்து வந்தார். தூதுச் செய்திகளைப் பரப்ப குழுக்கள் அரேபியா, எகிப்து போன்ற நாடுகளின் எல்லாப் பாகங்களுக்கும் அனுப்பப்பட்டன.
பிறகு முகம்மது மெக்கா சென்றார். இப்போது அவர் மதகுருவாக ஏற்றுக் கொள்ளப்பட்டார். மக்கள் அனைவரும் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்டனர். கி.பி.632ஆம் வருடம் முகம்மது கடைசி முறையாக மெக்கா புனித யாத்திரை சென்றார். அவர் மெதீனா திரும்பிய பிறகு பல நாட்கள் நோய்வாய்ப்பட்டார். ஒருநாள் அவர் மசூதிக்குச் சென்று தொழுது கொண்டிருக்கும் பொழுது இறந்து போனார். அவரைக் கேபிரியல் சொர்க்கத்துக்குக் அழைத்துச் சென்றதாக நம்பப்படுகிறது.
முகம்மதிற்கு இரண்டு மகன்களும், நான்கு மகள்களும் இருந்தனர். அபுபக்கர் என்பவர் முகம்மதுவிற்கு ஒரு நேர்மையான நண்பராக இருந்தார். அபுபக்கர் உமர் மற்றும் அலி ஆகியோர் கலீபா (முகம்மதுவின் பிரதிநிதி) பதவி வகித்தனர். அலி, முகம்மதுவின் மருமகன். உம்மையா காலீபாவுடன் நடந்த போரில் அலியின் மகன்களாகிய ஹசனும், ஹுசைனும் கொல்லப்பட்டனர். அவர்கள் இறந்த அந்த நாளை முஹர்ரம் என்று இரங்கல் நாளாகக் குறித்துள்ளனர்.
முகம்மது அமைதியையும், அன்பையும் பரப்பக் கூடிய இரக்கம் நிறைந்த மனிதராகத் திகழ்ந்தார். அவர் ஞானத்தின் இருப்பிடம், தன் எதிரிகளின் மனதையும் வென்றார். அவருக்குத் தனித்தன்மை வாய்ந்த அன்பு மனம் இருந்தது. கடவுளின் கட்டளைகளில் ஒன்றான ‘நீ உன்னை நேசிப்பது போல் சுற்றத்தாரையும் நேசி’ என்பதைக் கடைப்பிடித்தார்.
புனித நூல் – குரான்
இஸ்லாமியத்தின் புனித நூல் குரான். அது முகம்மதியர்களுக்கு கடவுளின் வார்த்தை. குரான் முகம்மதுக்கு கேபிரியல் என்ற தேவ தூதரால் வெளிப்படுத்தப்பட்டது. குரானில் தொடக்கம் மற்றும் சில பத்திகள் கேபிரியல் முகம்மதுவுக்கு கூறுவது போல் உள்ளது. மற்றவை எல்லாம் இறைவன் சொல்வது போல் உள்ளது. குரான் என்ற அரபுச் சொல்லுக்கு ‘ஓதுதல்‘ என்று பொருள். முகம்மது படிப்பறிவில்லாதவர். அவருடைய கடவுள் பற்றும் மற்றும் பரிபூரண சரணாகதியும், தெய்வீகச் செய்திகளைப் பரப்ப அவரை ஒரு கருவியாக்கின. முதலில் குரான் வாய்வழி வேதங்களாகத் தோன்றியது. நபிகள் அவற்றைத் தன்னுடைய சிஷ்யர்களுக்குக் கற்பித்தார். அவர் இறந்தபிறகு அவை முப்பது அதிகாரங்களாகத் தொகுக்கப்பட்டன. குரானில் ஒரு பகுதி நன்னடத்தை நெறிகளுக்கான வழிகாட்டியாகவும் வாழ்வின் கடமைகளை உணர்த்தவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கோட்பாடுகள்
இஸ்லாமியத்தின் அடிப்படைக் கருத்துக்களாவன: அல்லாவிடம் சரணாகதி மற்றும் அமைதியாக வாழ்தல். சரணாகதி அடைவது அமைதியைக் கொடுக்கிறது. ஒரு முகம்மதியன் அல்லாவிடம் தன்னுடைய ஆசைகளைச் சரணடையச் செய்கிறான். இஸ்லாமியர்கள் முகமனுரைகள் சொல்வதாவது:
ஸலாம் அலைக்கும் உஸ் ஸலாம் வா அலைக்கும் உஸ் ஸலாம்
இதன் பொருள் தங்களிடம் அமைதி நிலவட்டும். கடவுளிடம் அன்பு வளரும்போது அமைதிக்கு ஆழமான அர்த்தமுண்டு. அது உயர்ந்த அமைதியாகும்.
அல்லா என்பவர் உருவமற்றவர். ஆரம்பமும் முடிவும் இல்லாதவர். நிகரில்லாதவர். அல்லா எல்லாம் வல்லவர், எங்கும் பரவியுள்ளவர். எல்லாம் அறிந்தவர். அர்த்தமுள்ள வாழ்க்கை என்பது எந்தத் தயக்கமுமின்றி கடவுளை எண்ணங்களாலும் செயல்களாலும் சரணாகதி அடைவதே ஆகும். கடவுள் தானே தன் பக்தர்களை வழிகாட்டி பாதுகாக்கிறார்.
இஸ்லாம் ஐந்து முக்கியமான கொள்கைகளைத் தூண்கள் போலத் தாங்கி நிற்கிறது.
- கலீமா- கடவுள் ஒருவரே; முகம்மது அவரது தீர்க்கதரிசி.
- நமாஸ்- பிரார்த்தனை.
- ஜாகத்- ஏழைகளுக்கு தர்மம்.
- ரம்ஜான் நோன்பு- விரதம்.
- ஹஜ்- புனித மெக்கா யாத்திரை.
பிரார்த்தனை என்பது மனிதனையும் கடவுளையும் இணைக்கும் தங்கச் சங்கி- ஆகும். ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழவேண்டும்.
- ஸஹர்- மதிய நமாஸ்
- அஸர்- மதியத்திற்கும் சூரிய அஸ்தமனத்திற்கும் நடுவில் நமாஸ்
- மக்ரிப்- அஸ்தமனத்திற்குப் பின் நமாஸ்
- இஷா- படுக்கப் போகுமுன் இரவு நமாஸ்
ஒவ்வொரு நமாஸாம் பத்து நிமிடங்கள் ஓதுவதோடு ஒவ்வொரு முகம்மதியரும் இதை அவசியம் பின்பற்ற வேண்டும். ஒவ்வொருவரும் சிறிய பிரார்த்தனை கூறிக் கொண்டே தங்களுடைய கை, வாய், பல், முகம், கழுத்து, காது, கால்கள், முழங்கைகள் இவற்றைத் தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு சுத்தம் செய்வதற்கு வாஸா என்று பெயர். நமாஸ் ஓதும்போது நிற்கும் அல்லது உட்காரும் நிலை யோகாவுடன் தொடர்புடையது. எனவே, நமாஸ் மனம் மற்றும் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவது மட்டுமல்லாமல் உடலிலுள்ள நரம்புகளைச் சுத்தப்படுத்தி ஆரோக்கிய நிலையில் வைக்கிறது.
அன்பு மற்றும் தர்மம் மனிதனையும், கடவுளையும் சந்தோஷப்படுத்துகிறது. ஒருவர் மற்றொருவரைப் பார்த்து புன்முறுவல் செய்தால்கூட அதுவும் தர்மத்தைக் குறிக்கும் செயல்தான். விரதம் என்பது தன்னைத் தூய்மைப்படுத்தும் செயலாகும். காபீர் என்பது கடவுளை நம்பாதவர்களைக் குறிக்கிறது. அதாவது நாத்திகவாதி. ஜெஹாத் என்றால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஆயுதம் எடுத்தல் மற்றும் நல்ல காரணங்களுக்காக முன்னிற்றல். ஆனால், பிறரை இஸ்லாமிய நம்பிக்கையை ஏற்றுக் கொள்ள கட்டாயப்படுத்துவதற்காக அல்ல.
சுஃபி மதம்
சுஃபியிஸமும் இஸ்லாமியத்தில் பிறந்ததுதான். அது கடவுளிடம் மறைபொருளாக அன்பு செலுத்தும் மதமாகும். அது இந்து மதத்தைப் போலவே மறைபொருள் கொண்டது. சுஃபி என்றால் சுத்திகரிக்கப்பட்ட இதயம். அதுவே கடவுளின் இருப்பிடமாகும். அன்பும் ஏக்கமும் கொண்ட பக்தனுக்குக் கடவுள் மிக நெருங்கியவராக ஆகிறார். சுஃபிக்கு எல்லாமே கடவுள். அவன் யாரையும் வெறுப்பதில்லை. தீமை செய்பவர்கள், நாத்திகர்கள் ஆகியவர்களையும் வெறுப்பதில்லை.
நட்சத்திரம் பிறைச் சந்திரனிடமிருந்து விலகாதிருப்பது போல், ஈவும், இரக்கமும் உள்ள அல்லாவின் பெயரால், திடமான கடவுள் நம்பிக்கையில் இரு.